சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ புதிய தலைவராக ஜக்மோகன் டால்மியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ பொதுக் குழுக் கூட்டத்தில் ஜக்மோகன் டால்மியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்துக்குள் ஆண்டு பொதுக் குழுவைக் கூட்டி புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தில், மார்ச் 2-ம் தேதி ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ தலைவராக டால்மியா தேர்வு
பூசணிக்காய் உடைப்பது ஏன் ?
கூச்மாண்டன்… அரக்கர் குலத்தில் பிறந்த அரும்தவ புதல்வன். அரக்கர்களுக்கு உள்ள குல வழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான். அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவதுதான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள். புண்ணியதேவனே….. தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல்லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் நாராயணன். உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந்தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச்மாண்டன். சண்டைக்கும் தயாரானான். அது சரி…. அழிவு காலம் வந்து விட்டால், அறிவுதான் வேலை செய்யாதே. யுத்தத்தின் இறுதியில் வேர் அறுந்த மரம் போல் விழுந்தான். கூச்மாண்டா…. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன் பாவத்தின் சம்பளம். வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை. எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வரமாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியி ட்டான். சரி கேள்… என்ன வரன் வேண்டும்? நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும். இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையையும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது? பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலை படவில்லை. உங்கள் கையால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை. இறந்த பிறகாவது பிறருக்கு பயன் பட வேண்டும். அதற்க்கு நீங்கள் தான் அருள வேண்டும். சரி…. நீ பூசனிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோழமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம் ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ…… அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும். அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும். அதனால் இன்றும் கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள். கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைப்பது இதற்கு பிறகுதான். அந்த பூசணிக்காயை உடைத்தால் சகல தோஷமும் மறைந்து விடும்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: மார்ச் 16க்கு ஒத்திவைப்பு
புது தில்லி: சிபிஐ தொடர்ந்த ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. முன்னதாக, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், அவரது சகோதரர் கலாநிதி மாறனும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராயினர். மாறன் சகோதரர்கள் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சன் டைரக்ட் நிறுவனத்தின் நிர்வாகி சுவாமிநாதனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட மலேசியாவில் உள்ள 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்படாததால், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.
ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்: ஓட்டுநர் பலி
சென்னை: சென்னையில் ஆட்டோக்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஓட்டுநர் ஒருவர் பலியானார். சென்னை சேத்துப்பட்டு வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (60). ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று தனது ஆட்டோவை சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் ஓட்டி வந்தார். அதே சாலையில் எதிரில் அந்தோணிராவ் என்றபவர் ஆட்டோவை ஓட்டி வந்தார். இந்த 2 ஆட்டோக்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரண்டு ஆட்டோக்களிலும் பயணிகள் எவரும் இல்லை என்பதால் வேறு பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை. இருப்பினும், இரண்டு ஆட்டோக்களிலும் இருந்த ஓட்டுநர்கள் ராஜ்குமார், அந்தோணிராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் ஓட்டுநர் ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் அந்தோணிராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேசன் அரிசி கடத்தலில் பல்லாயிரம் கோடி இழப்பு : சி.பி.ஐ. விசாரணை கோருகிறார் ராமதாஸ்
சென்னை ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தில் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசி கடத்தப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதற்கான அரிசியில் 12 விழுக்காட்டுக்கும் கூடுதலான அரிசி கடத்தப்படுவதை சாதாரண விசயமாக ஒதுக்கிவிட முடியாது. தமிழகத்தில் நடைபெறும் அரிசிக் கடத்தல் தொடர்பாக தேசிய மாதிரிக் கனக்கெடுப்பில் தெரிய வந்துள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் இந்தக் குற்றச்சாற்றை பொருளாதார ஆய்வறிக்கை முன்வைத்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 லட்சம் டன் அரிசியில் 31.56 லட்சம் டன் அரிசி மட்டும் தான் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்றும், மீதமுள்ள 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.610 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரிசி அளவின் அடிப்படையில் பார்த்தால் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசியில் சுமார் 12 விழுக்காடு கடத்தப்பட்டிருக்கிறது. மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் அரிசி மானியத்திற்கான ரூ.3200 கோடியில் சுமார் 19% அளவுக்கு கடத்தல் நடைபெற்றிருக்கிறது. இது மிகப்பெரிய அளவிலான ஊழல் ஆகும். அரிசி கடத்தலைத் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்கள் துல்லியமானவை அல்ல என்றும், இதனால் இதை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது அரிசிக் கடத்தல் ஊழலை அடியோடு மூடி மறைக்கும் முயற்சி ஆகும். அரிசிக் கடத்தல் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்கள் அரிசிக் கடத்தலின் அளவைக் குறைத்து வேண்டுமானால் காட்டியிருக்கலாமே தவிர நிச்சயமாக அதிகரித்துக் காட்டியிருக்க வாய்ப்பு இல்லை. அதற்கெல்லாம் மேலாக கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல தமிழகத்தில் நடைபெறும் நியாயவிலைக் கடை அரிசி கடத்தல் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். எனவே. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் துல்லியத் தன்மையை காரணம் காட்டி இந்த ஊழலை மூடி மறைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் மொத்தம் 33,973 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில் எந்த நியாயவிலைக் கடைக்கு சென்றாலும் 20 ஆம் தேதிக்குப் பிறகு அரிசி வழங்கப்படாது. அதேபோல், சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை 10 ஆம் தேதிக்குப் பிறகு வாங்க முடியாது. காரணம் ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் எந்த அளவுக்கு அரிசி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமோ, அதில் 60% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல், பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் 50% அளவுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப் படுகின்றன. அப்படியானால் மீதமுள்ள பொருட்கள் கடத்தப்பட்டிருப்பதாகத் தான் கொள்ள வேண்டும். இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் அரிசி கடத்தல் மூலம் ரூ.1280 கோடியும், பருப்பு மற்றும் பாமாயில் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.697 கோடியும் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். இது பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விட பல மடங்கு அதிகமாகும். நியாயவிலைக் கடை பொருட்கள் கடத்தப்படுவதன் மூலம் அரசுக்கு ஓராண்டுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1977 கோடி என்றால், 4 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.7908 கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். நியாயவிலைக் கடை பொருட்கள் கடத்தல் தொடர்பான குற்றச்சாற்றுக்கள் உண்மையில்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு தான் உள்ளது. தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படவில்லை என்று தமிழக அரசு கருதுமானால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு குற்றமற்ற தன்மையை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று தான் மக்கள் நம்ப வேண்டியிருக்கும். என்று கூறியுள்ளார்.
மாணவர்களை பணம் காய்க்கும் மரங்களாக பல்கலைக்கழகங்கள் கருதக்கூடாது: ராமதாஸ்
சென்னை: கல்லூரி மாணவர்களை பணம் காய்க்கும் மரங்களாக பல்கலைக் கழகங்கள் கருதக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கல்விக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் தனியார் பல்கலைக்கழகங்களுடன் அரசு பல்கலைக்கழகங்கள் போட்டியிட்டால் அது பயனளிப்பதாகவும், பெருமை தருவதாகவும் அமையும். ஆனால், கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதில் தனியார் பல்கலைக்கழகங்களுடன் அரசு பல்கலைக்கழகங்கள் போட்டியிடுவது வேதனையளிப்பதாகவும், அவமானம் தருவதாகவும் தான் உள்ளது. வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் 98 கலை அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம், தேர்வுக்கட்டணம் ஆகியவை அதிகமாக வசூலிக்கப்படும் போதிலும், அரசு பல்கலைக்கழகங்களில் ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்வுக்கான கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சுமார் 100% உயர்த்தியது. பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஒரு தாளுக்கு ரூ.45 ஆக இருந்த தேர்வுக் கட்டணம் ரூ.85 ஆக உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால், அந்த போராட்டங்களை நிர்வாகம் மதிக்காததால், அனைத்து மாணவர்களும் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தை செலுத்திவிட்டனர். அதன்பின்னர் தேர்வுக்கட்டணத்தை ரூ. 68 ஆக குறைத்த பல்கலைக் கழக நிர்வாகம், மாணவர்கள் கூடுதலாக செலுத்திய கட்டணத்தை திருப்பித் தர முடியாது என்றும், வேண்டுமானால் அடுத்த தேர்வுக்கான கட்டணத்தில் இதை கழித்துக் கொள்ளலாம் என்று கூறியது. அதன்படி, வரும் ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்கான கட்டணத்தில், நிர்வாகம் திருப்பித்தர வேண்டிய கட்டணத்தை கழித்துக் கொண்டு தான் பல்கலைக்கழகம் வசூலித்திருக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே செலுத்தப்பட்ட தேர்வுக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும், அடுத்த பருவத்தேர்வுக்கான கட்டணத்தை முழுமையாகத் தான் செலுத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து விட்டது. அதேபோல், மதிப்பெண் சான்றிதழுக்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.37, தேர்வு விண்ணப்பத்திற்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.12 ஆகியவற்றையும் திருப்பித் தர பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி, ́I¡P, Extension என்ற பாடத்துக்கு இதுவரை தேர்வுக்கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், இப்போது அதற்கும் தேர்வுக்கட்டணமாக ரூ.90 செலுத்த வேண்டும் என்று கூறி அனைத்து மாணவர்களிடமும் பல்கலை. வசூலித்து விட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இந்த வணிக நோக்கம் கொண்ட செயல் கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு மாணவரும் சராசரியாக 5 தாள்களை எழுதும் நிலையில், ஒரு தாளுக்கு ரூ.17 வீதம் மொத்தம் ரூ.85 கூடுதலாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. மற்ற கட்டணங்களையும் சேர்த்தால் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் மொத்தம் ரூ.224 கூடுதலாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களிலும் இதேபோல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வகையில் மட்டும் மாணவர்களிடமிருந்து ரூ.44.80 கோடி கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவம் படிக்கவும், பொறியியல் படிக்கவும் வசதி வாய்ப்பில்லாத மாணவர்கள் தான் கலை & அறிவியல் கல்லூரிகளில் படிக்க வருகிறார்கள். அவர்களிடம் தேர்வுக்கட்டணம் என்ற பெயரில் பல்கலைக்கழகங்களே கொள்ளையடித்தால், ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு படிப்பதற்கு தயங்குவார்கள். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கான கட்டமைப்பை மேம்படுத்தி, பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டால், கோடிக்கணக்கில் நிதி உதவி வழங்க பல்கலைக்கழக மானியக்குழு காத்திருக்கிறது. அதேபோல், பல்கலைக்கழகங்களுக்கு பொருட்களை கொள்முதல் செய்வதில் நடக்கும் முறைகேடுகளை கலைந்தாலே பல கோடி பணம் மிச்சமாகும். இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால், பல்கலைக்கழகத்திற்கு பெருமளவில் வருவாய் கிடைக்கும் என்ற நிலையில் மாணவர்களிடமிருந்து பணம் பறிக்க முயல்வது சரியல்ல. மாணவர்களை பணம் காய்க்கும் மரங்களாக கருதுவதை பல்கலைக் கழகங்கள் கைவிட வேண்டும். அவர்களிடம் கூடுதலாக வசூலித்த பணத்தை திரும்பத் தர வேண்டும். – என்று கூறியுள்ளார்.
மாமூல் தர மறுத்த கடைக்காரரை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியவர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே மாமூல் தர மறுத்த கடைக்காரர் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாதின் (36) அந்தப் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் இவருடைய டீக்கடைக்கு குடிபோதையில் வந்த இளைஞர் கடையில் இருந்த பாதினிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் பாதின் அந்த இளைஞரிடம் மாமூல் தர முடியாது என்று கூறி, அவரை கடையைவிட்டு வெளிறும்படி கூறினார். ஆனால் அந்த இளைஞர் பாதினிடம் தகராறு செய்தபடி, ‘‘மாமூல் தர மறுத்தால் கடையைக் கொளுத்திவிடுவேன்’’ என்று கூறி வெளியேறினாராம். இந்நிலையில், மாலை 6 மணி அளவில் கடையில் பாதின் பஜ்ஜி தயாரித்துக் கொண்டிருந்தபோது, மாமூல் கேட்டு மிரட்டிய அந்த இளைஞர் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் கடைக்கு வந்துள்ளார். திடீரென பாட்டிலைத் திறந்து பாதினின் மீது பெட்ரோலை ஊற்றினார். அடுப்பு அருகே நின்று பஜ்ஜி தயாரித்துக் கொண்டிருந்த பாதின் மீது பெட்ரோல் ஊற்றப் பட்டதும், அது பற்றிக் கொண்டது. அதனால் அவர் உதவி கேட்டு அலறியுள்ளார். அப்போது அருகில் இருந்த அவரின் தந்தை முகமது ஐசக் உடனடியாக தண்ணீரை எடுத்து பாதின் மீது ஊற்றியுள்ளார். பாதினின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்துக் கடைக்காரர்கள் பெட்ரோல் பாட்டிலுடன் தப்பி ஓட முயன்ற அந்த இளைஞரைப் பிடித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை அடுத்து, சுல்தான்பேட்டை பகுதி வியாபாரிகள் ஒன்று சேர்ந்து வில்லியனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மாமூல் கேட்டு மிரட்டி, பாதின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டனர். இதை அடுத்து, பாதின் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில், பிடிபட்ட இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் வில்லியனூர் அருகே உள்ள அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (31) என்பதும், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இதை அடுத்து கணேசனை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் சான்றிதழ் கொடுக்க ஓய்வூதியதாரர்களை நேரில் வர வற்புறுத்தக் கூடாது: வங்கிகளுக்கு உத்தரவு
புது தில்லி: ஆயுள் சான்றிதழைக் கொடுக்க ஓய்வூதியதாரர்கள் நேரில் வர வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தக் கூடாது என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாதம் தோறும் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆண்டு தோறும் தங்கள் ஆயுள் சான்றிதழை, அவர்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழை எம்.பி., எம்.எல்.ஏ., மாஜிஸ்திரேட்டு, கெஸட் அதிகாரி, சப்–இன்ஸ்பெக்டர் தரத்துக்கு மேல் உள்ள போலீஸ் அதிகாரி, வட்டார வளர்ச்சி அதிகாரி, தாசில்தார், கருவூல அதிகாரி என இவர்களில் யாராவது ஒருவர் சரிபார்த்து, கையெழுத்து போட்டிருந்தால், அந்த சான்றிதழ்களை கொடுக்க ஓய்வூதியதாரர்கள் நேரில் வங்கிக்கு வர வேண்டாம். வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது சான்றிதழ்களில் மாஜிஸ்திரேட்டு, நோட்டரி அல்லது தூதரக அதிகாரி ஒருவர் கையெழுத்து போட்டிருந்தால், அவரும் வங்கிக்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லை. அவர்களின் பிரதிநிதி ஒருவரே இந்த சான்றிதழை வங்கியில் செலுத்தலாம். ஆனால் ஓய்வூதியதாரர்கள், தங்கள் தள்ளாத வயதிலும் ஆயுள் சான்றிதழ்களை ஓய்வூதிய ஆணையுடன் சமர்ப்பிக்க, வங்கிக்கு நேரில் வர வேண்டும் என சமீபகாலமாக வங்கிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும், இதனால் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஓய்வூதியதாரர்களின் பல்வேறு சங்க பிரதிநிதிகள், இந்த பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றன. இதை பரிசீலித்த மத்திய அரசு, ‘ஓய்வூதியதாரர்கள் விவகாரத்தில் தற்போதைய சட்டங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழில் சம்பந்தப்பட்ட அதிகாரி முறையாக கையெழுத்து போட்டிருந்தால், அதை கொடுக்க நேரில் வரவேண்டும் என ஓய்வூதியதாரர்களையோ, அவர்களது உறவினர்களையோ தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
பாய்ந்து வந்து தாக்கிய சிறுத்தை: போராடி உயிர் பிழைத்த விவசாயி!
ஈரோடு: மாடு மேய்க்கச் சென்ற விவசாயியை சிறுத்தைப் புலி ஒன்று தாக்கியது. அவர் துணிச்சலுடன் போராடி உயிர் தப்பினார். சத்தியமங்கலம் வனப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சின்னகுட்டியப்பன். 38 வயதான இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக அந்த மாடுகளை தோட்டத்தை ஒட்டியுள்ள வனப் பகுதிக்கு ஓட்டிச் செல்வது அவரது வழக்கம். அன்றும் அப்படித்தான், சின்னக்குட்டியப்பன் மாடுகளை மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அப்போது புதர் மறைவில் பதுங்கியிருந்த சிறுத்தைப் புலி ஒன்று, சின்னக்குட்டியப்பன் மீது திடீரெனப் பாய்ந்து தாக்கியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சின்னக்குட்டியப்பனை சிறுத்தைப்புலி தாக்கத் தொடங்கியது. உடனே அவர், தன்னுடைய கையில் வைத்திருந்த அரிவாளால் சிறுத்தைப் புலியின் உடலில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் சிறுத்தைப்புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்துள்ளது. சிறுத்தைப்புலி தாக்கியதில் சின்னக்குட்டியப்பனுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், அவ்வழியாக வந்த சிலர், சின்னக் குட்டியப்பனைப் பார்த்ததும் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கே அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கொலை வெறியுடன் பாந்து வந்த சிறுத்தையை துணிச்சலுடன் திருப்பித் தாக்கி, போராடி உயிர் மீண்ட சின்னக்குட்டியப்பனைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியப் பட்டனர்.
நேரடி கேஸ் மானியத்தால் கோடிக் கணக்கில் ரூபாய் மிச்சம்: பிரதமர் மோடி
புதுதில்லி: நேரடி சமையல் எரிவாயு மானியத் திட்டத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தில்லியில் நேற்று நாஸ்காம் அமைப்பின் 25வது ஆண்டு – வணிக பொருளாதார ஆய்வரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் இதனைத் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை, தொழில் நுட்பம் மூலம் சுற்றுலா மேம்பாட்டுக்கு வகைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், ஐ.டி., பிரிவினர் மொபைல் ஆப்களை தயாரிக்கவேண்டும் என்றும், கம்ப்யூட்டர் தொடர்பான இணையக் குற்றங்களைத் தடுக்க இது அவசியம் என்றும் கூறினார். “நான் சந்தித்த பெரும்பாலான உலகத் தலைவர்கள், கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்கள் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். எனவே, அந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்திய இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மொபைல்போன் பயன்படுத்தவே எல்லோரும் அஞ்சுவார்கள் என்று கூறினார் மோடி. மேலும், சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தின் பயனால், உண்மையான பயனாளிகளுக்கு மானியம் சென்றடைவது சாத்தியம் ஆகியுள்ளது. இத்திட்டத்தால், வேறு பயன்பாட்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை திருப்பி விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனது கணக்குப்படி, 10 சதவீத முறைகேடு நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது… என்றார் மோடி. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தவுடன், மூன்றே மாதங்களில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. நிலக்கரிச் சுரங்கங்கள், ஒளிவுமறைவின்றி மின்னணு ஏல முறையில் விற்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 204 சுரங்கங்களில் 19 சுரங்கங்கள் மட்டுமே இப்போதுவரை ஏலம் விடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மூலம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கூறியபோது, நாங்களும் அதை அரசியலுக்காக பேசி வந்தோம். ஆனால், அந்தத் தொகையை எங்களால் நம்ப முடியவில்லை. ஆனால், 10 சதவீத நிலக்கரி சுரங்கங்களுக்கே ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கிடைத்த பிறகுதான், எல்லா சந்தேகங்களும் தீர்ந்துள்ளது. குட்டையை மட்டுமே பார்த்தவர்களுக்கு கடலின் அளவை கற்பனை செய்ய முடியாதுதான்.
- என்று பிரதமர் மோடி பேசினார்.
Best wishes to @nasscom as they complete 25 years. Their contribution in facilitating growth of India’s IT & software industry is noteworthy — Narendra Modi (@narendramodi) March 1, 2015
At @nasscom event, urged IT industry to develop innovative Mobile Apps for citizens & the need to use IT to meet challenge of cyber security — Narendra Modi (@narendramodi) March 1, 2015
Also asked IT industry to help promote India’s tourism potential & spoke on how technology can help curb corruption. https://t.co/l9hU7lSNyz — Narendra Modi (@narendramodi) March 1, 2015

