சென்னை: மீண்டும் முதல்வர் பதவியில் அமர நான் ஆசைப்படவில்லை என தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும் கட்சி பொருளாளருமான மு.க..ஸ்டாலின் 63வது பிறந்த நாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். திமுகவின் பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, இளைஞர் எழுச்சி நாளாக சென்னையில் கொண்டாடப் பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் கருணாநிதி, “இங்கே வழங்கப்பட்டுள்ள 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் முழுமையாக ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் இருக்க வேண்டுமென்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை பெறுகின்ற மக்களின் வாழ்த்துக்கள் தம்பி ஸ்டாலின் வயதை இன்னும் 10, 20 வருடங்களுக்கு கூடுதலாக்கும் என்று நம்புகிறேன். இங்கு பேசியவர்கள் நான் மீண்டும் 6வது முறையாக முதல்வராக வர வேண்டுமென சொன்னார்கள். எனக்கு மீண்டும் முதல்வராக வேண்டுமென்ற ஆசை இல்லை. திமுகவை கட்டி காக்க வேண்டும். கடைசி தொண்டன் இருக்கும் வரை இக்கழகத்தினை எதிரிகளுக்கு விட்டுக் கொடுக்க முடியாது. வாடி வதங்கி இருக்கும் ஏழை, எளிய தொண்டர்களுக்கு இந்த கழகத்தை விட்டால் வேறு வழியில்லை என்பதனை உணர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் நலனுக்காக இந்த இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார்.
மதுரை அருகே அதிமுக பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பதற்றம்
மதுரை: மதுரை அருகே அ.தி.மு,க., பஞ்சாயத்துத் தலைவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரை அருகே உள்ள சிலைமானை அடுத்துள்ள கார்சேரி கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் கருப்பசாமி (62) அ.தி.மு.க.க் காரரான அவர், அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு கார்சேரியில் பொது நடைபாதையில் கட்டப்பட்ட வீடு குறித்து பிரச்னை எழுந்தது. இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அதில், அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் கடந்த 26ஆம்தேதி கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஊழியர்கள் முன்னிலையில் அந்த வீடுகள் அகற்றப்பட்டன. வீடு அகற்றப்பட்டதற்கு பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தான் காரணம் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் நினைத்தனர். இதனால் அவரை தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நேற்று மாலை கருப்பசாமியின் வீடு அருகே பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் கருப்பசாமியை சரமாரியாக வெட்டியது. மேலும், கருப்பசாமியின் மகன் வீரமணியையும் அந்த கும்பல் கொல்ல முயன்றது. ஆனால் அவர் தப்பிவிட்டார். பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடி கருப்பசாமி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிலைமான் போலீசார் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்: சோனியா காந்தி
புது தில்லி:: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2015-2016, ஏழை மக்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் முழு பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தனது கருத்தைத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. ஏழை மக்களுக்கு எதிரான பட்ஜெட் இது. பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள்தான் அதிகம் உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஏதுமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி ரயில் பாலத்தில் குண்டு வெடிக்குமாம்: மர்ம நபரின் மிரட்டல் கடிதம்!
திருச்சி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்த மர்ம கடிதத்தில், ‘3-3-2015-க்குள் காவிரி ரயில் பாலத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கும். திருச்சி புத்துரில் கடை நடத்தும் முருகன் ரூ.7 லட்சம் தர வேண்டும். இல்லையெனில் ரிமோட் மூலம் குண்டு வெடிக்கச் செய்யப்படும். கே.தியாகராஜன், தனபால் போட்டோ கடை, ராகவேந்திரபுரம் ஆர்ச், ஸ்ரீரங்கம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. தகவல் கிடைத்ததும் போலீசார், மோப்ப நாயுடன் சென்று காவிரி ரயில் பாலத்தை சோதனை செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி அரியலூர் மாவட்ட ரயில் நிலையங்களுக்கு அடிக்கடி இவ்வாறு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் அரியலூர் மருதை ஆற்று பாலத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்தது. இதே போன்று அதற்கு முன்பும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மிரட்டல் கடிதம் அனுப்பியவர் வீடியோ, போட்டோ கடை சங்கம் பெயரில் எழுதி கடிதம் அனுப்பி உள்ளார். அவர் யார்? என்று விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. மேலும், வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சியில் கடந்த சில மாதங்களாக வந்த 8–வது மிரட்டல் கடிதம் இது. திருச்சி அரசு மருத்துவமனை, சத்திரம் பஸ் நிலையம் டெய்லர் கடை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம், மற்றும் லால்குடி ரெயில் நிலையங்கள், அரியலூர் கள்ளக்குடி, பழங்காநத்தம், ஆகிய ரயில் நிலையங்களுக்கும் மிரட்டல் கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்தது. அனைத்து கடிதங்களும் தியாகராஜன் என்ற பெயரில் போட்டோ கிராபர் சங்கம் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பி வருகிறார். அதில் உள்ள கையெழுத்துகளும் ஒரே மாதிரியாக உள்ளன. மிரட்டல் கடிதம் அனுப்பி வரும் வாலிபர் மன நோயாளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிலரால் பாதிக்கப்பட்ட அவர் அவர்களை பழி வாங்க சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களில் மிரட்டல் கடிதம் அனுப்பி வரலாம் என கூறப்படுகிறது.
திரிணமுல் கட்சிப் பதவியில் இருந்து முகுல் ராய் நீக்கம்
கோல்கத்தா: திரிணமுல் காங்கிரஸ் கட்சிப் பதவியில் இருந்து முகுல் ராய் நீக்கப் பட்டுள்ளார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் அடுத்த மட்டத் தலைவராக இருந்தவர் முகுல் ராய். முன்னாள் மத்திய அமைச்சரான அவர், திரிணமுல் காங்கிரஸின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்துவந்தார். அவர் இன்று திடீரென பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெர்த்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பெர்த்தில் இன்று நடைபெற்ற 21வது லீக் சுற்றுப் போட்டியில், இந்தியா, யுஏஇ அணிகள் மோதின. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட் அணி முதலாவதாக பேட் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. இருப்பினும் அந்த அணி துவக்கம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து வந்தது. நடுவரிசையில் களம் கண்ட ஷைமான் அன்வர் 35 ரன்னும், குர்ரம் கான் 14, குருகே 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். 31.3 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ரன் எடுத்தது. இதை அடுத்து 103 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடத் தொடங்கியது. துவக்க வீரர் த்வான் 17 பந்துகளில் 14 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரோஹித் சர்மாவும் கோலியும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் இழப்பின்றி தேவையான 104 ரன்களை சேர்த்தனர். ரோஹித் 55 பந்துகளில் 57 ரன் எடுத்தார். கோலி 41 பந்துகளில் 33 ரன் சேர்த்தார். இந்திய இன்னிங்ஸில் ஒரே ஒரு சிக்ஸரை ரோஹித் அடித்தார். இந்திய அணி 18.5 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற பட்ஜெட் இல்லை: வைகோ கருத்து
சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்று தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறார். ஆனால், மத்திய அரசு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளையே பெரிதும் நம்பி இருப்பதை நிதிநிலை அறிக்கை காட்டுகிறது. 2015-16 நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.5 விழுக்காடு என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறை மற்றும் உற்பத்தித் தொழில்துறையின் பங்களிப்பு குறைந்துள்ள நிலையில் எவ்வாறு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. பணவீக்க விகிதம் 5 விழுக்காட்டுக்குக் கீழே குறைந்துள்ளது என்றாலும், சேவை வரி 12.34 விழுக்காடு என்பது 14 விழுக்காடு என்று உயர்த்தப்படுவதால், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில், பெட்ரோல் டீசல் மீதான வரிகளைக் குறைத்தால்தான் மக்களுக்குப் பலன் கிடைக்கும். நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு மானியங்களை முழுதாக இரத்து செய்கின்ற நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல. வேளாண் கடனுக்காக 8.5 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 4 விழுக்காடு வட்டியில் வழங்கப்படும் கடன் தொகையை 3 இலட்சம் ரூபாயிலிருந்து அதிகரிக்க வேண்டும். ஓராண்டுக்குள் கடனை திரும்பச் செலுத்தத் தவறியவர்களுக்கு 14 விழுக்காடு அபராத வட்டியை இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வைத்த நியாயமான கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது. வேளாண் துறைக்கான முதலீடும் அதிகரிக்கவில்லை. மரபுணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, இயற்கை வேளாண்மையைப் பாதுகாப்போம் என்பது முரண்பாடாக இருக்கிறது. பிரதமரின் ‘இந்தியாவில் தயாரிப்பு’ திட்டத்துக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்று நம்பி இருந்த நடுத்தர மக்களுக்கு நிதி அமைச்சர் ஏமாற்றத்தைத் தந்துள்ளார். செல்வ வரியை இரத்து செய்து, பெரு நிறுவனங்களுக்காக வரி விகிதம் 5 விழுக்காடு குறைத்த மோடி அரசின் நிதிநிலை அறிக்கை பெருநிறுவனங்களுக்கே சாதகமானதாக இருக்கிறது. செல்வ வரி மற்றும் வங்கிகளின் வாராக்கடன் வசூல் இலக்கை எட்ட முயற்சிக்காமல், நிதி ஆதாரங்களைத் திரட்ட பொதுத்துறைப் பங்குகள் விற்பனையை ஊக்குவிப்பது ஏற்கக்கூடியது அல்ல. திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் செயல்திட்டங்கள் பற்றிய அறிவிப்பும் இடம்பெறவில்லை. மக்கள் நலவாழ்வுக்கு, பொது சுகாதாரத் திட்டங்களுக்கு 10 விழுக்காடு நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், பொது சுகாதரத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஏழை, நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தகவல்தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெறுவதற்கு கடன் வழங்கும் திட்டம் வரவேற்கக் கூடியது. எனினும், அனைத்துத் துறைகளுக்கும் இதை விரிவுபடுத்த வேண்டும். தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் சேருவது கட்டாயம் என்பதை விருப்ப உரிமையாக மாற்றுவது தொழிலாளர்களின் எதிர்கால குடும்ப நலனைப் பாதிக்கும். சிறு, குறு தொழில் முனைவோருக்குக் கடன் வழங்கும் திட்டம், தமிழகத்தின் உயர்தர ஏ.ஐ.எம்.எஸ். மருத்துவமனை உருவாக்குதல், வரி விலக்குடன் கூடிய பத்திரங்கள் வெளியிடுதல் போன்ற வரவேற்கக் கூடிய கூறுகள் இருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மத்திய பட்ஜெட் இல்லை.
- என்று கூறியுள்ளார்.
மக்களின் தேவையை பிரதிபலிக்காத பட்ஜெட்: விஜயகாந்த் கருத்து
சென்னை இன்று தாக்கல்செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், மக்களின் தேவையை பிரதிபலிக்காத பட்ஜெட் என்று மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் தலைமையில் அமைந்த பிறகு முதல் முறையாக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த பட்ஜெட் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். நாட்டின் பண வீக்கம் 2012ல் 11% சதவிகிதத்திற்கு மேல் இருந்து, தற்போது ஐந்து சதவிகிதமாக குறைந்துள்ளதையும், அன்னியச் செலாவணி 340 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது என்பதையும், 2022க்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தில் நகர்ப் புறத்தில் இரண்டு கோடி வீடுகளும், கிராமப் புறத்தில் நாலு கோடி வீடுகளும் அமைக்கப்படும் என்பதும், குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் வேலை வழங்கப்படும் என்பதும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கப்படும் என்பதும், மேக்-இன்-இந்தியா திட்டத்தின் படி அனைத்து ராணுவ தளவாடங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்பதும், 2020க்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளிக்கப்படும், 2022க்குள் 1 லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மரபுசாரா எரிசக்தி மூலம் உற்பத்தி செயப்படும் என்பதும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கக் கூடியதாகும். மேலும் தமிழகத்தில் சாலை வசதி மற்றும் சரியான பராமரிப்பு இல்லாதது தான் வாகன விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாகும். அதனால் தான் இந்தியாவிலேயே வாகன விபத்தால் தமிழகத்தில் தான் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்கின்றன. ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தற்போது பனிரெண்டு ரூபாய் செலுத்தினால், இரண்டு லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையில் தனிநபர் விபத்துக் காப்பீட்டுத்திட்டதை அறிவித்திருப்பது வரவேற்கக்கூடிய திட்டமாகும். ஆனாலும் தமிழ்நாட்டில் அதிமான விபத்துக்கள் நடக்காமலும், உயிரிழப்புகள் ஏற்படாமலும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் ஆகும். நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மக்களும், அரசு அலுவலர்களும் பயன் பெரும் வகையில் வருமான வரி உச்ச வரம்பை அதிகரிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏழை எளிய, நடுத்தர மக்கள் என அனைவருக்கும் விதிக்கப்படும் சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது அதே சமயம் மிகப்பெரும் தொழில் நிறுவனங்களுக்கு(corporate sector) ஏற்கனவே அவர்கள் செலுத்திய வரியில் இருந்து ஐந்து சதவிகிதம் குறைக்கப்பட்டும், சொத்து வரியும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது, என்பது போன்ற அறிவிப்புகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இந்த அரசு அமையக் காரணமாக இருந்த ஏழை எளிய, நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையிலான அறிவிப்புகளாக இவை தெரியவில்லை. கங்கை நதியை தூய்மைப்படுத்த வரிவருமானத்தில் ஒரு பங்கு பயன் படுத்தப்படும் என்றும், அத்திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும், அதே போல் தூய்மை இந்தியா திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியதாகும். ஆனால் நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்கள் குறித்து எந்த வித அறிவிப்புகளும் இல்லை, குறிப்பாக கங்கை-காவிரி நதிகள் இணைப்பு திட்டம் குறித்து கூட எந்த வித அறிவிப்பும் இல்லை என்பது மிக்க வருத்தத்தை அளிக்கிறது. விவசாயிகளுக்கு 8.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்ற இலக்கு வரவேற்புக்குரியது. அதே சமயத்தில் கடந்த ஆட்சியின் பொருளாதார கொள்கையால் விவசாயம் நலிவுற்று, விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் வேதனையை தீர்க்கும் வகையில் விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். இந்தியா முழுவதும் படித்த மாணவர்கள் உரிய வேலை வாய்ப்பு இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் படிப்பிற்காக வாங்கிய கல்விக்கடன் தொகைகள் அவர்கள் தலையின் மேல் சுமையாக உள்ளது. படிப்பு முடித்த குறிப்பிட காலத்திற்குள் கல்விக்கடன் தொகையை செலுத்த வேண்டுமென அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. வேலை வாய்ப்பில்லாமல் அவர்களால் கல்விக்கடன் தொகையை எப்படி திரும்பச் செலுத்த முடியும்? மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டுமென அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கடன் தொகைகள் ரத்து செய்யப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்தியாவில் அரசுப்பணியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது, காலிப் பணி இடங்களுக்கும் உடனுக்குடன் பணி நியமனம் செய்யப்படுவதில்லை, ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்துவிட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலை தேடிவருகிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக சுயவேலை வாய்ப்பை பெருக்கிட இன்னும் அதிக தொகைகளை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். மலையளவு தேவைப்படும் தொகைக்கு, கடுகளவு தொகையே அதாவது ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கான புதிய திட்டங்களும் இல்லை, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வழிவகையும் காணப்படவில்லை. ஆகமொத்தத்தில் மக்களின் தேவையை, முழுமையாக பிரதிபலிக்காத பட்ஜெட்டாகவே இதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் கருதுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடைமுறைக்கேற்ற பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு
புதுதில்லி: இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் நடைமுறைக்கேற்றவகையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ள பாராட்டு: 2015 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தெளிவான திட்டங்களுடன் உள்ளது. நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் வளர்ச்சியின் வேகத்தை மேலும் அதிகரிக்கும். வளமான எதிர்காலத்துக்கான விடியலுக்கான அறிகுறியாக உள்ளது. இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான, நடுத்தர வர்க்கத்தினருக்கான இளைஞர்களுக்கு ஆதரவான முன்னுதாரனமான பட்ஜெட்
2015 Budget will further reignite our growth engine, signalling the dawn of a prosperous future. #SabkaBudget — Narendra Modi (@narendramodi) February 28, 2015
FM @arunjaitley must be congratulated for this pro-poor, pro-growth, pro-middle class, pro-youth & paradigm shifting Budget. — Narendra Modi (@narendramodi) February 28, 2015
Atal Innovation Mission & SETU underline our commitment to enable innovation, entrepreneurship & start-ups to grow & shine in India. — Narendra Modi (@narendramodi) February 28, 2015
Suraksha Bima Yojana, Atal Pension Yojana, Jeevan Jyoti Bima Yojana, Vidya Lakshmi Karyakram mark a shift from Jan Dhan to Jan Kalyan. — Narendra Modi (@narendramodi) February 28, 2015
Details of the Black Money law being introduced demonstrates our firm commitment to bring back every Rupee of Black Money stashed abroad. — Narendra Modi (@narendramodi) February 28, 2015
புலி தாக்கி இறந்த பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்காவிடில் நானே தலைமையேற்று போராடுவேன்: ஈ.வி.கே.எஸ். எச்சரிக்கை
சென்னை: புலி தாக்கி இறந்த பெண்ணுக்கு அரசு நிவாரணம் வழங்காவிடில் நானே தலைமையேற்று போராடுவேன்என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தேயிலை தோட்டத் தொழிலாளி மகாலட்சுமி என்பவர் புலியால் தாக்கப்பட்டு, கொடூரமான முறையில் மரணமடைந்தார். அந்த பகுதியிலுள்ள மக்கள் பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரி முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மகாலட்சுமியை இன்று இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வனப்பகுதிகளின் அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானையின் தாக்குதல், புலியின் தாக்குதல் எப்போது நேரிடுமோ என பதற்றத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல நேரங்களில் வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளியேறி விவசாய பயிர்களை அழிப்பதும், குடியிருப்பு பகுதிகளில் மக்களை அச்சுறுத்துவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்க வேண்டும். கேரள மாநிலத்தில் புலி தாக்கி இறந்த நபரின் குடும்பத்தினருக்கு கேரள மாநில முதலமைச்சர் சிறப்பு செயல்பாட்டினால் நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் மகாலட்சுமி குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு அரசாங்க வேலை வழங்கும்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டும், வனவிலங்குகளிடமிருந்து மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை கோரி கூடலூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் வன்முறையை ஏவிவிட்டு அடக்குமுறையை கையாண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் மக்கள் பிரச்சினையை காங்கிரஸ் கட்சியினர் முன்னிலைப்படுத்தி போராடுவதை சகித்துக் கொள்ளாத ஆளுங்கட்சியினர் அரசியல் உள்நோக்கத்தோடு அவர்கள் கொடுக்கும் பட்டியலின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட நிரபராதிகளை கைது செய்து பழிவாங்கும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை உடனடியாக காவல்துறையினர் கைவிட வேண்டும். புலி தாக்கி இறந்த மகாலட்சுமி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், அரசு வேலை வாய்ப்பும் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை யெனில் கூடலூர் பகுதி மக்களை திரட்டி அந்தப் பகுதியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். பிரபு அவர்களுடன் இணைந்து நானே தலைமையேற்று போராட்டம் நடத்திட நேரிடும் என தமிழக அரசை எச்சரிக்கிறேன்.
- என்று கூறியுள்ளார்.

