மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடி நடவடிக்கை தேவை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் – பிரச்சனைகளுக்கு – முற்றுப்புள்ளி வைக்க – மாநில அரசும், மத்திய அரசும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இலங்கையில் ராஜபக்ஷே வின் ஆட்சியில் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஆதரவினால் புதிய கட்சி ஆட்சியில் அமர்ந்திருக்கின்றது. ஆட்சியில் பொறுப்பேற்ற பின்பு இலங்கை பிரதமர் தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றார். மேலும் இலங்கை அதிபர் இந்தியா வந்தபோது மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். அதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்றார். அந்த பேச்சு வார்த்தையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது இலங்கையின் புதிய ஆட்சியிலும் தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் தொடர ஆரம்பித்திருகிறது. நேற்றைய முன்தினம் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து, 86 மீனவர்களைச் கைது செய்திருக்கிறார்கள். மேலும் 11 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்களும், 3 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் ராஜபக்ஷே வின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இலங்கையின் புதிய ஆட்சியில் மிகப் பெரிய அளவில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே சிறைப்பிடிக்கப்பட்ட 81 படகுகளை தமிழக மீனவர்களிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட 81 படகுகளை சரி செய்தும், சேதப்படுத்திய வலைகளுக்கும், படகுகளுக்கும் உரிய நிவாரணமும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இலங்கை அரசிடம் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை கால தாமதமின்றி உடனடியாக நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசும், மத்திய அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்வதற்கும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர, சுமூக தீர்வு ஏற்படவும், இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்
உலக கலாச்சார மையங்களின் வசதி பாதுகாக்கப்படும்: அருண் ஜேட்லி
புது தில்லி: இந்தியாவின் 25 கலாச்சார பாரம்பரிய மையங்களில் வசதிகள் குறைவாக உள்ளதாகவும் அது மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர்அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். நிதி நிலை அறிக்கை 2015-16 இல் வழங்கிய நிதி அமைச்சர் பாரம்பரிய புராதன மையங்களை பராமரிப்பது, வாகன நிறுத்தம் வசதி, மாற்று திறனாளிகளுக்கான வசதி, விளக்கம் அளிக்கும் மையங்கள் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு, கழிப்பறை, விளக்குகள் அமைப்பது, கலாச்சார மையங்களை சுற்றி உள்ள சமுதாயத்தினருக்கு பலன் அளிக்கும் நடவடிக்கைகள் போன்ற வசதிகள் செய்து தரப்படும், கீழ்வரும் கலாச்சார பாரம்பரிய மையங்களில் செயல்பாடுகளை துவக்க அமைச்சர் திட்டமிட்டுள்ளார். 1. சர்ச்சுகள் மற்றும், கான்வெண்ட் – கோவா. 2. ஹம்பி, – கர்நாடகா. 3. கும்பல்கார் மற்றும் இதர மலை சார்ந்த கோட்டைகள் – ராஜஸ்தான். 4. ராணி கீ வவ், பதான் – குஜராத். 5. லே அரண்மனை, லடாக் – ஜம்மு காஷ்மிர். 6. வாரணாசி, கோவில் நகரம், – உத்திர பிரதேசம். 7. ஜாலியன்வாலா பாக், அமிர்தரசாஸ் – பஞ்சாப். 8. குதூப் ஷாஹி சமாதி, ஹதராபாத் – தெலுங்கானா. நாடுகளின் இருந்து வருகைதரும் பயணிகளுக்கு. விசா வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு முன்பு 43 நாடுகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.
செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவர் பதவியில் இருந்து ஔவை நடராஜன் விலகல்
சென்னை: செம்மொழித் தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் பதவியில் இருந்து ஔவை நடராஜன் இன்று பதவி விலகினார். இது குறித்து அவர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தியில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவி மூதறிஞர் ஔவை நடராசன் அவர்களை காங்கிரஸ் அரசு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவியை முதன்முதலாக சென்னையில் உருவாக்கி கடந்த 2014-ஆம் வருடம் மார்ச் மாதம் 1-ம் (1.3.2014) – தேதியில் நியமித்திருந்தார்கள். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி பதவிக்கு வந்ததும் அவருடைய பதவியிலிருந்து நீக்கம் செய்து பேராசிரியர் பிரகாசம் என்பவரை நியமனம் செய்தனர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து அந்த ஆணைக்குத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும்போதே இன்று காலை துணைத்தலைவர் பதவியிலிருந்து ஔவை நடராசன் விலகினார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற தாய்மொழித் திருநாள் விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஔவை நடராசனின் பணிகளைப் பாராட்டினார். அமைச்சரே பாராட்டியதும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சிக்கல் தீர்ந்தது என்றே கருதினோம். ஆனால் அறிஞர் ஔவை நடராசன் அவர்கள் தன் சொந்தக் காரணங்களால் பதவி விலகியதாக இன்று ஒரு கருத்தரங்கில் நகைச்சுவையோடு கூறினார். அவர் வேறு எந்த விளக்கமும் தரவில்லை. ஔவை நடராசன் அவர்களுடைய இழப்பு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ஒரு பெரிய களங்கமாக என்றும் இருக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் முன்னை சிறப்பு வருகைப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் இந்த செய்திக்கு உடனே அங்கேயே விடை கூறினார். தகுதியும், தகைமையும், பெருமிதமும் வாய்ந்த தமிழறிஞர் ஔவை அவர்களைப் பதவியில் இருந்து நீக்கிவிடுவதில் மத்திய அரசு முனைப்புக் காட்டுவது தமிழுக்குச் செய்யும் பெரும் தீங்காகும் என்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தொடர்ந்து குறிப்பிட்டார். – என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் : சில முக்கிய அம்சங்கள்
புதுதில்லி 2015-16ம் ஆண்டிற்கான மத்திய வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையில், பல புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; நுண்ணிய நிதி நிறுவனங்களுக்கு உதவி வழங்கும் வகையில் “முத்ரா” என்று அழைக்கப்படும் நுண்ணிய அலகுகள் மேம்பாட்டு மறு நிதி முகமை தொடங்கப்படுகிறது; விபத்தில் உயிர் இழப்பபவர்களுக்கு காப்பீடு வழங்கும் வகை செய்யும் பிரதமந்திரி “சுரக்ஷா பீம யோஜான” திட்டம்; ஆண்டு ஒன்றிற்கு ரூ 12 பிரிமியம் செலுத்துவதன் வாயிலாக ரூ. 2 லட்சம் காப்பீடு பெற வசதி; “அடல் ஓய்வூதியத் திட்டம்” பிரிமியத்தில் 50% அரசு வழங்கும் இயற்கை மற்றும் விபத்து உயிர் இழப்பிற்கு காப்பீடு வழங்க பிரதம மந்திரி “ஜீவன் ஜோதி பீமா யோஜனா” மூத்த குடிமக்கள் நல நிதியம் அமைக்க யோசனை தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்படும் ரயில், சாலை மற்றும் பாசனத் திட்டங்களுக்கென வரி இல்லாத கட்டமைப்பு பத்திரங்கள் புதிதாக வர்த்தகம் தொடங்குபவருக்கு உதவி வழங்க “சேது” என்றழைக்கப்படும் சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயன்பாட்டு அமைப்பை ஏற்படுத்த யோசனை 5 பெரிய மின் திட்டங்கள் அமைக்கப்படும் தற்போது நடைமுறையில் உள்ள தங்க சேமிப்பு மற்றும் தங்க உலோக கடன் திட்டங்களுக்கு மாற்றாக செல்லத்தக்க தங்கத் திட்டம் “நிர்பயா” நிதியத்திற்கு மேலும் ரூ. 1000 கோடி மேலும் பல இடங்களில் புதிய அகில இந்திய மருத்துவ கழகங்கள், இந்திய தொழில்நுட்ப கழகங்கள் மற்றும் இந்திய மேலாண்மைக் கழகங்கள் மதிப்பிடப்பட்டுள்ள மொத்த செலவீனம் ரூ. 17,77,477 கோடி நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9%மாக இருக்கும் நிலையான வரிக் கொள்கையும் சாதகமான வரி நிர்வாகமும் குறிக்கோளாக இருக்கும் கருப்பு பணத்துக் எதிரான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அடுத்த ஆண்டிலிருந்து செயல்படுத்த பல்வேறு முனைகளில் முயற்சி தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை அடுத்த நிதி ஆண்டுகளில் அதாவது 4 ஆண்டுகளில் நிறுவன வரியை 30% லிருந்து 25% ஆகக் குறைக்க யோசனை பல்வேறு வரி விலக்குகளை சீரமைக்கவும் அகற்றவும் நடவடிக்கை வரி தகராறுகளை குறைக்க ஊக்குவிப்பு; வரி நிர்வாகத்தில் மேம்பாடு சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் தனிநபருக்கு வழங்கப்படும் விலக்கு தொடரும்
பாஜக.,வின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டும் பட்ஜெட்: எச்.ராஜா
சென்னை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த பட்ஜெட், பா.ஜ.க.,வின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டும் பட்ஜெட் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா. இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 9 மாதங்களுக்கு முன்பு நம் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசு சிறந்த நிர்வாகம் மற்றும் தொலைநோக்கு திட்டங்களின் மூலமாக இன்று பொருளாதாரம் முன்னேற்ற பாதைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி 2013-14-ல் 4.5மூ திலிருந்து 2014-15-ல் 7.4 மற்றும் 2015-16-ல் 8.5மூத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிதிபற்றாக்குறை 3.9மூ க்குள் கட்டுப்படுத்தப்படும் என்பது விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆகும். ஜன்தன் யோஜ்னாவின் மூலம் 12.5 கோடி புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது, தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை, கல்விக்கு 68,960 கோடி, நிதி ஒதுக்கீடு கிராம முன்னேற்றத்திற்கு 79,512 கோடி, சுகாதாரத்திற்கு 33,152 கோடி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கு 10,351 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியவை பாரதிய ஜனதா கட்சி அரசின் சமூக அக்கறையை எடுத்துக் காட்டுகிறது. விவசாயிகளுக்கு 8.5 லட்சம் கோடி கடன் மற்றும் கிராமபுற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு 25,000 கோடி நிதி ஒதுக்கீடு விவசாய வளர்ச்சிக்கு மிகவும் உதவிடும். 1.75 லட்சம் மெகாவாட் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி, தேசிய திறன் மேம்பாட்டு திட்டம், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 70,000 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக உள்ள திட்டங்களாகும் மேலும் இவை புதிய வேலைவாய்ப்பை மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 14வது திட்ட குழுவின் பரிந்துரைப்படி 32% லிருந்து 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் உதவி மற்றும் மானியங்களுடன் மாநில அரசுகள் 62% நிதியினை மத்தியிலிருந்து பெறும். இது மாநில அரசுகளின் நிதிநிலையை மேம்படுத்துவதுடன் இது ஒரு மிகப் பெரிய பொருளாதார பரவலாக்கும் வெளிநாடுகளில் கணக்கில் காட்டாமல் சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல பரிந்துரைகள் கருப்புப்பணத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவிடும். மொத்தத்தில் 2015-16க்கான பட்ஜெட் வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார ஒழுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் மிகச் சிறந்த பட்ஜெட்டிற்காக பாராட்டுதலுக்கு உரியவர்களாவார்கள்.
- என்று கூறியுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் பட்ஜெட்: பாரிவேந்தர்
சென்னை: அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் பட்ஜெட் என்று இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், 2015-16ம் ஆண்டிற்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் திரு. அருண்ஜெட்லி அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்று (28.02.2015) தாக்கல் செய்துள்ளார். இதில், திறன் மேம்பாட்டு அமைச்சகம் புதியதாக உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதன் மூலம் கிராமப் புற மாணவர்களும் தங்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதுடன் – இந்திய மாணவர்கள் உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் சென்று பணியாற்றுகின்ற வாய்ப்பு கிடைக்கும். தமிழகம் உட்பட்ட 5-மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவ மனைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்கும் அனைத்து மாநிலங்களிலும் மத்திய பல்கலைக்கழகம் நிறுவப்படுவதால் – கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதுடன். ஒரே மாதிரியான பாடத்திட்டதினை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு போதிக்க முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கான வரி 30% லிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுவதால் அந்நிய முதலீடு அனைத்து துறைகளுக்கும் கிடைக்கும்.இதனால்,வேலைவாய்ப்பு பெருகுவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் உயரும். வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை என்பது அரசு ஊழியர்களுக்கும். நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்க்க் கூடியதாகும். அதேவேளையில், சொத்து வரியை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதை பெரிதும் வரவேற்கின்றோம். மேலும் பெண்குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டகளுக்கு 100 சதவீதம் வரி விலக்கு என்ற அறிவிப்பால், பெண் குழைந்தைகளுக்கு எதிரான மனோபாவம் குறையும். பொதுவாக, இந்த நிதி நிலை அறிக்கையால் அனைத்து தரப்பட்ட மக்களும் பெரிதும் பயனடைவார்கள். மேலும், பொதுமக்களுக்கு சுமையை ஏற்றாத-அதிக வரி இல்லாத பட்ஜெட் என்பதனால், இதனை முழுமையாக வரவேற்கின்றேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.
திட்டங்கள் இனிப்பு; தனி நபர் வரிவிதிப்புகள் புளிப்பு: பட்ஜெட் குறித்து ராமதாஸ்
இன்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2015-2016ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், திட்டங்கள் இனிப்பு, தனிநபர் வரிவிதிப்புகள் புளிப்பு என்று கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றியிருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு திட்டங்கள் வரவேற்கத்தக்கவை தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்தில் மருத்துவக் கல்வியும், மருத்துவ சேவையும் மேம்படுவதற்கு வகை செய்யும். ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்புகளும் வரவேற்கப்பட வேண்டியவை ஆகும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா? என்ற வினா எழுந்த நிலையில், அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும், அதற்கு ரூ.34,699 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களுக்கான பிரதமரின் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான முத்ரா வங்கி, அடுத்த 7 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்குடன் மொத்தம் 7 கோடி புதிய வீடுகள் கட்டப்படவிருப்பது, 80 ஆயிரம் இடைநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படவிருப்பது, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது ஆகியவை அறிவிப்புகள் முறையாக செயல்படுத்தப்பட்டால் சமூகத்திற்கு பயனளிக்குமென்பது உறுதி. கல்வித்துறைக்கு ரூ.68,968 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.33,152 கோடியும், ஊரகவளர்ச்சித் துறைக்கு ரூ.79,526 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட சற்று அதிகம் தான் என்றாலும் போதுமானதல்ல. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு 6 விழுக்காடும், சுகாதாரத்திற்கு 2 விழுக்காடும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற இலக்கை எட்ட மத்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்ய வேண்டும். விவசாயக் கடனுக்காக ரூ.8.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நாட்டின் மின் உற்பத்தியை பெருக்கும் வகையில் 5 அல்ட்ரா பவர் மெகா மின் திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதும், அதிக அளவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்திருப்பதும் பயனுள்ள நடவடிக்கைகள். கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், மீட்கவும் நிதி அமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் மிகவும் அவசியமானவை. ஆனால், அவை எந்த அளவுக்கு செயல்படுத்தப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தனிநபர் வரிவிகிதம் தொடர்பான அறிவிப்புகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. பெரு நிறுவனங்களுக்கான வரியை 30 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக குறைத்துள்ள மத்திய அரசு, தனிநபர்களின் வருமானவரி விகிதத்தில் மாற்றம் செய்யாதது சரியல்ல. நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும்போது பெரு நிறுவனங்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்குமோ? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. தனிநபர்களின் வரவும், செலவும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்றவாறு பணவீக்க மதிப்பின் அடிப்படையில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ஆண்டு தானாகவே அதிகரிக்கும் வகையில் நேரடி வரிகள் கொள்கையில் மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும். மருத்துவக் காப்பீட்டிற்காக முதலீடு செய்யப்படும் தொகையின் வரிவிலக்கு வரம்பு ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பது ஓரளவு பயனளிக்கும். அதேபோல், போக்குவரத்துப் படி மீதான வருமானவரி விலக்கு உச்சவரம்பு இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பதும் மாத ஊதியதாரர்களுக்கு பயன்தருவதாக அமையும். ஆனால், கிட்டத்தட்ட அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி விதிக்கப்படும் நிலையில், அதன் விகிதத்தை 12 விழுக்காட்டிலிருந்து 14 விழுக்காடாக அதிகரித்திருப்பது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். இந்த நடவடிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும். மொத்தத்தில் 2015&16 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பும், புளிப்பும் கலந்து தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாகவே அமைந்திருக்கிறது. – என்று தெரிவித்துள்ளார்.
யு ஏ இ அணி 102 க்கு ஆட்டமிழப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பெர்த்தில் இன்று நடைபெறும் 21வது லீக் சுற்றுப் போட்டியில், இந்தியா, யுஏஇ அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட் அணி முதலாவதாக பேட் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. இருப்பினும் அந்த அணி துவக்கம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து வந்தது. நடுவரிசையில் களம் கண்ட ஷைமான் அன்வர் 35 ரன்னும், குர்ரம் கான் 14, குருகே 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். 31.3 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 102 ரன் எடுத்தது. இதை அடுத்து 103 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடத் தொடங்கியது.
‘2022க்குள் அனைவருக்கும் வீடு’ : அருண் ஜேட்லி உறுதி
2022க்குள் அனைவருக்கு வீடு என்ற திட்டம் நிறைவேற்ற முயற்சி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். 2015-2016 ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, ஏழ்மையை அகற்றுவதே அனைத்து திட்டங்களின் நோக்கம் என்றும், 2020க்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் நிறைவேற்ற முயற்சி செய்யப்படும் என்று குறிப்பிட்டார். அருண் ஜேட்லி தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: உலகின் 2வது மிகப்பெரிய பங்குச்சந்தையாக இந்தியா உள்ளது. உலகில் மிக வேகமாக உயரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. 2022க்குள் அனைவருக்கு வீடு என்ற திட்டம் நிறைவேற்ற முயற்சி செய்யப்படும். நாட்டின் வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக உயரும். 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணவீக்கம், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. பணவீக்கம் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்படும். கல்வித்தரம் உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் என்பது இலக்கு. நாட்டில் 20 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதி. பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் தாமரையை விவாகரத்து செய்வதே சரியாக இருக்கும்: கணவர் தியாகு
சென்னை: கவிஞர் தாமரையை விவாகரத்து செய்வது தன் சரியாக இருக்கும் என்று கூறினார் அவரது கணவர் தியாகு. முன்னதாக, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை தனது கணவர் தியாகு திருடனைப் போல் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு புகார் கூறினார். சூளைமேடு முல்லை தெருவில் உள்ள தியாகு வீட்டு முன்பு நேற்று மகனுடன் தர்ணா போராட்டமும் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தன்னை ஒரு மனித உரிமைப் போராளியாகவும், தமிழ் தேசியவாதியாகவும் அடையாளப் படுத்திக் கொண்ட என் கணவர் தியாகு மீண்டும் வீட்டுக்கு வரவேண்டும். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றும் கவிஞர் தாமரை அறிவித்திருந்தார். இன்றும் அவரது போராட்டம் தொடரும் நிலையில், தாமரையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவரது கணவர் தியாகு, நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. வேளச்சேரியில் உள்ள மகள் வீட்டில் தங்கியுள்ளேன். டி.வி. நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று பேசி வருகிறேன். கடந்த நவம்பர் 23ஆம் தேதியில் இருந்து தாமரையுடன் நான் வாழவில்லை என்பது உண்மைதான். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே எங்கள் வாழ்க்கையில் பிரச்னை இருந்து வந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. இருவரும் பிரிந்து விடுவதுதான் சரியாக இருக்கும் என்று நான் கருதினேன். இதை கடிதம் மூலம் அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் பதில் சொல்லவில்லை. சட்ட ரீதியாகப் பிரிந்து விடலாம் என பல முறை வற்புறுத்தியும் அவர் அதை ஏற்கவில்லை. தாமரை நல்ல கவிஞர். நல்ல சிந்தனைவாதி. ஆனால் எனது குடும்ப வாழ்க்கை என்பது பொது வாழ்க்கைக்குள் உட்பட்டது. தாமரை அப்படிப் பார்ப்பது இல்லை. அது தான் பிரச்னை. தாமரை வெளியிட்டுள்ள அறிக்கைகள் சேர்ந்து வாழ்வதற்கான வழி இல்லை. மகனைப் பிரிவது தான் கஷ்டமாக இருக்கிறது. தாமரையும், நானும் இனி சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து செய்து கொள்வது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். என்று கூறியுள்ளார். [su_youtube url=”https://youtu.be/Qr80ylMlgHM”] video courtesy: fastmessenger.net

