Home Blog Page 6277

விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்: சுதிஷ்

vijayakanth தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் தேமுதிகவைச் சேர்ந்த எல்.கே.சுதிஷ் தில்லியில் சந்தித்து வலியுறுத்தியதாக செய்தி வெளியானது. தமிழக சட்டமன்றத்துக்கு வரும் 2016ல் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை நிறுத்தியது. இது தேமுதிகவுக்கும் பாஜகவுக்கும் உரசலை ஏற்படுத்தியது. இருப்பினும், விஜய காந்த் மவுன ஆதரவு அளித்தார். இதனிடையே, பாமக., தன்னிச்சையாக அன்புமணி ராமதாஸ்தான் கூட்டணியின் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தார். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. பாஜக இது குறித்து விமர்சித்தது. அக்கட்சியின் தேசியச் செயலர் எச்.ராஜா, மேலிடம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார். இதனிடையே, தேமுதிகவும் தன் பங்குக்கு, தங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூட்டணியில் நெருக்குதல் கொடுக்கத் துவங்கியிருக்கிறது. தில்லியில் பெற்ற தோல்வியால், பாஜகவை சீண்டும் முயற்சியில் இரு கட்சிகளும் இறங்கியிருப்பதாகவே கருதப் படுகிறது. தமிழகத்தில், தங்கள் தலைமையில்தான் அடுத்த கூட்டணி இடம் பெறும் என்று பாமக., தேமுதிக இரு கட்சிகளுமே போட்டி போடுகின்றன. இந்நிலையில் தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தில்லி சென்றார். அங்கு அவர் பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, ஸ்ரீரங்கம் தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு வெளிப்படையான ஆதரவை தே.மு.தி.க. அளிக்காதது ஏன்? என்பது குறித்து சுதீஷ் விளக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டணியில் உள்ள ஒரு கட்சி தன்னிச்சையாக முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்தது குறித்து தங்கள் கட்சியின் அதிருப்தியையும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி பலம் பெற வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும் என்று சுதிஷ் வலியுறுத்தினாராம். அவ்வாறு பா.ஜகஅறிவிக்க வில்லை என்றால், தேமுதிக வேறு ஒரு முடிவை அறிவிக்க நேரிடும் என்று அமித்ஷாவிடம் அவர் மிரட்டலாகக் கூறினாராம். இதை அடுத்து அமித்ஷா அவரிடம், ‘தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் நிறைய இருக்கிறது. தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிய பின்னர் நாங்கள் எங்கள் முடிவை தெரிவிக்கிறோம்’ என்று கூறியுள்ளார். தில்லியில் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்காத நிலையில் எல்.கே.சுதீஷ் நேற்று முன்தினம் சென்னை திரும்பியுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? திட்டம் இல்லை என்கிறார் மேனகா

menaka-gandhi புது தில்லி: பாலியல் தொழிலை சட்டரீதியாக செல்லுபடி ஆக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, ஒரு கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில், பாலியல் தொழிலைத் தடுக்கவும், அதில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கவும் விரிவான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், பாலியல் தொழிலை சட்ட ரீதியாக செல்லுபடியாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை” என்று தெரிவித்து உள்ளார்.

குறைவான இலக்குதான்: ஆனாலும் நியூஸாந்து போராடி வெற்றி

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற – ஏ பிரிவு 20வது லீக் சுற்றுப் போட்டியில், பரபரப்பை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் குறைவான இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த போதும், நியூசிலாந்து அணி போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பின்ச் 14 ரன்னும், வார்னர் 34 ரன்னும், வாட்சன் 23, க்ளார்க் 12, ஸ்மித் 4, மேக்ஸ்வெல் 1, மார்ஷ் 0 என சொற்ப ரன்களே சேர்த்ததால் ஆஸ்திரேலியா ரன் எடுக்காமல் திணறியது. ஹாதின் மட்டும் 43 ரன் எடுத்தார். பின் வரிசையில் ஜான்ஸன் 1, ஸ்டார்ட் 0, குமின்ஸ் 7 ரன் என எடுத்தனர். இறுதியில் 32.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன் எடுத்தது. பின்னர் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலந்து அணி, துவக்கத்தில் நன்றாக விளையாடியது. அந்த அணி 3.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்தது. மெக்கலம் 50 ரன் எடுத்தார். குப்டில் 11ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், பின்னர் வந்த வில்லியம்சன் 45 ரன் எடுத்தார். இதனால் அந்த அணி 7.4 ஓவரில் 2வது விக்கெட்டை இழந்தபோது 78 ரன் எடுத்திருந்தது. ஆனால், அடுத்தடுத்து 2 விக்கெட் இழந்ததும், நடுவரிசையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆண்டர்சன். அவர் 26 ரன்னில் ஆட்டம் இழந்ததும், வரிசையாக விக்கெட்கள் விழுந்தன.எலியாட் 0, டெய்லர் 1, ரோன்ச் 6, வெட்டொரி 2, மில்ன் 0, சோதி 0 என ஆட்டம் இழந்து, தோல்வியை பரிசளிப்பார்களோ என்ற எண்ணத்தை நியூசிலாந்துக்கு ஏற்படுத்தினர். இருப்பினும் வில்லிமய்ஸனின் ஆட்டம் வெற்றிக்கு வித்திட்டது. கடைசி விக்கெட்டை வைத்துக்கொண்டு, 23.1 ஓவரில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியினர் பெருமூச்சு விட்டனர்.

மேற்கு இந்தியத் தீவு அணியுடன் மோதல்: தென்னாப்பிரிக்கா தன்னம்பிக்கை பெருக்கிய வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று சிட்னியில் நடைபெற்ற பி பிரிவு லீக் சுற்று 19வது போட்டியில், தென்னாப்பிரிக்க அணி மாபெரும் வெற்றி பெற்று, மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 257 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 33.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 257 ரன் வித்தியாசத்தில் மாபெரும் தன்னம்பிக்கை வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி

151 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா: வெற்றிப் பாதையில் நியூசிலாந்து

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் ஏ பிரிவு 20வது லீக் சுற்றுப் போட்டியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்னில் ஆட்டம் இழந்தது. டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பின்ச் 14 ரன்னும், வார்னர் 34 ரன்னும், வாட்சன் 23, க்ளார்க் 12, ஸ்மித் 4, மேக்ஸ்வெல் 1, மார்ஷ் 0 என சொற்ப ரன்களே சேர்த்ததால் ஆஸ்திரேலியா ரன் எடுக்காமல் திணறியது. ஹாதின் மட்டும் 43 ரன் எடுத்தார். பின் வரிசையில் ஜான்ஸன் 1, ஸ்டார்ட் 0, குமின்ஸ் 7 ரன் என எடுத்தனர். இறுதியில் 32.2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன் எடுத்தது. பின்னர் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலந்து அணி, 9 வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்து ஆடி வருகிறது.

நாடாளுமன்றத்தை அடைந்தார் அருண் ஜேட்லி

jaitly இன்று நாடாளுமன்றத்தில் 2015-2016ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்ற வளாகம் சென்றடைந்தார்.

கடன் தொல்லை: சிறுமிகள் இருவர் விஷம் கொடுத்துக் கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், கடன் தொல்லையால் பெற்றோர் தங்கள் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்ததில் இருவரும் பலியாயினர். தற்கொலைக்கு முயன்ற கணவன்-மனைவி இருவரும் உயிர் பிழைத்து, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் முல்லாபாளையம் தெருவில் வசிக்கும் பழனி என்பவரது மகன் வெங்கடேசன் (35). கட்டிட மேஸ்திரியான இவரது மனைவி அம்மு (32). இவர்களுக்கு கோமதி (9), கவிமதி (10) என 2 மகள். சின்னகாஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் கோமதி 5-ம் வகுப்பும், கவிமதி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். வெங்கடேசன் சொந்தமாக வாடகைக்கார் ஓட்டினார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஏற்கெனவே பலரிடம் வாங்கிய கடனாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த வெங்கடேசனும் அம்முவும், குழந்தைகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் இருவரும் சேர்ந்து, தங்கள் 2 மகள்களுக்கும் விஷ விதையை அரைத்து கொடுத்து குடிக்கச் செய்தனர். பின்னர் தாங்களும் விஷத்தை குடித்தனர். சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கி விழுந்து, வாயில் நுரை தள்ளியபடி வீட்டுக்குள் கிடந்தனர். இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 4 பேரும், உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் கவிமதி, கோமதி ஆகியோர் இறந்தனர். வெங்கடேசன், அம்மு இருவரும் உயிர்பிழைத்து, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் எல்.ஆர்.எஸ். பாளையம் பகுதியில் வீட்டில் சிலிண்டர் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானார். இரவு சிலிண்டர் திடீரென வெடித்ததில், தென்காசி அருகே காற்றாலையில் வேலை செய்யும் அய்யப்பன் என்ற தொழிலாளி பலியானார்.

உல்லாச படகுப் பயணம்: நிதின் கட்கரி மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

nitin_gadkariபுது தில்லி: தனியார் நிறுவனம் ஒன்று சலுகையாக அளித்த உல்லாசப் படகுப் பயணத்தை, மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி மேற்கொண்டதாக, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 2013 ஜூலையில், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான உல்லாசப் படகில், அந்நிறுவனத்தின் செலவில் பயணம் செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டு கடல் பகுதியில் 2 நாள் உல்லாச இரவுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அந்றுவனம் சலுகை அளித்து வசப்படுத்தியுள்ளது. நிதின் கட்கரி போன்ற அரசியல்வாதிகளை மகிழ்விக்க அந்நிறுவனம் உல்லாசப் படகுகளை பயன்படுத்துகிறது. இதன் மூலம் அரசின் முக்கிய ரகசியங்கள் உள்ளிட்டவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் இது தீவிர பிரச்சினையாகும். அரசியல்வாதிகளுக்கு அந்நிறுவனம் ஸ்மார்ட் போன்களை கொடுப்பதுடன், அதற்கான மாதாந்திரக் கட்டணத் தொகையையும் செலுத்தி வருகிறது. எனவே நிதின் கட்கரி உல்லாசப் படகு பயணம் விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். – என்று கூறப்பட்டுள்ளது. இதனை நிதின் கட்கரி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, நான் எப்போதும் புதுமையை ரசிக்க விரும்புவன். இதனால் தனியார் நிறுவனத்தினர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். இந்தப் படகுப் பயணத்தின் போது நான் அமைச்சரோ, எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட எந்த அரசு பதவியையும் வகிக்கவில்லை. மேலும் இந்தப் பயணத்துக்காக எனது சொந்தப் பணத்தையே செலவு செய்தேன். நான் எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தும் பணம் பெறவில்லை. இதில் எந்த தவறும் செய்யவில்லை” என்றுள்ளார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அருண் ஜேட்லி: சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா?

arun-jaitley புது தில்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 2015–2016–ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நரேந்திர மோடி அரசில் அவர் தாக்கல் செய்யும் முதலாவது முழுமையான பட்ஜெட் இது என்பதால் எதிர்ப்பார்ப்புகள் கூடியுள்ளன. வழக்கம் போல், நடுத்தர மக்களின் ஆதரவைத் தக்க வைக்கவும், பெருக்கிக் கொள்ளவும் பட்ஜெட் வழி கோல வேண்டும் என்பது மோடியின் எதிர்பார்ப்பு. வருமான வரி செலுத்தும் மாத சம்பளக்காரர்கள், இந்த பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்கள் வருமான வரி மட்டுமின்றி, அதன் மீது கல்விக்கான கூடுதல் வரியையும் செலுத்தி வருகிறார்கள். விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், அதற்கேற்ப வரிவிலக்குத் தொகை உயராததால், அவர்களின் சுமை அதிகரித்துள்ளது. அதுபோல், வணிக நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்துக்கான சலுகைகளை எதிர்ப்பார்த்துள்ளனர். இது குறித்து நிபுணர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள்…. பணவீக்க உயர்வாலும், குடும்பச் செலவுகளின் உயர்வாலும் மாத சம்பளக்காரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரிச்சலுகை அவசியம். கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு பயனளிக்கக்கூடிய எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தற்போதும் வரி விலக்கு பெறுவதற்கான அதிகபட்ச போக்குவரத்து படி, மாதத்துக்கு ரூ.800 ஆக உள்ளது. ஆனால், ஒரு நாளைக்கே போக்குவரத்து செலவு ரூ.200 ஆகும்போது, இந்த தொகை உயர்த்தப்பட வேண்டும். இதுபோல், வரி விலக்குக்கான மருத்துவ செலவுத்தொகை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் என்பது மிகக்குறைவான தொகை. நடைமுறைக்கு ஏற்ப, இத்தொகையையும் அதிகரிக்க வேண்டும். வரி விலக்குக்கான குழந்தைகள் படிப்பு செலவு, மாதத்துக்கு ரூ.100 ஆக உள்ளதை அதிகரிக்க வேண்டும். சம்பள வருமானத்தில் நிலையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்துக் கொள்ளும் முறை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். உபரி வருமானம் மீதான வரி விதிப்பு, எல்லா பிரிவு ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக, வீட்டு கடன் வட்டிக்கான கழிவு, ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாகவே உள்ளது. ஆனால், வீடுகளின் விலை கணிசமாக உயர்ந்து விட்ட நிலையில், இத்தொகையை குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இதன்மூலம், மாத சம்பளக்காரர்கள் சொந்த வீடு வாங்க முடிவதுடன், அனைவருக்கும் வீடு வழங்குவதற்கான அரசின் சுமையும் குறையும். கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வரும் சிறப்பு புலனாய்வு குழு, கருப்பு பணத்தை ஒழிக்க பல்வேறு சிபாரிசுகளை சுப்ரீம் கோர்ட்டிடமும், மத்திய அரசிடமும் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. அதை ஏற்று, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான கொள்கை முடிவுகளை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பட்ஜெட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி ஏய்ப்பு செய்வதை ‘குற்றம்’ என்று அறிவிக்க சிறப்பு புலனாய்வு குழு சிபாரிசு செய்துள்ளது. எனவே, ரூ.50 லட்சத்துக்கு மேல், வரி ஏய்ப்பு செய்பவர் மீது, வருமான வரி சட்டப்படி வழக்கு தொடருவது கட்டாயமாக்கப்படும் என்று தெரிகிறது.