ஐபில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஸ்ரீசாந்தைக் கொல்ல முயற்சி நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நடத்தும் ஐபிஎல் 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில், ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீசாந்த் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஸ்ரீசாந்தின் சகோதரி கணவர் மதுபாலகிருஷ்ணன். பிரபல மலையாளத் திரைப்படப் பாடகரான இவர், இன்று மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த பகீர் தகவலைத் தெரிவித்துள்ளார். அதில் “திஹார் சிறையில் ஸ்ரீசாந்தைக் கொல்ல முயற்சி நடந்தது. கொலைக் குற்றவாளியான தாதா ஒருவர் ஸ்ரீசாந்தை கூர்மையான கதவு போல்ட் மூலம் தாக்க முயன்றார். அதிர்ஷ்டவசமாக இதில் காயமின்றி ஸ்ரீசாந்த் தப்பினார். இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீசாந்தோ அவரது குடும்பத்தினரோ சிறை அதிகாரிகளிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இந்தத் தகவலை ஸ்ரீசாந்த் எங்களிடம் தெரிவித்தார்” என்று கூறினார். இருப்பினும் இந்தத் தகவல் தொடர்பாக ஸ்ரீசாந்த் எதுவும் யாரிடமும் கூறவில்லை.
திஹார் சிறையில் ஸ்ரீசாந்தை கொல்ல முயற்சி நடந்ததாக குடும்பத்தினர் தகவல்
கோத்ரா: கலவரத்துக்குப் பின்பு 4 பேர் எரிக்கப்பட்ட வழக்கில் இருந்து 6 பேர் விடுவிப்பு
குஜராத் மாநிலம் கோத்ராவில் நிகழ்ந்த ரயில் எரிப்புச் சம்பவத்துக்கு மறு நாள் குஜராத் மாநிலம் சபர்கந்த் மாவட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சையத் தாவூத், ஷகீல் தாவூத், முகமது அஸ்வத், உள்ளூர் ஓட்டுநர் யூசூப் சுலைமான் ஆகிய நால்வர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து 6 பேர் விடுவிக்கப்பட்டனர். கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் நடைபெற்ற கலவரத்தில், பிரிட்டனைச் சேர்ந்த 3 பேரும் உள்ளூர்வாசி ஒருவரும் ஒரு கும்பலால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு குஜராத் சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் கைது செய்யப்பட்ட மிதன்பாய் படேல், சந்து, பிரஹலாத் படேல், ரமேஷ் படேல், மனோஜ் படேல், ராஜேஷ் படேல், காலாபாய் படேல் உட்பட 6 பேரை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 81 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 3 நேரடி சாட்சியங்கள் பிறழ் சாட்சியமாக மாறிய நிலையில் 6 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாணவிக்கு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டருக்கான மாநில விருது
நெல்லை:- சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் சார்பில் சிறந்த சேவைக்கான மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2013–2014 ஆண்டுக்கான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவில் படிக்கும் மாணவி ரீட்டாவுக்கு சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட தொண்டருக்கான மாநில விருது கிடைத்துள்ளது. இந்த விருதை சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்க ஆணையாளர் பிரவீன்குமார் வழங்கி பாராட்டினார். விருது பெற்று சாதனை படைத்த மாணவி ரீட்டாவை கல்லூரி தலைவர் பாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணை தொழில்நுட்ப பணிகள்: இஸ்ரோ தலைவர் கிரண்குமார் ஆய்வு
நெல்லை:- திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மையம் உள்ளது. அங்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணை தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இத்தகைய பணிகளை ஆய்வு மேற்கொள்ள இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வந்தார். ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணை தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– ராக்கெட் ஏவுதளம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணையின் 4வது கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. மொத்தம் 11 கட்ட சோதனைகள் செய்யப்பட உள்ளன. பரிசோதனைகள் முடிவுற்ற பிறகு அடுத்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் அந்த ஏவுகணை விண்ணில் ஏவப்படும். என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.
பொது வினியோக முறையை அழிக்கத் துடிப்பதா என மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை: உணவு மானியத்துக்கு பணம் என்ற வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார், இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுவினியோகத் திட்டத்தின்படி நியாயவிலைக் கடைகளில் உணவு தானியங்கள் வழங்குவதை கைவிட்டு, அதற்குப் பதிலாக நுகர்வோருக்கு உணவு மானியத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இச்சீரழிவு நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திய உணவுக் கழகத்தை சீரமைப்பதற்காக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி அதன் அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்தது. உணவுப் பாதுகாப்பு சட்டப்படி பயனடைபவர்களின் எண்ணிக்கையை 67 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும்; உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் அந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது ஆகியவை தான் சாந்தகுமார் குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ஆகும். அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம் என்பது அடுத்த பரிந்துரையாகும். சாந்தகுமார் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுமே அதில் உள்ள பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்றும், அவற்றை செயல்படுத்தினால் நியாயவிலைக் கடைகளை மூட வேண்டிவரும் என்றும் மத்திய அரசை எச்சரித்திருந்தேன். இப்பரிந்துரைகளை நாடு முழுவதும் ஒரேநேரத்தில், ஒட்டுமொத்தமாக செயல்படுத்தினால் மக்கள் கொதித்து எழுவார்கள் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசு, இவற்றில் முதல் இரு பரிந்துரைகளை விடுத்து கடைசி பரிந்துரையை மட்டும் செயல்படுத்த தீர்மானித்திருக்கிறது. உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக உணவு மானியத்தை பணமாக வழங்க வேண்டும் என்ற இந்த பரிந்துரையை முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவது பற்றி அனைத்து யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பிப்ரவரி 10 ஆம் தேதி மத்திய உணவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் இந்த பரிந்துரையை 3 வழிகளில் செயல்படுத்தலாம் என்று மத்திய உணவுத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இவற்றில் முதலாவது, நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அவற்றுக்கான மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வெளிச்சந்தையில் பொருட்களை வாங்கிக் கொள்ளும்படி கூறுவது ஆகும். இரண்டாவது, நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை சந்தை விலை கொடுத்து பொதுமக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்; இதற்காக பொதுமக்கள் கூடுதலாக எவ்வளவு செலவழிக்கிறார்களோ, அந்த தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது ஆகும். மூன்றாவது, உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை இப்போது உள்ளவாறே வழங்குவது; ஆனால், குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைத்தவர்களுக்கு மட்டுமே உணவு தானியங்களை வழங்குவது என நிபந்தனை விதிப்பதாகும். முதல்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ள இத்திட்டத்தை அடுத்தகட்டமாக மாவட்டத் தலைநகரங்கள், மாநகராட்சிகள் உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு முன்மொழிந்துள்ள 3 வழிகளில் கடைசி வழியை நடைமுறைப்படுத்தினால், மக்களுக்கு சில தேவையற்ற அலைச்சல்கள் தான் ஏற்படுமே தவிர, வேறு பாதிப்புகள் ஏற்படாது. அதுமட்டுமின்றி, ஆதாருடன் இணைக்கப்படுவதால், போலி குடும்ப அட்டைகளும் ஒழிக்கப்படும். ஆனால், 3 வழிகளை தெரிவித்துள்ள மத்திய அரசு, அதில் எதைக் கடைபிடிப்பது என்பதை யூனியன் பிரதேச அரசின் விருப்பத்திற்கு விடாமல், முதல் வழியை, அதாவது மக்களின் வங்கிக் கணக்கில் மானியத்தைச் செலுத்திவிட்டு, உணவுப்பொருட்களை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ளும் முறையை செயல்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது; கண்டிக்கத்தக்கது. உணவு மானியத்தை பணமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினால், ஆண்டுக்கு குறைந்தது ரூ.30,000 கோடி மிச்சமாகும் என்ற எண்ணத்தில் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. ஆனால், இது பொது வினியோகத் திட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது ஆகும். ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொதுவினியோகத் திட்டம் கொண்டுவரப்பட்டது. உழவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் நேரடி கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இப்பரிந்துரை உன்னதமான இரு திட்டங்களையும் அழித்துவிடும். அத்தகைய சூழலில் ஏழை மக்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்கும் நிலையும், உழவர்கள் தங்களின் விளை பொருட்களை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலையும் ஏற்படும். அப்படி ஒரு நிலை உருவானால் ஏழைகளும், விவசாயிகளும் வாழ முடியாத நிலை உருவாகும். எனவே, பொதுவினியோகத்திட்டத்தையும், விவசாயத்தையும் அழிக்கும் சக்தி கொண்ட இந்தப் பரிந்துரையை செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பிணைக் கைதிகளை கழுத்தறுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதி யார்?: வெளியான தகவலால் பரபரப்பு
வெளிநாட்டு பிணைக் கைதிகளை கழுத்தறுத்துக் கொல்லும் ஐ.எஸ் பயங்கரவாதி தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமது அமைப்புக்கு எதிராகச் செயல்படும் நாட்டுக் குடிமக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தப் பிணைக் கைதிகளை தலையைத் துண்டிக்கும் வீடியோ காட்சிகளில் முகமூடியுடன் தோன்றிய ஐ.எஸ் பயங்கரவாதி யார் என்பது பற்றி விவரங்கள் சில வெளியாகியுள்ளன. ஜிஹாதி ஜோன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இவரது உண்மையான பெயர் மொஹமட் எம்வாசி(Mohammed Emwazi). இவர் குவைத்தில் பிறந்து மேற்கு லண்டனில் வசிக்கும் பிரிட்டன் குடிமகன். கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க செய்தியாளர் ஜேம்ஸ் போலியை தலைத் துண்டிக்கும் வீடியோ முதல் பல்வேறு வீடியோவில் மொஹமட் எம்வாசி தோன்றியுள்ளார். இவர் குறித்து பிரிட்டன் போலீசாருக்கு ஏற்கேனவே தகவல்கள் தெரியும் என்று சர்வதேச ஊடகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்கக் கோரி பாடலாசிரியர் தாமரை தர்ணா
சென்னை: ஓடிப் போன தன் கணவரை சேர்த்து வைக்கக் கோரி கவிஞரும் திரைப் பாடலாசிரியருமான தாமரை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்,. இது குறித்து அவர் எழுதியதாக கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம்…. அன்புள்ள தமிழ் மக்களுக்கு, வணக்கம், கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமாகிய நான் இன்று உங்கள் முன்வேறொரு செய்தியோடு நின்று கொண்டிருக்கிறேன். ‘சொல்லொண்ணாத் துயரம்” என்று இரண்டுஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் அவற்றை உங்கள் முன் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று அத்தகைய சூழல் நேர்ந்து விட்டது. மிகவும் கசப்பான சூழ்நிலைதான் என்றாலும்,இதில் என் சொந்த நலன் மட்டுமல்லாது இன்னும் பலரின் வாழ்க்கை, தமிழ் இளைய தலைமுறையின்எதிர்காலம் போன்ற பொதுநலனும் கலந்திருப்பதால், நியாயம் கோரி மக்கள் முன் வரத்துணிந்தேன்.மனித உரிமைப் போராளியாகவும், தமிழ்த்தேசியவாதியாகவும் தன்னைஅடையாளப்படுத்திப்படுத்திக் கொள்கிற என் கணவர் திரு. தியாகு என்கிற தியாகராஜன் கடந்த23.11.2014ல் வீட்டை விட்டு ஒரு திருடனைப் போல் வெளியேறித் தலைமறைவாகி விட்டார். அதன் பின் இன்று வரை நான் அவரைக் காணவில்லை. என் சிறு வயது மகனுக்குக் கூற என்னிடம் பதில் இல்லை. சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு தமிழ்த்தேசியத் தலைவன் செய்கிற செயலாக இல்லை இது ‚கடந்த ஐந்து ஆண்டுகளாகவே அவர் வீட்டை விட்டு வெளியேற முயன்று கொண்டேயிருந்தார். அதற்காகப் பலப்பல உத்திகளைக் கையாண்டார். ஆதன் ஊடாக நான் பட்ட சித்ரவதைகளைக் கூற இயலவில்லை. எனினும் நான் பொறுமை காத்ததின் காரணம் இதில் என் குடும்ப நலன் மட்டுமின்றி, இவர்அடையாளப்படுத்திக் கொள்ளும் மனித உரிமைஃதமிழ்த்தேசிய அரசியல் ஆகியவற்றின் மரியாதையும்அடங்கியிருந்ததுவே…‚ 2012ல் இவர் வீட்டை விட்டு ஓடிய போது சில தமிழ்த் தலைவர்கள் நல் அறிவுரை கூறி வீட்டுக்குஅனுப்பி வைத்தனர் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.ஆனால் இன்று காலம் கடந்து விட்டது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டியநேரம் வந்துவிட்டது. நானும் என் மகனும் நியாயம் கோரித் தெருவிற்கு வந்திருக்கிறோம்.‘தமிழை நேசித்தேன், தமிழுக்காக உழைத்தேன், தமிழுக்காக என்னை அர்ப்பணித்துக்கொண்டேன், இன்று தெருவுக்கு வந்துவிட்டேன்.”ஊரறிந்த தமிழ்க்கவிஞராகிய எனக்கு ஏற்பட்ட இந்த அவலநிலைக்கு என்ன காரணம் ? யார்காரணம் ? இதன் பின்னணி என்ன ?தியாகு வீட்டை விட்டு ஓட, சொல்லிக் கொள்ளும் காரணம் ‘புரட்சிகர அரசியலுக்கு என்னைமுழுமையாக ஒப்படைத்துக் கொள்ளப் போகிறேன், அதற்குக் குடும்பம் தடையாக இருக்கிறது” என்பதுதான்.அது என்ன புரட்சி, அதென்ன அரசியல் ? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அறிந்து கொண்டு தமிழ் மக்களாகிய உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் இவர்ஒன்றும் காட்டுக்குள்ளோ, யாருமற்ற தீவுக்குள்ளோ போய் புரட்சி செய்யப் போவதில்லை. தமிழ் மக்களாகிய நமக்காகத்தானே புரட்சி செய்யப் போகிறார் ? எனவே அது என்னவகைப் புரட்சி,அதன் நன்மைஃதீமை என்ன என்பதை அறிந்து கொள்ள நமக்கு உரிமை இருக்கிறது.தியாகு 2001 இல் என்னைப் பெண் கேட்டு என் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், ‘என்னோடுபொது வாழ்க்கையில் இணைந்து நிற்கும் தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவரோடும் பேசி,அவர்களின் ஒப்புதலையும் பெற்றுத்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன், என்னைப் போலவே தாமரையையும்அவர்கள் நன்கறிவார்கள். எங்கள் மீதும் எங்கள் உறவின் மீதும் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்குஎன்றும் உண்மையுள்ளவர்களாக இருப்போம்” என்று உறுதி கூறியே என்னைத் திருமணம் செய்துகொண்டார்.இணைவதற்கு அனுமதி வாங்கிய தியாகு, வீட்டை விட்டு ஓடுவதற்கு இவர்களிடமெல்லாம் அனுமதிவாங்கினாரா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் முன் வந்து இதற்குப் பதில் சொல்ல வேண்டுகிறேன். அந்தப் பதிலினூடாக„தமிழ்த்தேசியம்… என்றால் என்ன, அதன் பின்விளைவுகள் என்ன, நாளை இவர்கள் அமைக்கப் போகிற„தமிழ்த்தேசத்…தில் என்னவகையான விழுமியங்கள் இடம் பெறப்போகின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.தமிழ் கற்றால், தமிழ்ப்பணி ஆற்ற வந்தால் தெருவுக்குத்தான் வர நேரிடும் என்பதுதான்என் வாழ்க்கை தமிழ்மக்களுக்குத் தரும் செய்தியா அல்லது தவறு, ஒரு தமிழ்ப்பெண்ணுக்கு அநீதிஇழைக்கப்படுமென்றாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நியாயம் கட்டாயம் வழங்கப்படும்என்பது செய்தியா என்று பார்க்க விரும்புகிறேன்.என்னுடைய 1. வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடித் தலைமறைவான தியாகு, பகிரங்கமாகமன்னிப்புக் கேட்டு வீடு திரும்ப வேண்டும்.
- நடுநிலையான ஒரு குழு அமைக்கப்பட்டு, தியாகுவின் கடந்த 20 ஆண்டு கால வாழ்க்கை விசாரணைசெய்யப்பட வேண்டும்.நான் கனவு கண்ட தமிழ்த்தேசம் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றைஅடிப்படையாகக் கொண்டது. அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன்.இப்போது அதற்கு ஊறு நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.
எனவே சாரத்தில் என் போராட்டம்என்பது பொது வாழ்க்கையில், குறிப்பாக தமிழ்ஃதிராவிடத்தமிழ் அரசியலில் அறம், ஒழுக்கம்,நேர்மை, உண்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. எனக்கு நியாயம் கிடைக்காமல் நானும் என் மகனும் வீடு திரும்ப மாட்டோம். இறக்கநேர்ந்தாலும் தெருவிலேயே இறப்போம். எனக்கும் என் மகனுக்கும் என்ன நேரிட்டாலும் அதற்குத்தியாகுவே பொறுப்பு.நியாயத்தை எடுத்துக் கூற ஒரு தமிழ்ச் சான்றோர் கூடவா இந்தத் தமிழ்ச் சமூகத்தில் இல்லாமல்போய் விடுவார்கள் ? இப்படிக்கு, தாமரை
முப்தி முகமது சையத் மார்ச் 1-ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார்: பிரதமரைச் சந்தித்த பின் தகவல்
புது தில்லி: காஷ்மீர் மாநில முதல்வராக முப்தி முகமது சயீது வரும் மார்ச் 1 ஆம் தேதி பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. .தில்லி வந்த அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார் அப்போது அம்மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து பிரதமருடன் விவாதித்தார். இருவருடனான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இச்சந்திப்பின் போது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முப்தி அழைப்பு விடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது. முப்தியின் அமைச்சரவையில் 12 பா.ஜ.க. மந்திரிகளும், 13 பி.டி.பி. மந்திரிகளும் இடம்பெறலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் எழுத்தாளர் மீது தாக்குதல்!
கரூர்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் கண்மண் தெரியாமல் தாக்கிவிட்டனர் என்று எழுத்தாளர் முருகேசன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர், “பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு,’ என்ற புத்தகம் வெளியிட்டுள்ளார். புத்தகத்தில், புலியூரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட சமூகத்தை இழிவுபடுத்தியும், ஆபாசமாகவும் எழுதியுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், புலியூரில் இருந்த எழுத்தாளர் முருகேசனை, ஒரு கும்பல் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில், போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெறும் எழுத்தாளர் முருகேசன் இது குறித்துக் கூறியபோது, வெள்ளப்பாறை ஆனைப்பட்டியை சேர்ந்த நான், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் புலியூர் வந்தேன். தற்போது, எல்.ஐ.சி., முகவராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த, 15 ஆண்டுக்கு முன் கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன். கடந்த, ஆறு ஆண்டுகளாக, “பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு,’ என்ற சிறுகதை புத்தகத்தைத் தொகுத்தேன். இதில், 13 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. “நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்,’ என்ற பகுதியில் ஒரு சமூகத்தை புண்படுத்தும் படி எழுதியிருப்பதாகக் கூறினர். யாரையும் புண்படுத்தும்படி நான் எழுதவில்லை. எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களையும் குறிப்பிடவில்லை. இருப்பினும், எனக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் மிரட்டல் விடுக்கப் பட்டது. அதனால், தவறாக எழுதி இருந்ததால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அப்பகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களிடம் தெரிவித்தேன். இருப்பினும் ஒரு கும்பல் வீட்டிலிருந்த என்னைத் தாக்கியது என்று கூறினார்.
தமிழக மீனவர்கள் 66 பேர் கைது விவகாரத்தில் இலங்கையை எச்சரிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கையை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ் இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், வங்கக்கடலில் கோடியக்கரை அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 66 பேரை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. கோடியக்கரையில் தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை மீனவர்களும் அங்கு வந்து மீன்பிடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து சென்ற மீனவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், விரைந்து வந்த சிங்களப்படையினர் தமிழக மீனவர்கள் 43 பேரை தாக்கி கைது செய்துள்ளனர். அதேபகுதியின் இன்னொரு இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 23 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழ் மீனவர்களை சிங்களப் படையினர் தாக்கி கைது செய்திருப்பது இந்திய இறையாண்மை மீதான தாக்குதலாகும். இலங்கையில் இராஜபக்சே அரசு வீழ்த்தப்பட்ட பிறகு தமிழக மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பரப்புரைகள் செய்யப்பட்டன. ஆனால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வது வருத்தமளிக்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய அறிவுறுத்துவதுடன், இனியும் இத்தகைய போக்கு தொடர்ந்தால் இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். அடுத்த மாதம் இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனாவை சந்திக்கும் போது, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

