Home Blog Page 6303

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை எளிதில் வென்றது நியூசிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டியில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்காட்லாந்து துவக்க வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். ஸ்காட்லாந்து அணி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் சுமாராக நின்று விளையாடிய மேச்சன் – பெரிங்டன் ஜோடி சற்று அணியின் ஸ்கோரை உயர்த்தியது. மேச்சன் 56 ரன், பெரிங்டன் 50 ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின் வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க இறுதியில் ஸ்காட்லாந்து அணி 36.2 ஓவரில் ஆல் அவுட் ஆனது. ஸ்காட்லாந்து அணி 142 ரன் சேர்த்து 143 என்ற எளிய இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குப்டில் 17 ரன்னிலும் மெக்கல்லம் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். எல்லியாட்-வில்லியம்சன் ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. வில்லியம்சன் 38 ரன்னிலும், எல்லியாட் 29 ரன்னிலும் வெளியேறினர். பின் வந்த வீரர்கள் நிதானமாக விளையாடி, 24.5 ஓவரில் 146 ரன் எடுத்தனர். நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகாசிவராத்தி: மும்பை பங்குச் சந்தை விடுமுறை

mumbai-stock-exchange மகாசிவராத்திரி விழா கொண்டாடப் படுவதை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி விழாவான இன்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய மாலை நேர வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 29,135.88 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 3.85 புள்ளிகள் உயர்ந்து 8,809,35 என்ற அளவில் இருந்தது.

சங்கரராமன் கொலைவழக்கில் விடுதலையான தாதா அப்பு புற்றுநோயால் மரணம்

சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி விடுதலையான தாதா அப்பு புற்றுநோய் பாதிப்பில் உயிரிழந்தார். காஞ்சிபுரம் கோயில் கணக்காளர் சங்கரராமன் கொலையில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலையான தாதா அப்பு ஆந்திராவில் வாழ்ந்துவந்தார். அங்கு செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு உட்பட சில வழக்குகளின் கீழ் அப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், எலும்புப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட அப்புவுக்கு காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் திங்கட்கிழமை நேற்று மாலை உயிரிழந்தார்.

காங்கிரஸுக்கு புத்துயிரூட்ட பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டும்: மீரா குமார்

meerakumar பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகளான பிரியங்கா வதேரா முழுநேர அரசியலுக்கு வரவேண்டும். அவர் வந்தால் வரவேற்பேன் என மக்களவை முன்னாள் அவைத்தலைவர் மீரா குமார் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால், காங்கிரஸுக்கு புதிய தலைமை தேவை என அக்கட்சித் தொண்டர்கள் விரும்புகின்றனராம். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். அண்மைக் கால தேர்தல் தோல்விகளின் போது காங்கிரஸ் தொண்டர்கள் இதையே வலியுறுத்தினர். இந்நிலையில், 2 நாள் பயணமாக பெங்களூரு வந்திருந்த மீராகுமார், நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். அவரை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வர் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அனைத்துப் பிரிவினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகப் பாடுபடும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இதுபோன்ற கொள்கை வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. ஓட்டு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தாற்காலிகமானது. இந்த நேரத்தில், பிரியங்கா முழுநேர அரசியலில் ஈடுபட்டால் காங்கிரசுக்கு பலமாக அமையும். சோனியாவைப் போல பிரியங்காவுக்கும் மக்கள் செல்வாக்கு உள்ளது. சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை பிரியங்கா திறம்பட நிர்வகித்து வருகிறார். முழுநேர அரசியலுக்கு பிரியங்கா வந்தால் வரவேற்பேன்’ என்றார்.

‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாகிறது  ‘நூறாவது நாள்’!

nooravathu-nalஎண்பதுகளில் கலக்கிய படம் ‘நூறாவது நாள்’ .அதன் தாக்கம் பலகாலம்இருந்தது.  இப்போது அந்தப் படம் மறு அவதாரம் எடுக்கிறது. அதே படம் ‘ரீபூட்’ முறையில் மீண்டும் உருவாக இருக்கிறது. படத்தை இயக்க இருப்பவர் ‘நூறாவது நாள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன். அது என்ன ரீபூட்? பிரபலமாகி வெற்றி பெற்ற ஒரு படத்தை மீண்டும் எடுக்கும் போது ‘ரீமேக் ‘செய்வார்கள். அதாவது அதேகதையை வேறு நடிகர்கள் கொண்டு  மாற்றங்களுடன் மீண்டும் எடுக்கப் படுவது  ரீமேக். சீக்வெல் எனப்படுவது அதே கதையின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது. ரீபூட் என்பது அதே மையக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு கதைப் போக்கு, திரைக்கதை, காட்சிகள், நடிகர்கள், பாத்திரங்கள் எல்லாவற்றையும் காலத்துக்கேற்ப மாற்றி உருவாக்குவது. ஹாலிவுட்டில் ‘ஹல்க்’, ‘சூப்பர்மேன்’, பேட்மேன்’ ,’ஸ்பைடர் மேன்’ ‘டெர்மினேட்டர்’ போன்ற பல படங்கள் ரீபூட் முறையில் உருவாகி வெற்றிபெற்றுள்ளன. இன்றும் தொடர்கின்றன. தமிழில் அப்படி உருவாகும் முதல்படம்தான் ‘நூறாவது நாள்’ . படத்தை இயக்கும் ரகுமணிவண்ணன் கூறுகிறார்.” அப்பா இயக்கிய படங்களில் பெரிய வெற்றி பெற்றபடம் ‘நூறாவது நாள்’ . பரபரப்பாக பேசப்பட்ட படமும் கூட. இதை ரீபூட் முறையில் எடுக்க முன்பே முயன்றேன். அப்பா, அம்மாவின் திடீர்  மறைவு என்னை மிகவும் பாதித்தது. எனவே ஒரு வருடம் இங்கிலாந்தில் தங்கியிருந்தேன். மனம் அமைதியடைந்தது. அங்கு சிலரைச் சந்தித்தேன் நண்பர்களுடன் பேசினேன். பலரும் என் முயற்சிக்கு ஊக்கம் தந்தார்கள்.ஆக்ஷன் படத்தை ரீமேக் செய்பலாம் , ஆனால் த்ரில்லரை அப்படி எடுக்க முடியாது. இங்கே வந்த பிறகு அதைப் பற்றி பல விவாதங்கள் போனது. அதே கதையை வைத்து ஒரு படத்தை மறுபடியும் அப்படியே எடுப்பதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. அந்தக் கதை எல்லாருக்கும் தெரிந்து விட்டதால் எதிர்பார்ப்பு இருக்காது. தெரிந்த விஷயமாக இருப்பதில் என்ன த்ரில் இருக்கப் போகிறது? எனவேதான் இப்படி எடுக்க முடிவு செய்தேன். கதை, காட்சிகள் திரைக்கதை எல்லாவற்றையும் முழுக்க முழுக்க மாற்றி வேறு ஒரு திசையில் விறுவிறுப்புடன்  செல்லும்படி உருவாக்கியிருக்கிறோம். நாயகனாக ‘சதுரங்கவேட்டை’ நட்ராஜ் நடிக்கிறார்.திரைக்கதை வேலைகள் முடிந்து விட்டாலும் திரைக்கதையை செதுக்குவது நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. அதில் திருப்தி வரும்வரை படப்பிடிப்புக்கு செல்ல மாட்டோம். என்னுடன் இதில் சிபிராஜ், யுகே செந்தில்குமார் உதவியிருக்கிறார்கள். பெரிதும் துணையாக இருந்தார்கள். “என்றார் ரகு மணிவண்ணன். ‘நூறாவது நாள்’ புது வடிவத்துக்கு இசை நிரோ பிரபா, இவர் லண்டனில் இருக்கிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானின் மாணவர். ஒளிப்பதிவு: யுகே செந்தில்குமார். தயாரிப்பு : ஏடி எம். புரொடக்ஷன்ஸ். கதை: மணிவண்ணன். திரைக்கதை வசனம் இயக்கம் :ரகுமணிவண்ணன். படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார். ‘சதுரங்கவேட்டை’  நாயகனும் பிரபல ஒளிப்பதிவாளருமான  நட்ராஜ் இப்போது விஜய் நடிக்கும் ‘புலி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். மார்ச்சில் முடித்து விடுவார். எனவே  ‘நூறாவது நாள்’ படப்பிடிப்பு ஏப்ரலில் ஆரம்பமாக இருக்கிறது. தமிழில் இதுவரை செய்யப்படாத புதிய முயற்சியாக ரீபூட் ஆகிறது. எந்த புதிய அனுபவத்துக்கும் ரசிகர்கள் தயாராகவே இருக்கிறார்கள். எடுத்த ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு வகையிலான படமாக எடுத்தவர் மணிவண்ணன். அவரது மகன் இயக்க வருகிறார். அப்பா பெயரைக் காப்பாற்றிட .வாழ்த்துக்கள்!

கள்ளக் காதலனுடன் மனைவியையும் வெட்டிக் கொன்றவர் போலீஸில் சரண்

murder தனது மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவர் ஆத்திரம் தீராமல் தன் மனைவியையும் வெட்டிக் கொன்று, போலீஸில் சரண் அடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேயுள்ள மலையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (54). சலவைத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வரும் இவருக்கு ஒரு மனைவி ஜெயலட்சுமி(42). இவர்களின் மகன் முத்துக்குமார்(18) பொறியியல் படித்து வருகிறார். அதே பகுதியில் குடியானவத் தெருவைச் சேர்ந்த விவசாயி வீரமணி(42)-க்கும் ஜெயலட்சுமிக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த கருணாநிதி ஜெயலட்சுமியை கண்டித்துளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஜெயலட்சுமி வீரமணியுடனான தொடர்பைத் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வீரமணி வந்துள்ளார். வீட்டின் பின்புறம் உள்ள குளியலறை அருகே ஜெயலட்சுமியுடன் வீரமணி பேசிக் கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த கருணாநிதி இதைக் கண்டு கோபத்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து வீரமணியைத் தாக்கியுள்ளார். கல் தாக்குதலில் வலி தாங்க முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்த வீரமணியை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து சரமாரியாக வெட்டியுள்ளார் கருணாநிதி. இதனால் வீரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு பயந்துபோன ஜெயலட்சுமியையும் ஆத்திரம் குறையாத கருணாநிதி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் அவரும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் கருணாநிதி அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததை கூறி சரணடைந்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயில் கழிவறை வழியாக விழுந்த சிசு தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்த அதிசயம்

ஓடும் ரயிலில் கழிப்பறையில் பிறந்த குழந்தை, கழிப்பறை ஓட்டை வழியே தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்துள்ளது. இந்த அதிசயம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பவுரி பல்பி (32) சூரத்காரில் இருந்து ஹனுமன்கருக்குய் ரயிலில் பயணம் செய்தார். உடன் அவரது கணவரும் தாயாரும் பயணித்தனர். ஹனுமன்கர் ரயில் நிலையத்துக்கு 13கி.மீ. தொலைவில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. உடனடியாக ரயில் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கே அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் மயக்க நிலையில் இருந்ததால் குழந்தை கழிப்பரை ஓட்டை வழியே தண்டவாளத்தினுள் விழுந்தது. உடன் வந்த தாயாரும் கணவரும் பெண் கழிவறைக்குள் இருப்பதாக எண்ணியிருந்தனர். ஆனால், ஹனுமன்கர் ரயில் நிலையம் வந்த பின்னரே நடந்தவை அனைத்தும் தெரியவந்தது. இதை அடுத்து, ரயில்வே போலீஸார் உதவியுடன் கழிவறையில் மயங்கிக் கிடந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லபட்டார். கழிவறை ஓட்டை வழியாக விழுந்த சிசு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக் கொண்டது குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஸ்ரீரங்கத்தில் பாஜக.,வுக்கு வாக்குகள் குறைய தேமுதிக உள்ளடி வேலை காரணம்?

திருச்சி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எதிர்பார்த்தற்கும் மிகக் குறைவான வாக்குகளைப் பெற்று பாஜக தோல்வி அடைந்துள்ளது. அந்தக் கட்சிக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய வாக்குகள் கூட கிடைக்காத நிலையில், தேமுதிகவுக்கு என்று இருக்கும் வாக்கு வங்கியில் ஒரு சிறிதும் கூட கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்பது, பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தே.மு.தி.க., உள்ளடி வேலை பார்த்ததால்தான், பா.ஜ.,விற்கு குறைவான ஓட்டுகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானதால், பாஜக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக இந்தத் தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க., முடிவு செய்தது. தே.மு.தி.க., ஆதரவுடன், போட்டியிட பா.ஜ.க, விரும்பியது. இதனால், விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டார் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். பிறகு பாஜக வேட்பாளரையும் அறிவித்தது. ஆனால், பா.ஜ.க,வுக்கு ஆதரவு அளிப்பதாக தே.மு.தி.க., அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனாலும், திருச்சி மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள், பா.ஜ.க, வுடன் இணைந்து தேர்தல் பணி செய்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் வெளியான தேர்தல் முடிவுகளில், பா.ஜ.க.,வுக்கு 5,015 வாக்குகளே கிடைத்தது. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க.,வுக்கு, 16 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்த நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில், பா.ஜ.க,வுக்கு, தே.மு.தி.க.,வின் ஆதரவு முழுமையாகக் கிடைக்காததால், குறைந்தளவு வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம், தேமுதிக உள்ளடி வேலையில் ஈடுபட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினராக உறுதி மொழி ஏற்ற ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினர் வளர்மதி

valarmathi சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வளர்மதி, இன்று காலை சட்டப் பேரவை தலைவர் ப.தனபால் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அறையில், பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில், தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வளர்மதி ஜெயலலிதாவிடம் வாழ்த்து

ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார். அவர் நேற்று இரவு 7.10 மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு வந்தார். அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை சந்தித்து தாம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைக் காட்டி வாழ்த்து பெற்றார். இது குறித்து அ.தி.மு.க. வெளியிட்ட செய்திக் குறிப்பு: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது, திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, அ.தி.மு.க. மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினரும், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளருமான ப.குமார் எம்.பி., திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான ஆர்.மனோகரன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.