Home Blog Page 6304

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய டெர்மினல் பகுதி மேலாளர் லூக்காஸ் டேவிட்டின் செல்போனுக்கு வந்த ஒரு அழைப்பில், எதிர்முனையில் பேசிய வாலிபர், விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். சரியாக இன்று காலை 8 மணிக்கு அது வெடிக்கும் என கூறியுள்ளார். அதிகாலை 4.55 மணிக்கு வந்த இந்த தகவலால் டெர்மினல் மேலாளர் டேவிட் லூக்காஸ் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருச்சி மாநகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். விமான நிலைய காவல் அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்துக்கு விரைந்து சென்றனர். மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டது. 3 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது. அதன் பிறகு போலீசாரும், பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் திருச்சி விமான நிலையத்தில் இன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த செல்போன் எண் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, கீழவாடி தெருவை சேர்ந்த முகமது ஹூசேன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருக்காட்டுப்பள்ளி விரைந்தனர்.

நான் பூரண உடல் நலத்துடன் நன்றாகவே இருக்கிறேன்: நடிகை மனோரமா

Manoramaதனது உடல் நலம் குறித்து வெளியில் வந்த தகவல்கள் தவறானவை என்றும், தாம் பூரண உடல் நலத்துடன் நன்றாகவே இருப்பதாகவும் நடிகை மனோரமா கூறியுள்ளார். அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் மனோரமா. இந்நிலையில் மனோரமா உடல்நலம் குறித்து சென்னை, ஐதராபாத் மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் வதந்தி பரவியது. இது தொடர்பாக சில தெலுங்கு தொலைக்காட்சி சேனல்களில் செய்தியும் ஒளிபரப்பானது. இது கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் நடிகை மனோரமாவின் நலம் விரும்பிகள். அவரது மகன் பூபதிக்கு உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் குறித்து விசாரித்ததுடன், தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான செய்தி குறித்தும் கேட்டறிந்தனர். அப்போது மனோரமா உடல்நலத்துடன் இருப்பதாக அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, இந்த வதந்தி குறித்து விசாரிக்க தெலுங்கு தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பூபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், அம்மா நலமாக உள்ளார் என்று கூறி, ஃபோனை மனோரமாவிடமே கொடுத்தார். அப்போது நிருபரிடம் மனோரமா பேசியது, நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. எனக்கு உடல் நலக்குறைவு எதுவுமில்லை. நான் மிகவும் நலமாகவே இருக்கிறேன் எனது உடல்நலம் குறித்து விசாரித்ததற்கு மிக்க நன்றி. நான் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளேன். அதன்படி தெலுங்கு ரசிகர்கள் எனது உடல்நலனில் அக்கறை காட்டுவது எனக்கு பெருமையாக உள்ளது. ஆனால் நான் இறந்து விட்டதாக பரவிய வதந்தியால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். நடிப்புதான் என் உயிர்மூச்சு. ரசிகர்களின் கைதட்டல் எங்களை வாழவைக்கும் டானிக் போன்றது. அது எனக்கு முழுமையாக கிடைத்தது. எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் நான் நடிக்கவில்லை, வாழ்ந்து காட்டினேன் என ரசிகர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. – என்று நடிகை மனோரமா கூறினார்.

விவேக் சங்கரின் இயக்கத்தில் நதிமூலம் நாடகம்

nadhimulamவிவேக் சங்கர் எழுதி தயாரித்து இயக்கும் நாடகம் நதிமூலம். வரும் பிப்.20ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் நடைபெறவுள்ளது. கிரிஷ், மது, ப்ரேமா சதாசிவம், சிவாஜி சதுர்வேதி, நரேந்திர குமார், ஹரிணி கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

சிவ புராணம்

சிவபுராண பாடல் வரிகள்…..Lord-Siva நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான். கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய், எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியர் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதர் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வர் தம்கருத்தின்

உலகக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்ற இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துகள்

kohli உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,” உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். எதிர் வரும் போட்டிகளிலும் இது தொடர வேண்டும்,” என்றார். பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். உங்களை எண்ணி பெருமை அடைகிறோம்,’ என, தெரிவித்துள்ளார். இதே போல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி,” பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர்கள் செயல்பாடு பாராட்டுக்குரியது,” என்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்,” இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. இது நம்பிக்கையை தந்துள்ளது,” என்றார். இதனிடையே, இந்திய அணி இன்று பெற்ற வெற்றியை பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கோலி சாதனை: பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிகளில், சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் கோலி. மேலும், இதற்கு முன் அதிக ரன்கள் எடுத்த சச்சின் (98 ரன், 2003) சாதனையையும் முறியடித்தார். இந்திய பாகிஸ்தான் இரு அணிகளும் மோதிய உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் சயீத் அன்வருக்குப் (101 ரன், 2003) பின்னர், சதம் அடித்த இரண்டாவது வீரர் கோலி.

லிங்கா பட நஷ்ட விவகாரம்: “மெகா பிச்சை” போராட்டத்துக்கு முடிவு

Rajinikanth-Blocked-Becuase-Of-Lingaa சென்னை: லிங்கா திரைப்பட நஷ்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், மெகா பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்தது…. “’லிங்கா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை எங்களுக்குத் தெரிந்த ஒரே நபர் ரஜினிகாந்த்தான். அவரை நம்பித்தான் ‘லிங்கா’ படத்தை வாங்கினோம். பட புரமோஷனில் பேசிய ரஜினிகாந்த் படத்தைப் பற்றியும், கதையைப் பற்றியும் உயர்வாகப் பேசியதை அடுத்து, இந்தப் படத்தை வாங்க முடிவுசெய்தோம். ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. எனவே, விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும், சரியான பதில் இல்லாததால் கடந்த ஜனவரி 10-ம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தோம். அதன்பிறகு எங்களை அழைத்த திருப்பூர் சுப்ரமணி, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினிகாந்த் விரும்புவதாகவும், கணக்குகளை ஒப்படைக்குமாறு கூறியதையடுத்து வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தோம். விரைவில் நஷ்டத்தொகை வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடாமல் அமைதி காத்தோம். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் எங்களை தொடர்பு கொண்ட ரஜினியின் நண்பர் திருப்பூர் சுப்ரமணி, தயாரிப்பாளர் 10 சதவீத நஷ்ட ஈடு தொகை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இரண்டு மாத காலமாக எந்தவித முடிவுமின்றி சென்று கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையை முடித்து வைக்க ரஜினிகாந்த் முன்வராதது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. 45 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படத்தை 157 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, வெறும் 33 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாத இதயங்களை நினைத்து அதிர்ச்சியடைந்தோம். மனமில்லாத இவர்களை மல்லுக்கட்ட, பணமில்லாத எங்களுக்கு வேறு வழி கொடுக்காமல் அடுத்த கட்ட போராட்டத்திற்கு எங்களை தள்ளியுள்ளனர். இதற்கு மேலும் ரஜினிகாந்த் தலையிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வகை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து உண்மையை விளக்கி ‘மெகா பிச்சை’ என்ற பெயரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். இந்தப் போராட்டம் போயஸ் கார்டனில் அமைந்துள்ள ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இருந்து துவக்கப்படும். பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் முதல் பிச்சையை போட்டு போராட்டத்தை துவக்கி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இனி மேல் ரஜினிகாந்த் நடித்த படத்தை வாங்கி திரையிட்டால் பிச்சை எடுக்கும் நிலைதான் ஏற்படும் என்பதை விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கும் வண்ணமாகவும், ரஜினிகாந்த்தை நம்பினால் நடுத் தெருவில்தான் நிற்கவேண்டும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த போராட்டம் இருக்கும். இந்தப் போராட்டத்தில் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கையில் பதாகையும், திருவோடும் ஏந்தி பிச்சை எடுப்பார்கள். போராட்டத்தின் நோக்கம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். ‘லிங்கா’ படத்தை திரையிட்ட திரையரங்குகளின் வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேனர்கள் கட்டி, அதன் அருகில் உண்டியல் வைக்கப்படும். இந்த போராட்டத்தின் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

நீறில்லா நெற்றி பாழ்… அறிவிலா தமிழ் அரசியல் பாழ்…

நீறில்லா நெற்றி பாழ்.நெய் இல்லா உண்டி பாழ். ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்…. என்பது ஔவைப் பாட்டி நமக்கு உரைத்த தத்துவம்.அவர் இன்றிருந்தால் இன்னும் ஒன்றைச் சேர்த்திருப்பார். அது எதுவெனில் அறிவில்லா தமிழ் அரசியல் பாழ் என்பதாகும்.TNA-Sampanthan-Betrayer

அரசியல் என்பது மிகவும் நுணுக்கமானது. அரசியல்வாதிகள் தம்மை முழுமையாக அரசியலுக்கு அர்ப்பணிக்க வேண்டும். சொந்த அலுவல்களில் இருந்து விட்டு அல்லது சோர்ந்து தூங்கிவிட்டு அரசியல் நடத்த முடியாது. அதிலும் தமிழர்களைப் பொறு த்தவரை ஒவ்வொரு கணப்பொழுதும் எங்களுக்கான எதிர்ப்பு அரசியல் அரங்கேறலாம்.எனவே நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

எனினும் அடுத்தவர் நமக்கு அறிவுரைப்பதா என்ற தமிழ் அரசியல்வாதிகளின் கர்வமும் அறியாமையும் சேர்ந்து தமிழ் இனத்திற்கு பேராபத்தை ஏற்படுத்துகிறது.

மகிந்த ராஜபக்­ விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னர் தமிழ் மக்களை நசுக்குவதற்கு எடுத்த நடவடிக்கைகள் கொஞ்சமல்ல.அதன் பின்னணியில் சிங்களப் புத்திஜீவிகள் இருந்து வியூகம் அமைத்தனர்.

புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கும் எங்களுக்கு மான உறவை வெட்டிவிட மகிந்த அரசு கடும் முயற்சி களை மேற்கொண்டது.அதில் ஒன்றுதான் காணிப் பதிவு நடவடிக்கை ஆகும்.

காணிப்பதிவு என்பதை அரசு அறிமுகப்படுத்த, புலம் பெயர் தமிழ் உறவுகள் தாயகத்தில் இருந்த தங்கள் நிலபுலங்களைவிற்றுத்தீர்த்து தாய்மண்ணின் வேரறுத்து விடைபெற்றுக் கொண்டனர்.இந்நடவடிக்கை ஈழத்தமிழ் இனத்திற்குப் பேரிழப்பாகும்.

இவ்வாறாக ஒவ்வொரு விடயத்திலும் சிங்களப் புத்திஜீவிகளின் கருத்துரைப்புகளும் வியூகங்களும் மகிந்த அரசினால் அமுல்படுத்தப்பட்டது.

ஆனால், தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புத்திஜீவிகள் ஒன்றிணைந்த அணி ஏதும் உண்டா? என்றால் இல்லவே இல்லை.

தமிழ்ப் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து தமிழ் இனத் திற்கு சாதகமான வியூகங்களை அமைத்து, அதன் ஊடாக தமிழ் அரசியல் தலைமைகளை வழிப்படுத்த வேண்டும்.

எனினும் ஈழத்தமிழர்களின் முதலாவது புத்திஜீவி சம்பந்தர் என்பது போலவும், சம்பந்தர் எடுக்கும் தீர்மானங்களுக்கு மாற்றுத் தீர்மானம் இல்லை என்பது போன்றதுமான நிலைமை இங்கு உள்ளது.

இதனால் தனிமனிதத் தீர்மானம் எங்கள் இனத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதற்கு நல்ல உதாரணம் கிழக்கு மாகாண சபை விவகாரமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாண விடயத்தை தான் கையாளாமல் தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் கையளித்தார். இது மைத்திரியின் புத்திசாலித்தனம்.

இப்போது கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமதாக்கிக் கொண்டார். சம்பந்தர் படுதோல்வி கண்டார்.

தோல்வி வயப்பட்டவர் விடக்கூடிய அறிக்கையை சம்பந்தர் விட்டாராயினும் அந்த அறிக்கையின் காரம் மிகக் கம்மியாக இருந்தது என்பதையும் இங்கு கூறித்தான் ஆகவேண்டும்.

இதைவிடப் படுமோசமான விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்ததுதான்.

ஆக, சிங்களப் பேரினவாதத்தோடு பேச்சுநடத்தி உரிமை பெறவேண்டிய நிலைமையில் இருக்கும் தமிழ் இனம் தன்னிலும் சிறுபான்மையான முஸ்லிம் இனத்துடனும் பேசி அவர்களிடம் இருந்து பதவி பெறவேண்டிய பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளது. இங்குதான் அறிவில்லா தமிழ் அரசியல் பாழ் என்பது நிஜப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” நாளிதழின் ஆசிரியர் தலையங்கம். (12.02.2015)

தில்லி முதல்வராக பதவிப் பிரமாணம் ஏற்றார் அரவிந்த் கேஜ்ரிவால்

kejriwal புது தில்லி: தில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று காலை பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். தில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, அவரது அமைச்சரவை சகாக்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது. இன்று மாலை 4.30க்கு தில்லி மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறுகிறது.  

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் 82.5% வாக்குகள் பதிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் 82.5 % வாக்குகள் பதிவானது. சில மையங்களில் மட்டும், வாக்காளர்கள் அதிகமாக இருந்ததால், 6 மணிக்கு மேலும் வாக்குப்போட அனுமதிக்கப்பட்டனர். வாக்குகள் பதிவான இயந்திரம் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் வரும் 16ம் தேதி எண்ணப்படுகின்றன. மொத்தமுள்ள 322 மையங்களில், மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 60 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்கள், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 976 பேர் வாக்கு அளித்துள்ளனர். பெண்கள், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 77 பேர் வாக்கு அளித்துள்ளனர். திருநங்கைகள் 7 பேர் வாக்கு அளித்துள்ளனர்.