கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரிதும் வெளியாகி பரபரப்படைந்த செய்தி – பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டி, அவரது உருவச் சிலையை வைத்து வழிபடப்போகிறார்கள் அவரது ஆதரவாளர்கள் என்பது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்காக அமைக்கப்பட்ட இந்தக் கோயிலின் கட்டுமானத்தை கவனித்து வந்த ஓம் யுவா அமைப்பின் தலைவர் ஜ்யேஷ் படேல் இது குறித்து தெரிவித்த போது, “வாழும் மனிதர் ஒருவருக்கு குஜராத்தில் கோயில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். எங்கள் அமைப்பைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்டவர்கள் இதன் கட்டுமானத்துக்காக நன்கொடைகளைச் சேகரித்தனர். இக்கோயிலில் தினமும் வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். “ராஜ்கோட் தொகுதியில் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று குஜராத் முதல்வரானது முதலே அவரை எங்கள் அமைப்பினர் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். மாநில முதல்வராகவும், தற்போது பிரதமராகவும் அவர் ஆற்றிய பணிகளால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். எனவே, அவருக்காக ஒரு கோயிலை அமைக்க முடிவு செய்தோம். ஆரம்பத்தில் கருவறையில் மோடியின் புகைப்படத்தையே வைத்திருந்தோம். தற்போது ரூ.1.7 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட மார்பளவுச் சிலையை நிறுவியுள்ளோம். ஒட்டுமொத்தமாக இந்தக் கோயில் கட்டுமானத்துக்கு ரூ.7 லட்சம் செலவானது. எங்கள் அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் மாதம்தோறும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர். அவர்களும் கோயில் கட்டுமானச் செலவுக்கு தங்களாலான நிதியை அளித்தனர். “கோயில் அமைந்துள்ள நிலமானது 10 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தாரியா கிராமப் பஞ்சாயத்தால் மதரீதியிலான நிகழ்ச்சிகளுக்காக அளிக்கப்பட்டது. கோத்தாரியா கிராமம், ராஜ்கோட் நகராட்சி எல்லைக்குள் வருகிறது. இக்கோயிலின் தொடக்க விழாவுக்கு மத்திய அல்லது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் வருவார்” என்றார் அவர். இவ்வாறு பிப்ரவரி 16ம் தேதி திறப்பு விழாவுக்காகக் காத்திருந்த கோவில் திடீர் தடங்கலைச் சந்தித்தது. பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டப்பட்டது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், இது குறித்து கருத்து தெரிவித்த மோடி, “எனக்கு கோயில் கட்டுகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சி அடைத்தேன். இந்தச் செயல் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது; என் மீது மதிப்பிருந்தால் எனது ‘க்ளீன் இந்தியா’ கனவை நிறைவேற்ற உங்களது முழு உழைப்பையும் அர்ப்பணித்தால் நான் பெருமைப்படுவேன் ” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தனது விருப்பமின்மையைத் தெரிவித்தார். இதை அடுத்து மோடியின் கோயில், திறப்பு விழா காணும் முன்பே மூடு விழா கண்டது. இந்தக் கோயில் இப்போது கட்டப்படவில்லை என்பதும், 2006-ம் ஆண்டு முதல் இக்கோயில் உள்ளதும், மோடியின் படமும், பாரத மாதாவின் படமும் வைக்கப்பட்டிருந்த இக்கோயிலில் மோடியின் சிலை வைக்கப்பட்டதால் மீண்டும் ஊடகங்களில் பலமாக செய்தி அடிபடத் தொடங்கியதும் இதன் பின்னணித் தகவல். இதன் பின்னணியில் சிலவற்றை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின்போது, பிரதமர் மோடி தனது பெயர் வைத்து தைக்கப்பட்ட ஆடம்பர கோட் சூட் ஆடையை அணிந்தது ஊடகங்களில் பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளானது. மோடியின் ஆதரவாளர்களோ இந்த விமர்சனத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறிப் போனார்கள். இதை அடுத்து வந்த தில்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருப்பது உண்மை. தில்லி தேர்தலில் பாஜக படுதோல்வி அடையக் காரணம், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்கச் சென்ற மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருந்ததுதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெள்ளிக்கிழமை செஞ்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட மாநாட்டில் பேசியபோது கருத்து தெரிவித்துள்ளார். இது கொள்ளத் தக்கதா அல்லது தள்ளத் தக்கதா என்பது ஒரு புறம் இருக்க, இதே போன்ற கருத்து தேசிய அளவில் பரவலாக பேசப்படுவதும் உண்மை. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி போன்ற மஃப்ளரும் குல்லாயும் பெற்ற வெற்றி, தேசிய அளவில் மோடியின் ஆடம்பர ஆடை குறித்த பிரசாரத்தை வலுவாகவே மக்களிடம் சேர்த்திருப்பதும் கண்கூடு! இத்தகைய சூழ்நிலையில்தான், மோடிக்கு கோயில் கட்டி அவரது சிலையை வைத்து மக்கள் வழிபடும் செய்தி ஊடகத்தில் வெளியாகி மேலும் ஒரு பிரசாரத்தை மக்களிடம் வலுவாக முன்வைத்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு சிலை வைத்து வணங்கப்படுவது இது முதல் முறையல்லதான்! கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கோயில் கட்டப்பட்டது நினைவில் இருக்கலாம். இருப்பினும், தனது விருப்பமின்மையை டிவிட்டர் பக்கத்தில் மோடி, இந்திய கலாசாரத்தை சுட்டிக் காட்டி, வேண்டாம் என்று வற்புறுத்தியதன் பேரில் கோயில் திறப்பு விழா ரத்து செய்யப்படுவதாக ஓம் யுவா இயக்கத்தின் ரமேஷ் உந்தாத் கூறியுள்ளார். “கோயில் திறப்பு விழா நடைபெறாது. பிரதமர் தனது ட்விட்டரில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவருக்கு கோயில் எழுப்புவது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இதனை நாங்களும் ஆமோதிக்கிறோம். எனவே கோயில் திறப்பு விழாவை ரத்து செய்கிறோம். மோடியின் சிலை அங்கிருந்து அகற்றப்படும். இனி இக்கோயிலில் பாரதமாதாவுக்கு மட்டுமே சிலை இருக்கும். மோடி, எங்கள் இதயங்களில் இருப்பார்” என்று கூறியுள்ளார். கோவில் விஷயம் ஒரு புறம் என்றால், சென்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மோடியை கடவுளாகச் சித்திரித்து, அவரது ஆதரவாளர்கள் சிலர் நடந்து கொண்ட செயல் பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்தது -இதனை மோடி எப்படி அனுமதித்தார் என்பதுதான்! ஹர ஹர மோடி என்ற அந்த கோஷம் சிலருக்கு அறுவறுப்பைத் தந்ததும் உண்மை. ”ஹர ஹர மகாதேவா என்ற கோஷம், சிவபெருமானுக்கு சொந்தமானது. நரேந்திர மோடியை புகழ்வதற்கு, அதை பயன்படுத்த வேண்டாம்,” என துவாரகா சங்கராச்சாரியார் சொரூபானந்தா பகிரங்கமாக ஊடகங்களில் அப்போது வேண்டுகோள் விடுத்தார். அப்போதும் இந்தக் கோரிக்கையை ஏற்ற நரேந்திர மோடி, ”இனிமேல், பிரசாரங்களில், என்னை புகழ்வதற்காக, ஹர ஹர மோடி என்ற கோஷத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்,” என கட்சியினரிடம் வலியுறுத்தினார். அதற்கு முன்னர் ஸ்வரூபானந்தா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன்ஜி பாகவத்தையும் சந்தித்துப் பேசி புகார் தெரிவித்தார். வாராணசி தொகுதியில் மோடி போட்டியிடுவதாக அறிவித்த பின், இந்த கோஷம் அதிகரித்து விட்டது. ‘ஹர ஹர மகாதேவா’ என்பது, சிவபெருமானை புகழ்ந்து எழுப்பப்படும் கோஷம். இது, கடவுளுக்கு உரியது. இந்த கோஷத்தை, தனி நபரை புகழ்வதற்காக பயன்படுத்துவது, சிவபெருமானையும், நம் நீண்ட பண்பாட்டையும் அவமதிப்பது போன்றது. கடவுளுடன் ஒப்பிடும் வகையில், தனி நபர் துதி பாடுவது, இந்து மதத்துக்கு விரோதமானது; ஏற்க முடியாதது. இந்த கோஷத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சங்கராசாரியார் ஸ்வரூபானந்தா மோகன்ஜி பாகவத்திடம் கூறினார். இதனை மனத்தில் வைத்துத்தான் மோகன்ஜி பாகவத் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, தனி நபரைத் துதிபாடுவதையோ, வழிபடுவதையோ ஆர்.எஸ்.எஸ். ஏற்காது. அமைப்பின் தொண்டர்கள் இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போதும் இது ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் கருத்து வேறுபாடு, மோடிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தலைவர் என்ற வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன, ஆனால், நெடுங்காலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் இருந்த மோடி, அந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கையை அறியாமல் இருக்க மாட்டார். 1925ல் அந்த அமைப்பைத் தோற்றுவித்த டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார், தனி மனித வழிபாடு இங்கே இருக்கக் கூடாது என்பதால், காவி கொடியையே வணக்கத்துக்குரியதாக முன்வைக்கிறோம் என்று தெளிவாக அறிவித்தார். அதன் பின்னணியில் ஒரு காரணம் இருந்தது. மனிதர்கள் களங்கத்துக்கு உட்பட்டவர்கள். களங்கமில்லாத தூய தலைவர்கள் கட்சிக்கோ அமைப்புக்கோ அமைய வாய்ப்பில்லை. அத்தகைய தலைவர்கள் மீதான களங்கம், தனிநபர் துதி பாடப்பட்டு முன்வைக்கப் படும் காரணத்தால், அமைப்புக்கும் களங்கம் சேர்ந்ததாகி விடும். காரணம் கட்சியே தலைவர், தலைவரே கட்சி என்ற எண்ணம் வலுவாக இருந்துவிட்டால், தலைவர் செய்யும் தவறுகளும், தலைவர் மீதான அவதூறுகளும் கட்சிக்கு அல்லது அந்த அமைப்புக்கு சேர்ந்துவிடும். அதன் பின்னர் அந்தக் கட்சிக்கோ அமைப்புக்கோ வளர்ச்சியோ ஆதரவோ இருக்காது; அந்தத் தலைவர்களோடு அதுவும் சமாதியாகிவிடும். இந்த நிலை ஒரு அமைப்புக்கோ கட்சிக்கோ மட்டும் இருப்பதில்லை; நிறுவனங்களுக்கும் கூடத்தான்! ஒரு சர்வாதிகாரி ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு, தானே நிறுவனம் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டால், அந்த நிறுவனத்தின் சரிவு அந்தத் தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் சேர்ந்தே இருக்கும் என்பது கண்கூடு! அந்த வகையில் நரேந்திர மோடி வலுவான ஒரு தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல எண்ணலாம் தவறில்லை! ஆனால், தன் மீது எய்யப்படும் அவதூறு அம்புகள், கட்சிக்கும் நாட்டுக்கும் ஒரு வகையில் சேர்ந்துவிடும் என்பதை அவர் கவனத்தில் கொண்டாக வேண்டும்!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு
பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சீனா செல்லவுள்ளார். இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு அளித்துள்ளது. இந்தத் தகவலை சீன வெளியுறவு அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஹுயா சங்யிங் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராவதில் சீனாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆதரவு அளிக்கிறோம். அதே நேரத்தில் ஜப்பானுக்கு ஆதரவளிக்க முடியாது என்றார். இந்தியா, பிரேசில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய 4 வளரும் நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக போராடி வருகின்றன. இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பல ஆண்டுகளாக சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அருணாசல பிரதேசம் மற்றும் காஷ்மீரின் எல்லையில் பதட்டம் ஏற்படுத்தி வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய வருகையை தொடர்ந்தும், தற்போதைய மோடி அரசு அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருவதும், சீனாவின் நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலரா அன்னையரா? : மகாராஷ்டிராவில் புதுக் குழப்பம்
மும்பை : காதலர் தினம் என பிப்ரவரி 14ம் தேதியை உலகின் பல நாடுகளில் இளையோர் கொண்டாடுகையில், அந்த தினத்தை அன்னையர் தினமாகக் கொண்டாட வேண்டும் என மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம். இந்தப் புது நடைமுறை, மகாராஷ்டிராவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மோடி அணிந்த 10 லட்ச ரூபாய் கோட் சூட்டால்தான் பாஜக தோற்றது: நல்லகண்ணு
விழுப்புரம்: தில்லி தேர்தலில் பாஜக படுதோல்வி அடைய காரணம், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்க சென்ற மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருந்ததுதான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட மாநாடு செஞ்சியில் நடந்தது. மாநாட்டின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கலந்து கொண்டு அவர் பேசியபோது, இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
காதலர் தினம்: ரோஜாக்கள் விலை உயர்வு
காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், காதலின் சின்னமான ரோஜா மலர்களின் விலை அதிக அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காதல் ஜோடிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. பிப்ரவரி 14ஆம் தேதி உலகளாவிய அளவில் பல நாடுகளில் கொண்டாடப்படும் காதலர் தினத்தில், காதலர்கள் திருமணம் செய்து கொள்வதும், காதலிக்க இருப்பவர்கள் தங்கள் காதலை தெரிவிப்பதும் வழக்கம். முன்பெல்லாம் ஒரு நாள் கொண்டாடப்பட்ட காதலர் தினம் தற்போது ஒரு வார காலம் கொண்டாடப்படுகிறது. ரோஜா தினம், காதலை சொல்லும் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், முத்த தினம், கட்டிப்பிடிக்கும் தினம், காதலர் தினம் என்று ஒரு வாரம் இந்த நிகழ்வு நீட்டித்துக் கொண்டுள்ளது…
ரயில் விபத்து நடந்த இடத்துக்கு தமிழக அமைச்சர்கள் செல்லவில்லை!
சென்னை: ஓசூர் அருகே ரயில் விபத்து நடந்த இடத்துக்கு தமிழக அமைச்சர்கள் எவரும் செல்லவில்லை. இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே கர்நாடகா எல்லையான ஆனைக்கல் என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் சென்ற இன்டர்சிட்டி ரயில் இன்று காலை 7.33 மணிக்கு விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் பலியாகினர். 87 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்து நிகழ்ந்த உடன் கர்நாடாகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார். சதானந்த கவுடாவும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளாமானோர் பயணித்தனர். அதுவும் விபத்துக்குள்ளான பெட்டிகளில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 176 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விபத்து நடந்த இடத்துக்கு பிற்பகல் வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அமைச்சர் கூட சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறவும் இல்லை.. மீட்புப் பணிகளை பார்வையிடவும் இல்லை.
தனுஷின் அனேகன் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சி- வசனம் நீக்கம்!
தனுஷின் அனேகன் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனத்தை அதன் இயக்குநர் கேவி ஆனந்த் நீக்கியுள்ளார். புதிரை வண்ணார் விடுதலை இயக்கம் என்ற அமைப்பின் தலைவரான கி.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ என்ற படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், வண்ணார் சமூகத்தை சேர்ந்த பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த ஆட்சேபனைக்குரிய வசனத்துடன் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். அந்த வசனத்தை நீக்கிய பின்னரே, தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், ‘சர்ச்சைக்குரிய வசனத்தை ஆனேகன் படத்தில் இருந்து, அந்த படத்தின் இயக்குநரே முன்வந்து நீக்கிவிட்டார்’ என்று கூறினார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘அனேகன் படம் வெள்ளிக்கிழமை (இன்று) வெளியாகுகிறது. மனுதாரர் அந்த படத்தை பார்த்து விட்டு, சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டு விட்டதா? வேறு ஏதாவது வசனங்கள் இடம் பெற்றுள்ளதா? என்பதை இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்கலாம். வழக்கு விசாரணையை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார். இதனிடையே ‘அனேகன்’ இன்று 750-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. மேலும், அனேகனுக்கு முழு கேளிக்கை வரிவிலக்கு அளித்துள்ளது தமிழக அரசு. அனேகன் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு கேளிக்கை வரிவிலக்குக்கு பரிந்துரைக்கும் குழு முன்பு படத்தை திரையிட்டுக் காட்டினர் தயாரிப்பாளர்கள். அக்குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, படத்து முழு வரிவிலக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது அனேகன் குழுவுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. காரணம் சமீபத்தில் வந்த பெரிய படங்களான ஐ, என்னை அறிந்தால் போன்றவை யு ஏ சான்று பெற்றதால், வரி விலக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் பகுதியில் தமிழர்கள் மறுகுடியமர்வுக்கு நிலம், பணம்: இலங்கை அரசு
இலங்கையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை வீழ்த்தி சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். தமிழர்கள் பெருவாரியாக அளித்த ஆதரவு அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கை அதிபராக பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக சிறிசேனா நாளை மறுநாள் (15-ந்தேதி) இந்தியா வருகிறார். அதற்கு முன்னதாக தமிழர்களுடன் நல்லுறவை மேம்படுத்தும் முயற்சிகளை அவர் மேற்கொண்டு உள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற போது யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பலாலி, உயர் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள ஆயிரம் ஏக்கர் நிலத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. அந்த நிலம் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அந்த ஆயிரம் ஏக்கர் நிலத்தை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, வீடு கட்டுவதற்காக தமிழர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்து இருப்பதாக இலங்கை மந்திரியும், மந்திரிசபையின் செய்தித் தொடர்பாளருமான லட்சுமண் கரியெல்லா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார். இதில் ராணுவ மந்திரி என்ற முறையில் அதிபர் சிறிசேனா தன் பங்குக்கு 220 ஏக்கர் நிலத்தை விடுவிக்க இருப்பதாகவும் லட்சுமண் கரியெல்லா கூறினார். 1,022 தமிழ் குடும்பங்கள் இந்த இடத்தில் மறுகுடியமர்த்த இலங்கை அரசு தீர்மானித்து உள்ளது. வீடு கட்டிக்கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2¼ கிரவுண்டு நிலமும், பணமும் வழங்கப்படும் என்று மறுகுடியமர்த்தல் துறை மந்திரி டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இதேபோல் கிழக்கு மாகாணத்திலும் வீடு கட்டிக்கொள்ள தமிழர்களுக்கு நிலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தேயிலை தோட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பது, உயர் கல்வியில் இந்தியா-இலங்கை இடையேயான தொடர்பை மேம்படுத்துவது, தூதரக அதிகாரிகளுக்கான பாஸ்போர்ட் வைத்திருக்கும் அதிகாரிகள் விசா பெறும் முறையை ரத்து செய்வது, முதலீட்டை அதிகரிப்பது, வேளாண்மை துறையில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவது போன்ற முடிவுகளையும் இலங்கை மந்திரிசபை எடுத்து உள்ளது.
ஓசூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்து: 12 பேர் பலி
ஓசூர்: பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்குச் சென்ற இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை இன்று காலை ஓசூர் அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. முலகொண்டப்பள்ளி மற்றும் சந்திராபுரம் இடையில், ஓசூர் அருகே ஆனைக்கல் என்ற இடத்தில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. விபத்து குறித்து அறிந்ததும் கர்நாடக மாநில மற்றும் தமிழகத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. உடனடியாக மீட்புப் பணிகள் துவங்கப்பட்டன. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான சதானந்த கவுடாவும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயம் அடைந்துள்ளனர். உதவி எண்கள்: விபத்து குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி எண்கள்: 09731666751 / 08022371166 விபத்து நடந்தது எப்படி? இஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து ரயில் தடம் புரண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து, ரயில் இஞ்சின் அதன் மீது மோதி ரயில் தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் தகவல்கள் :
Unfortunate rail accident in Karnataka,Boulder fell on track in Ghat section, train hit it. directed all sr officers to rush with full help — Suresh Prabhu (@sureshpprabhu) February 13, 2015
My colleague Hon Sadanand Gowda rushing to accident site. Directed Chair Rail Board to evacuate all stranded passengers. Medical help rushed — Suresh Prabhu (@sureshpprabhu) February 13, 2015
I am personally monitoring it and in touch with State and local administration.All Sr rail officials are directed by me to be on job. — Suresh Prabhu (@sureshpprabhu) February 13, 2015
Condolences to all the unfortunate members of the families who lost lives.Directed to provide best possible medical care to the injured — Suresh Prabhu (@sureshpprabhu) February 13, 2015
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு விறு விறு
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் காலை வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரையில் வாக்குகள் பதிவு செய்யப்படும். மொத்தம் 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 16-ம் தேதி எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவுகள் இணையம் மூலம் ஒளிபரப்பப் படுகின்றன. வாக்குப் பதிவு குறித்த நிலவரத்தை அறிந்து கொள்ள 9444123456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி அறிந்து கொள்ள முடியும் என தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 322 ஒட்டுச் சாவடிகளில் 79 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 29 பேர் களத்தில் உள்ளனர். தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் 1,2,3 என்ற வீதத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பணியாற்றக்கூடிய வாக்குச்சாவடி கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டது. தொகுதியிலுள்ள 322 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 1,572 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தொகுதியிலுள்ள 138 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 322 வாக்குச்சாவடிகளில் 41 மையங்களிலுள்ள 79 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதலாகப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியிலிருந்து தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தேர்தல் நிலவரங்களை அனுப்பும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு “டேப்லெட்’ கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் “வெப் கேமரா’ பொருத்தப்பட்டிருப்பதால் வாக்குப்பதிவை உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்குத் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அரசு கேபிள் தொலைக்காட்சி மூலம் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவுகள் www.election.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

