வெளியில் எங்கும் தைரியமாக சென்று வருவதிலும், தேவை ஏற்படும் போது உடனுக்குடன் முடிவெடுப்பதிலும் ஆண்கள் அதிக மதிப்பெண் எடுத்து விடுகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் ஒரே சமயத்தில் அஷ்டாவதானம் செய்வதிலும் எதையும் கூர்ந்து கவனித்து மனதிலிருத்துவதிலும் பெண்களை மிஞ்ச முடியாது. வீட்டில் ஆண்கள் காலையில் நிதானமாக எழுந்து பேப்பர் படிக்கும் நேரத்திற்குள் பெண்கள் நூற்றெட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிக்கிறார்கள்.
தன் வீட்டு ஆண்கள் தினமும் என்ன உடை அணிகிறார்கள் என்பதை கவனித்து அவர்களுக்கு ஆலோசனையும் அளித்து உதவும் மகளிர் அதிகம் என்றே கூற வேண்டும். இந்த விஷயத்தில் ஆண்கள் பெரும்பாலும் மந்தமே! பல வீடுகளில் கணவர்கள், மனைவி என்ன தோடு போட்டிருக்கிறாள், என்ன ஹேர் பின் குத்தியிருக்கிறாள் என்பதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை.
ஆசையோடு மனைவி ‘இந்த புடவைக்கு இந்த ஜுவல்லரி எப்படி இருக்கிறது?’ என்று கேட்டால் பேந்த பேந்த முழிக்கும் அசமஞ்சி கணவர்களே மெஜாரிடி. சில கணவர்கள் ரொம்ப உஷாராக இருப்பதுண்டு. அவர்கள் செலக்ட் செய்யும் புடவையைத் தான் அணிய வேண்டும் என்று அடம் பிடித்து அன்புத் தொல்லை தரும் ஆண்களும் உண்டு. பஸ்ஸின் கூட்டத்தில் மனைவியை வேறு யாரும் இடித்து விடாமல் கூடவே நின்று பாதுகாக்கும் ரகம் இவர்கள். ஆனால் பெரும்பான்மை ஆண்கள் அதிகம் கண்டு கொள்ளளாத அலட்சிய பிரகிருதிகளே என்றால் மிகையில்லை.
“மனைவியின் புடவையில் மாவு ஒட்டிக் கொண்டு இருந்தாலோ, அயர்ன் செய்த புடவையில் எங்காவது பொசுங்கி இருந்தாலோ பார்க்காமல் அவசரத்தில் கட்டிக் கொண்டு பங்க்ஷனுக்கு கிளம்பி விட்டால், கூடவே வரும் கணவன் பார்த்துச் சொல்லாக் கூடாதோ? ஊரை பராக்கு பார்த்துக் கொண்டு வருவதற்கே நேரம் சரியாக இருக்கு இவருக்கு!” என்று அங்கலாய்க்கும் அம்மணிகள் அதிக சதவிகிதம் உள்ளனர்.
மனைவி எதைப் பேசினாலும் காதில் வாங்கி கொள்ளாமல் கம்ப்யூட்டரில் ஏதோ கனகாரியமாக குடைந்து கொண்டிருக்கும் கணவர்களிடம் சிக்கி அழாத குறையாக சபித்துக் கொண்டிருக்கும் மனையாள்கள் இல்லாமல் இல்லை.
‘உங்ககிட்ட பேசுவதை விட இந்த சுவருடன் பேசினால் எதிரொலியாவது கேட்கும். சுவருக்கு மூக்கு முளைத்தாற் போல் எப்படி உங்களால் இப்படி சலனமில்லாமல் இருக்க முடிகிறது?’ என்று வியந்து வியந்து ஓய்ந்து போகும் பெரியம்மாக்கள் ஏராளம்.
ஒரு முறை ஒரு மாது கணவருடன் வைஷ்ணவி தேவி யாத்திரை சென்றிருந்தாள். கோவிலுக்குச் சென்று திரும்பும் வழியில் குட்டைக் குதிரையிலிருந்து இறங்கும் போது அதன் முதுகிலிருந்த பீடத்தில் பட்டு அவள் பின் தொடையில் சதை கொஞ்சம் வழண்டு விட்டது. “உஸ் ! அம்மா!” என்று கையால் தடவிக் கொண்டு இறங்கி நடந்து வந்தாள். உடன் வரும் கணவர் தனக்கு எதுவும் தெரியாது என்ற ரீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். கூடவே வந்த வேறு ஒரு யாத்ரீகர்கள் கூட்டத்திலிருந்து ஒரு பெண் இவளைத் தனியாக அழைத்து “அம்மா! நீங்கள் மாத விலக்காகி விட்டீர் போலிருக்கிறது!” என்று கூறியதைக் கேட்டு நம் மாது பயந்தே விட்டாள். அவளுக்கு தீட்டு நின்று சில ஆண்டுகள் கடந்து விட்டன. கணவரை அழைத்து, “பின் புறம் ஏதாவது தெரிகிறதா பாருங்கள்?” என்று பதட்டத்துடன் கேட்டாள். அவர் பார்த்துவிட்டு “ஒன்றுமில்லை. ஏதோ சிவப்பா திட்டா இருக்கு. அவ்ளோ தான்” என்றாராம் அப்பாவியாக. நிலைமையின் சீரியஸ்னெஸ் புரியாமல் அசை போடும் ஆணை என்ன செய்வது? என்று கோபம் ஒருபுறம். இது என்ன புது ரத்தம்? என்று பயம் மறு புறம். சற்று யோசித்தபின் சட்டென்று அவளுக்குப் புரிந்து போனது. குதிரையிலிருந்து இறங்குகையில் ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் கசிந்திருக்கிறது என்று. பின்பக்க தொடையில் வலி இருந்தாலும் ரத்தம் வரும் அளவுக்கு காயம் பெரிதாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
அதுவே கணவனுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் மனைவி சும்மா இருப்பாளா? உடனே கவனித்து கண்காணிப்பாள் அல்லவா?
“நான் என்ன செய்யறது, சொல்லுங்கோ!” என்று ஜெயகாந்தன் எழுதியது போல் தான் பல பெண்களின் நிலை உள்ளது.
– ராஜி ரகுநாதன்,



