
தமிழகத்தில் கந்து வட்டி ஒழிந்து விட்டதாக நினைக்கும் வேளையில் அதைவிட கொடுமையான பணம் பறிக்கும் கும்பல் உலா வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து பட்டி, தொட்டி, குக்கிராமங்களில் கூட தனது கோரமான ஆட்சியை நடத்தி குடும்ப பெண்கள் வாழ்வை சீரழித்து வருகிறது.
மகளிர் குழு என்னும் பெயரில், கந்து வட்டி கும்பலிடம் சிக்கி தடம் மாறுகின்றனர் குடும்ப பெண்கள் என்கின்றனர்.
நமது தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் நடந்து கொண்டுள்ள.உண்மை நிகழ்வு… தயது செய்து 5 நிமிடம் பொறுமையாக படிக்கவும் என்று குறிப்பிட்டு, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது இதச் செய்தி.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர, கூலித் தொழிலாளிகள் என வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களையும் குறி வைக்கிறது இந்த மகளிர் குழு கும்பல் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்…
தனியார் நிதி நிறுவனம் என்ற பெயர்களில் கந்து வட்டி கும்பல்கள் உலா வருகின்றன. இவை மூலம், மகளிர் குழு என 10 பெண்களை ஒருங்கிணைத்து முதலில் தலா 20,000 ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது. அந்தத் தொகை 52 வாரத்திற்கு அசலும் வட்டியும் சேர்த்து வாரம் ரூ.625 கட்ட வைக்கிறார்கள். அதாவது, (52×625=32,500) (அசல் 20,000+12,500 வட்டி)
இந்தப் 10 பேரில் யாராவது ஒருவர் வீட்டில் துக்க காரியங்கள் இருந்தால் கூட அவர் பணம் கட்ட வேண்டும்.இல்லையெனில் மீதம் உள்ள 9 பேரும் அந்த ஒருவர் பணத்தை சேர்த்து கட்ட வேண்டும்! இதுதான் துவக்கம்.

20,000 கட்டி முடித்த உடன் 40,000 என கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது! 40,000 ரூபாய்க்கு அசலும் வட்டியும் சேர்த்து 2 வருடங்களுக்கு வாரம் 490 வீதம் கட்ட வேண்டும். ஒரு நாளைக்கு 100, 150 ரூபாய்க்கு கூலிக்கு வேலை செய்யும் பெண் மற்றும் ஆண் யாராக இருந்தாலும், வாரம் 600 ரூபாய் கடன் தொகையை கட்ட கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.
கணவன் மனைவி 2 பேரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இது பெரிய பாரமாக இருப்பதில்லை. ஆனால் கணவனை இழந்த (கணவன் இருந்தும் இல்லாத) குழந்தைகளை வளர்த்து வரும் பெண்களால் வாரம் ரூ 600 எப்படி கட்ட முடியும்…? மேலும் வேலை இல்லாத வாரங்களிலும், பண்டிகை, விடுமுறை வாரங்களிலும் கூட கட்டாயம் பணம் கட்டியே ஆக வேண்டும். (கந்து வட்டிக்காரன் கூட, வேலையில்லை அடுத்த வாரம் தருகிறேன் என்றால் போய் விடுவானாம்)

இதனால் குழுவுக்கு பணம் கட்டியே ஆக வேண்டும் என்று அக்கம் பக்கம் உள்ளவர்களிடமும், தெரிந்தவர்களிடமும் கடன் வாங்குகிறார்கள். ஏற்கெனவே வாங்கிய கடனுடன் இந்த கடனும் சேர்வதால், வேறு 10 பெண்களுடன் சேர்ந்து வேறு நிதி நிறுவனத்தில் குழு கடன் பெறுகிறார்.
இப்படி 2,3 நிதி நிறுவனங்களில் 20,000 மற்றும் 40,000 என 1 லட்சம் வரை ஒரு பெண் கடன் பெறுகிறாள். வாங்கிய கடனுக்கு 1 வாரத்துக்கு, 1 குழுவுக்கு ரூ.600 வீதம் 3 குழுவுக்கு 1,800 முதல் 2,000 ரூபாய் வரை ஒரு பெண் கடன் கட்ட வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளக்கப் பட்டுள்ளார். சாதாரண கூலி வேலை செய்யும் ஒரு பெண் வாரம் ரூ 2,000 எப்படி கட்ட முடியும்….?
குழு பணம் கட்ட வேண்டும் என்று பெண்கள் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்காத குறையாக பணத்தை கட்டி வருகிறார்கள்.

சம்பந்தப் பட்ட ஒரு பெண் பணம் கட்டவில்லை என்றால் மற்ற 9 பெண்களும் சேர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகாத வார்த்தைகளால் கண்டபடி திட்டுகிறார்கள். சில சமயங்களில் அது கைகலப்பில் முடிவதும் வேதனையான விஷயம்.
இவை அனைத்தும் நம் அக்கம் பக்கத்து வீடுகளில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள்! எத்தனை நாளைக்கு இப்படி அடுத்தவர்களிடம் பிச்சை எடுப்பது, திட்டு வாங்குவது என நினைத்து விரக்தியில் இருக்கும் பெண்கள் சிலர் எடுக்கும் முடிவு மிகவும் வீபரீதமாக முடிவது உண்டு.
அந்தப் பெண்ணுக்கு நாள் ஒன்றுக்கு கடன் கட்ட ரூ.500 தேவைப்படுகிறது (சில பெண்கள் தற்கொலை செய்ய துணிகிறார்கள். சிலர் குழந்தைகளுக்காக தடம் மாறத் துணிகிறார்கள். அந்தக் குழுவில் உள்ள 10 பெண்களில் ஒருவர், அல்லது வேறு யாராவது ஒரு பெண் அவளுக்கு தவறான வழி காட்டுகிறார்கள்.!
மேலே கூறியுள்ளவை அனைத்தும் நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் உண்மையே! யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை! நம் ஊரில், நம் கண்முன்பேயே பெண்கள் சிலர் தவறான பாதைக்கு மாறிவிடுகிறார்கள். எனவே, சமூக அக்கறை உள்ளவர்கள், இதை முன்னெடுத்து, நமது பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடன் குறித்த பிரச்னை, பெண்கள் குழு என்ற பெயரில் தேவையற்ற விதத்தில் கடன் பெறுவது, அதனால் தடுமாறுவது இவை குறித்து எடுத்துச் சொல்லி அவர்களை படுகுழியில் விழாமல் காப்பாற்ற வேண்டும் என்று இந்த செய்திப் பரவல்களில் வேண்டுகோள்கள் முவைக்கப் படுகின்றன.



