
திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இயேசு கிறிஸ்து தொடர்பான சில விஷயங்கள் அப்லோடு செய்யப்பட்டது தற்போது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
ஆந்திராவில் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பின்னர் திருப்பதியில் அவ்வப்போது புதுப்புது சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதி செல்லும் ஆந்திர அரசு பஸ் டிக்கெட்டுகளில் ஜெருசேலம் மற்றும் ஹஜ் யாத்திரை தொடர்பான விளம்பரங்கள் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் கோயில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இ புத்தகத்தில் இயேசு கிறிஸ்து தொடர்பான சில பாடல்களும் , தகவல்களும் அப்லோடு செய்யப்பபட்டுள்ளது.
இதற்கு பக்தா்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து கிறிஸ்து தொடர்பான பக்கங்களை அழித்து விட கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறுகையில்:

பொதுவாக தேவஸ்தான இணையதளத்தில் பல்வேறு புத்தகங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
இது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
மாண்டே சின்ன சீதாரமய்யாவால் எழுதப்பட்ட பக்தி கீதா ஞானாம்ருதம் என்ற புத்தகம் கடந்த 2001-2002 ல் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கிறிஸ்து தொடர்பான சில விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதும் உடனடியாக அழிக்கப்பட்டது.
மேலும் இது போன்ற நிதி உதவி பெற்ற எழுத்தாளர்கள் மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து புத்தகங்களையும் அழித்து விடவும் உத்தரவிடப்பட்டுள்ளது
இது குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்துவார்கள் .
இனி வரும் காலத்தில் முழு அளவில் சரியானதா என கவனமுடன் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இ புத்தகம் அப்டேட் செய்யப்படும். இவ்வாறு சிங்கால் கூறினார்.



