
திமுக., தமிழ் வளர்த்த லட்சணம் இப்போது இன்னும் பகிரங்கமாகவே வெளித் தெரிந்து வருகிறது. அடிப்படைத் தமிழ் கூடத் தெரியாத ஒரு சமுதாயத்தை அறுபதாண்டு திராவிட இயக்கங்களின் ஆட்சிக் காலம் உருவாக்கியிருக்கிறது என்பதை பலரும் பல்வேறு சூழ்நிலைகளில் அப்பட்டமாகக் கூறித்தான் வந்துள்ளனர்.
திமுக.,வின் தொடக்க கால தலைவராக இருந்த அண்ணாத்துரை, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று கூறி விரசத் தமிழை இளையவர்களின் உள்ளங்களில் பதிய வைத்து, நற்றமிழ் கெடக் காரணமாயிருந்தார். மலின புத்தியைப் புகுத்தி, அற நெறி சீர்கெடக் காரணமாயிருந்தார். பின்னர் தாமே வந்த மு.கருணாநிதி, சுமார் அரை நூற்றாண்டுக் காலம் திமுக., தலைவராக இருந்து, இட்டதமிழைப் பரப்பி, தமிழ் நலிவடையக் காரணமாயிருந்தார். இதுதான் தமிழ் என ஏட்டிலும் எழுத முடியாத வகையிலும், அச்சில் ஏற்ற இயலாத வகையிலும் மோசமான சொல்லாடல்களால் தமிழை சீர்குலைத்தார்.
பின்னர் வரவைக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலின் மேடைக்கு மேடை, உளறல்களால் கூட்டத்துக்குக் கூட்டி வரப்பட்ட ஏழை மக்களை உற்சாகமடைய வைத்து வருகிறார். ஒவ்வொரு பேச்சிலும் ஒரு உளறல் என தமிழை சோதனைக்கு உள்ளாக்கி வருகிறார்.
இப்போது, தலைவர் எவ்வழியோ கட்சியும் அவ்வழியே என, திமுக.,வின் மற்றவர்களும் தங்கள் பங்குக்கு தமிழை சீர்குலைத்து வருகின்றனர். குறிப்பாக, திமுக.,வின் அரசியல் சார்பு ஏடுகளிலும் ஊடகங்களிலும் இடம்பெறும் பிழைகள் சொல்லி மாளாது என்று அங்கலாய்க்கிறார்கள் தமிழ்க் காதலர்களான சிலர்.

திமுக.,வைச் சேர்ந்த பொன்முடியை, தனியார் தொலைக்காட்சியான வின் டிவி ., பேட்டி எடுத்தது. அதில் கேட்கப் பட்ட கேள்வியில், “நெருக்கடி நிலைக் காலத்தில், மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை” என்று மிசா குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பித்த ஷா கமிஷன், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப் பட்டது.
மேலும், இரா. செழியன் எழுதிய “Shah Commission of Inquiry- Lost and Regained” என்ற ஒரு தொகுப்பைக் காட்டியும் பதில் கூறப் பட்டது. ஆனால் அதற்கு பதில் அளித்த பொன்முடி., தாம் அதனைப் படிக்கவில்லை என்றும், அது தமக்கு தெரியாது என்றும், திமுக., தொண்டர்கள் அப்படித்தான் நம்புகிறார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில், இத்தகைய உண்மையை இப்போது வெளிக்கொணரக் காரணமாக இருந்த வின் டிவி.,யையும், அதில் நேர்காணல் கண்ட நபரையும் திட்டித் தீர்த்து, வழக்கம் போல் வசைபாடி ஒரு அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கையைக் கண்டு, திமுக.,வினருக்கே அதிர்ச்சி அதிகரித்துவிட்டது. காரணம், இதுநாள் வரை தங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் தான் உளறல் திலகம், உளறுவாயர் என்றெல்லாம் தாங்கள் நினைத்துக் கொண்டிருக்க, பத்திரிகையில் எழுதியவர்களும் எத்தகைய உளறல் திலகங்கள் என்று புரிந்து கொண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.
“ அந்த நிருபர் வேண்டுமென்றே திமுக.,வின் ஜனநாயகத்துக்கு எதிரான துணிச்சலான போராட்டத்தில் கழகத் தலைவர் அவர்கள் மிசாவில் கைது செய்யப் பட்டதையே இழிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது… ” என்று, தவறாகக் குறிப்பிட்டு கருத்து வெளியாகியுள்ளது. ஆனால், சிலரோ, திமுக., போராடியதே, ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரப் போராட்டம்தானே… அதைத்தானே அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.



