
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது இப்போது பாமக., நிறுவுனர் ராமதாஸின் கையில் தான் இருக்கிறது. காரணம், அண்மைக் காலமாக சூடன் ஏத்தி சத்தியம் செய்யாத கதையாக, ஒண்டிக்கு ஒண்டி வாரியா, ஒத்தையா வரச் சொல்லு, நானும் நீயும் போட்டி போடலாம் என்றெல்லாம் அண்மைக் காலமாக சவால் விட்டு வரும் ஸ்டாலின், இப்போது, ராமதாஸுக்கு சவால் விட்டுள்ளார்.
திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலி இருக்கும் இடம் குறித்து ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் ராமதாஸ். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள புகாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.
‘அசுரன்’ படத்தில் பழங்குடியினர்க்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை குறிப்பிட்ட ஜாதியினர் கைப்பற்றுவதாக, காட்சி அமைப்புகள் உள்ளன. இந்தப் படத்தை நேற்று முன்தினம் தனது அடுத்துள்ள இருக்கையைக் கூட எவருக்கும் பகிராமல், ஸ்டாலின் தனியாக அமர்ந்து பார்த்தார்.
அதைத் தொடர்ந்து கதாநாயகனாக நடித்த தனுஷ், வெற்றிமாறன் ஆகியோரைப் பாராட்டினார். அவரது டுவிட்டர் பக்கத்திலும் இந்தப் பாராட்டுதல்களை விவரித்திருந்தார்.
இதை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதில் அளித்திருந்த போது, “பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல; பாடம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். ஆஹா… அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று ‘முரசொலி’ நாளிதழ் அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம்” என்று கிண்டல் அடித்திருந்தார்.
இது இன்று பெரிய அளவில் சமூகத் தளங்களில் பேசப் படவே, ராமதாஸ்க்கு சவால் விடும் வகையில் ஸ்டாலின் இன்று டிவிட்டர் பதிவில் ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறார்.
அதில்… ” மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!
நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்!
அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று கேட்டுள்ளார்.
எனவே, ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது என்பது, இப்போதைக்கு பாமக., நிறுவுனர் ராம்தாஸ் கையில்தான் இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!



