
பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவிய இந்திய வம்சாவளி பெண், மலேசியா நாட்டில் கவுரவிக்கபட்டுள்ளது நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் பிறந்தவர் கோமதி நாராயணன். இவருடைய வயது 27. இவர் தற்போது மலேசியா நாட்டில் காவலராக பணியாற்றி வருகிறார். 7-ஆம் தேதியன்று கோமதி பேருந்து நிலையத்திற்கு அருகே பணியாற்றிக்கொண்டிருந்தார்.
பிற்பகல் 3:45 மணி அளவில் இந்தோனேசியா பெண் ஒருவர் பிரசவ வலியால் பேருந்து நிலையத்திற்கு அருகே துடித்து கொண்டிருந்தார்.
துரதிஷ்டவசமாக அடுத்த சில மணி துளிகளில் அவருடைய பனிக்குடம் உடைந்துள்ளது. இதனால் அந்த பெண் வலியால் மிகவும் சிரமப்பட்டார்.
ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால், கோமதி உடனடியாக ஒரு வாடகைக்காரை ஏற்பாடு செய்தார். சிரமப்பட்டு அந்த கர்ப்பிணியை காருக்குள் ஏற்றி அவசர அவசரமாக மருத்துவமனையை நோக்கி சென்றனர்.
மருத்துவமனையை அடையும் முன்னரே கர்ப்பிணிக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தாயையும் குழந்தையையும் பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கர்ப்பிணி பெண்ணை திறமையாக செயல்பட்டு சமயத்தில் காப்பாற்றியதற்காக, கோமதி நாராயணனுக்கும், வாடகைக்கார் ஓட்டுநரான வோங் கோக் லூங்க்கும் மலேசியா அரசாங்கம் பாராட்டு விழா எடுத்தது.
விழாவில் பேசிய மாவட்ட கண்காணிப்பாளரான முகமத் மோக்சின், “இருவரும் நம் நாட்டின் ஹீரோக்கள். கோமதியின் செயல்பாடுகளை பிற காவலர்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்” என்று புகழ்ந்துரைத்தார். பின்னர் இருவருக்கும் நினைவு தகடும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.
அந்த குழந்தைக்கு ரிஸ்கி சரதி மதி-வர்ணா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது மலேசியா நாட்டில் இந்தியர்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது.