
தேஜாஸ் ரயில் தாமதம்… பயணிகளுக்கு 1.62 லட்சம் ரூபாய் இழப்பீடு. முதல் தனியார் ரயில் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனிப்பட்ட பல சிறப்புகள் கொண்ட து. முக்கியமாக இந்த ரயில் தாமதமாக வந்தால் பயணிக்கு இழப்பீடு அளிப்பார்கள்.
இதன்படி முதல் முறையாக இந்த ரயில் இரண்டு நாட்களுக்கு முன் தாமதமாக ஓடியது. ஐஆர்சிடிசி கொடுத்த வாக்கின்படி 1.62 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. ரயில்வே வரலாற்றிலேயே இது முதல்முறை.
அக்டோபர் 19 அன்று தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக வந்தது. அதனால் 950 பயணிகளுக்கு ரூபாயை ரூபாய் 1.62 லட்சம் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் அளிக்கப் போகிறோம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
என்ன நடந்தது?
அக்டோபர் 19ஆம் தேதி லக்னோவில் இருந்து காலை 9. 55க்கு கிளம்பிய தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியை 12.25 மணிக்குச் சேர வேண்டும். ஆனால் கான்பூர் அருகே ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக 3.40க்கு சென்றடைந்தது.
அதுமட்டுமின்றி 3.35 மணிக்கு மீண்டும் லக்னோ கிளம்ப வேண்டியரயில் 5.30 மணிக்கு புறப்பட்டது. இரவு 10.05 மணிக்கு சென்றடைய வேண்டிய ரயில் இரவு 11.30 மணிக்குத்தான் சென்றடைந்தது. அதனால் லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்ற 450 பயணிகளுக்கு ஒவ்வொருவருக்கும் 250 ரூபாயும், டில்லியிலிருந்து லக்னோ சென்ற 500 பயணிகளுக்கு ஒவ்வொருவருக்கும் 100 ரூபாயும் இழப்பீடு அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டில் கொடுத்துள்ள இன்சூரன்ஸ் கம்பெனியின் லிங்க் மூலம் இழப்பீடு பெற முடியும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் அக்டோபர் 6ஆம் தேதி முதல் கமர்ஷியல் ஆபரேஷன்ஸ் ஆரம்பித்துள்ளது. அன்றிலிருந்து அக்டோபர் 19, 20 தேதிகளில் மட்டுமே தாமதமாக சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாமதத்தைப் பொறுத்து இழப்பீடு….!
19ஆம் தேதி மணிக்கணக்காக தாமதமானாலும் 20ஆம் தேதி 24 நிமிடங்கள் மட்டுமே தாமதமானது. ஐஆர்சிடிசி விதிகளின்படி ரயில் குறிப்பிட்ட நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதம் ஆனால் ஒரு பயணிக்கு 100 ரூபாயும் 2 மணி நேரங்களுக்கு மேல் தாமதமானால் 250 ரூபாயும் அபராதத் தொகை செலுத்துவார்கள்.