
தனியார் நிறுவனங்களில் பாதுகாப்புக்காக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
இதற்கான ஆட்களை, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெறுகின்றன.
இதற்காக, அந்த பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. அதேசமயத்தில், ஊதியத்தை அந்த பாதுகாப்பு நிறுவனங்களே நிர்ணயித்து வழங்குகின்றன.
இவ்வாறு நாடு முழுவதும் 90 லட்சம் பேருக்கு ஆயிரக்கணக்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், இந்த பாதுகாப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையிலும், அவற்றில் பணிபுரியும் நபர்களுக்கான நலன்களை பாதுகாக்கும் விதமாகவும், புதிய விதிமுறைகளை வகுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மேலும், இதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு தனிநபர்களுக்கும், அமைப்புகளுக்கும் உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இணையதள முகவரியான www.mha.gov.in – இல் சென்று பரிந்துரைகளை வழங்கலாம்.