
கேரளாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில அரசு இலவச அதிவேக இன்டெர்நெட் இணைப்பு வழங்க உள்ளது. மேலும் பிற குடும்பங்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்க உள்ளது.
கேரள அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.1,548 கோடி செலவிலான இந்த திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

கேரள மின்சார வாரியமும் கேரள தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனமும் இணைந்து மாநிலம் முழுவதும் ஏற்படுத்தவுள்ள கண்ணாடியிழை கேபிள் நெட்வொர்க் மூலம் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தலைமையிலான தொழில் கூட்டமைப்பு இதற்கான ஒப்பந்தம் எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு (2020) டிசம்பருக்குள் இத்திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.