
நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாட்டால், கடுமையாக விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.100 முதல் ரூ. 180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்களில் சற்று விலை குறைந்து இருந்தாலும் பெரிய அளவு விலையில் வித்தியாசம் இல்லை.
இந்த நிலையில் கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் நேற்று, ‘100 ரூபாய்க்கு 4 கிலோ வெங்காயம்’ விற்பனை செய்யப்பட்டது.
மக்கள் இதை அறிந்த உடன் வேகமாக வந்து வாங்கி சென்றனர். வாடிக்கையாளர்கள் பலர் அந்தக் கடையில் எழுதப்பட்டிருந்த, ‘4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்’ என்ற வாசகத்தை செல்போனில் படம்பிடித்து, தெரிந்தவர்களுக்கு அனுப்ப, மேலும் கூட்டம் முண்டியடித்தது.
இது குறித்து கடை உரிமையாளரும், பான்பரி மார்க்கெட் சங்க செயலாளருமான பக்கிராமிடம் கேட்டதற்கு, “பெங்களூரு பகுதியிலிருந்து நேற்று லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது.
பெங்களூருவில் இருந்து அனுப்பிய மொத்த வியாபாரி தெரிவித்தது போல 4 கிலோ வெங்காயம் (சிறிய பல்லாரி வெங்காயம்) 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மேலும் பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ ரூ 60க்கும், சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.140க்கு விற்பனை செய்கிறோம்.
எங்களுக்கு வழங்கக்கூடிய வெங்காய விலையை வைத்து தான் நாங்கள் விலை நிர்ணயம் செய்கிறோம். 4கிலோ 100 ரூபாய் என்ற அளவில் வந்த 22டன் வெங்காயமும் விற்று தீர்த்து விட்டது” என்றார்.
ஆனால், கடலூரில் மற்ற கடைகளில் நேற்று வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் தர வாரியாக விற்கப்பட்டன.
இந்த ஒரு கடையில் மட்டும் எப்படி சாத்தியம் என்று பிற வியாபாரிகளிடம் கேட்டதற்கு, அளவில் சிறியதாக, சற்றே உலர்ந்த தன்மையில் இருப்பதால் இந்த விலைக்கு கிடைத்துள்ளது. தவிர, பெங்களூருவில் இருந்து மொத்த விலைக்கு கொள்முதல் செய்து, பெரிய அளவு லாபம் எதிர்பார்க்காமல் விற்றதும் ஒரு காரணம் என்று தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக இதுபோல வெங்காய வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விலை கட்டுக்குள் வரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.