டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: லஞ்சம் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா?!

Published:

13 July31 TNPSC - 2026

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதில், ஒரு தேர்வருக்கு எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளான கிராம நிர்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், வரிதண்டலா் உள்ளிட்ட 9,398 காலிப் பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பா் 1 ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை, 13,66,548 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் நவம்பா் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 24,260 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 40 பேர் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களுக்குள் வந்ததை அடுத்து இதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. தொடர்ந்து தேர்வாணைய அதிகாரிகள் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். இந்த மையங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவா்களை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இதன் பின்னர், சென்னை, தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி விசாரணை தொடங்கியது. தேர்வாணையச் செயலாளா் நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுதன் உள்ளிட்டோர் இந்த விசாரணையை நடத்தினா். இந்த விசாரணையின்போது தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தேர்வாணையச் செயலா் நந்தகுமார், சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், கூட்டுச் சதி, அரசுக்கு களங்கம் ஏற்படுத்துதல்,மோசடி செய்தல், அரசு ஆவணத்தை போலியாக்குதல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். உரிய ஆவணங்களை தோவாணைய அதிகாரிகள் ,சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். தேர்வர்களின் விடைத்தாள்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வழக்கில் துப்பு துலக்க சிபிசிஐடி கண்காணிப்பாளர் மல்லிகா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாட்சியா்கள் வீரராஜ், பார்த்தசாரதி, வட்டாட்சியா் அலுவலக உதவியாளர், ஆயுதப்படைக் காவலா் இருவர் என 5 பேரை வியாழக்கிழமை விசாரணைக்கு சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த முறைகேட்டில் இடைத் தரகா்களாக செயல்பட்டவர்கள், தேர்வா்களிடம் பணம் வாங்கியவர்கள், தேர்வர்கள் என மொத்தம் 15 பேரை சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு அழைத்து வந்து தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இதில், இடைத்தரகா்களாக செயல்பட்ட சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்ககத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் ஏ.ரமேஷ் (39), எரிசக்தித் துறை உதவியாளராகப் பணிபுரியும் மு.திருக்குமரன் (35) மற்றும் தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்ற திருவல்லிக்கேணியைச் சோந்த ர.நிதீஷ்குமார் (21) என மூன்று பேரைக் கைது செய்தனா்.

தொடர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக வெங்கட்ரமணன், திருவேல்முருகன், ராஜசேகர், காலேஷா என மேலும் 4 பேர் சனிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டனர். தேர்வில் தேர்ச்சி பெற தலா ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை லஞ்சமாக அவர்கள் பெற்றுக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img