டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் நடத்தும் போராட்டத்தால் ஆவின் பால் விநியோகம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பால்வளத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆவின் டேங்கா் லாரிகளுக்கான புதிய விலைப்புள்ளி ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பால் விநியோகம் பாதிக்காத வகையில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து பால்வளத்துறை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, ஆவின் பால் டேங்கர் ஒப்பந்ததாரர்கள் 14.02.2020 அன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி பால் டேங்கர் வாகனங்களை இயக்குவதில்லை என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குநர் தலைமையில் அனைத்து அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை பெருநகருக்கு தங்கு தடையின்றி பால் கொண்டு வர அனைத்து விதமான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை பெருநகர பால் பண்ணைகளுக்கு தேவையான பாலினை பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் பால் டேங்கர்கள் மூலம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட துணை பதிவாளர்கள் மற்றும் பொது மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஆவின் பால் டேங்கர் ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோருக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தங்கு தடையில்லாமல் தேவையான பால் கிடைக்க அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பால்வளத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய நிர்வாக இயக்குநர் மா. வள்ளலார் தெரிவித்துள்ளார்.