பஸ்சில் ஓட்டையில் மாட்டிய சிறுவன்! மகனை மீட்டதோடு போராடி ஓட்டையை அடைத்த தாய்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
usha - 2026

வத்தலக்குண்டு: திண்டுக்கல் அருகே அரசு பஸ்சில் இருந்த ஓட்டையில் சிறுவன் கால் சிக்கியது. சாமர்த்தியமாக செயல்பட்டு மகனை காப்பாற்றிய தாய், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் தனி ஒருத்தியாக போராடி, பஸ்சில் இருந்த ஓட்டையை அடைக்க வைத்தார். அவரை பொதுமக்கள் பாராட்டினர்.

திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் உஷா. இவர் நேற்று மதியம் 12 மணியளவில் தனது 3 வயது மகன் பாண்டியுடன், வத்தலக்குண்டு செல்ல திண்டுக்கல்லில் இருந்து தேனி சென்ற அரசு பஸ்சில் ஏறினார்.

இருவரும் டிரைவரின் சீட் பின்புறம் உட்கார்ந்தனர். திண்டுக்கல் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது மகன் பாண்டி திடீரென அலறினார். உடனே உஷா சீட்டின் அடியில் பார்த்தார். 

அங்கே இருந்த ஓட்டையில் பாண்டியின் வலது கால் சிக்கியிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த உஷா, ஓட்டையில் மகன் விழுந்து விடாமல் தடுத்து, கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

மெதுவாக காயம் ஏதும் ஏற்பட்டு விடாத வண்ணம், ஓட்டையிலிருந்து மகனின் காலை எடுத்து விட்டார். பின்னர் கண்டக்டர் இருவரையும் இடம் மாற்றி உட்கார வைத்தார்.

இது குறித்து தனது செல்போனில் இருந்து, திண்டுக்கல் போக்குவரத்து கழக கிளை மேலாளர் புகழேந்தனிடம் புகார் செய்த உஷா, பஸ்சில் உள்ள ஓட்டையை உடனடியாக அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.

கிளை மேலாளர் புகழேந்தன் மற்றும் அதிகாரிகள் இதற்கு சரியாக பதில் கூறவில்லை. பஸ் வத்தலக்குண்டு வந்ததும், பஸ்சில் இருந்து இறங்க மறுத்து, குழந்தையுடன் உஷா அமர்ந்து கொண்டார். மேலும் பஸ்சை எடுக்கக் கூடாது என்றும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறி வாக்குவாதம் செய்தார்.

செய்வதறியாமல் திகைத்த கண்டக்டரும், டிரைவரும் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் இறக்கி, வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ்சை வத்தலக்குண்டு போக்குவரத்து கழக பணிமனைக்கு எடுத்து சென்றனர்.

உஷாவும் அதே பஸ்சில் அவர்களுடன் சென்றார். அங்கு டிப்போ மேலாளர் நாகபாண்டியன், உஷாவை சமாதானம் செய்து அனுப்புவதில் குறியாக இருந்தார். ஆனால் அவரது சமாதானத்தை ஏற்க மறுத்து, உஷா தனது போராட்டத்தை தொடர்ந்தார்.

மாலை 4 மணியளவில் திண்டுக்கல்லில் இருந்து, போக்குவரத்துக் கழக மேலாளர் புகழேந்தன், வத்தலக்குண்டு வந்தார். பஸ்சில் இருந்த ஓட்டையை அடைக்குமாறு, பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

உஷாவின் முன்னிலையில் பஸ்சில் இருந்த ஓட்டை அடைக்கப்பட்டது. மற்ற குறைகளும் சரி செய்யப்பட்டன. அதன் பின்னரே, அங்கிருந்து உஷா புறப்பட்டார்.

தனி ஒருத்தியாக போராடி, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க வைத்த உஷாவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

தனது போராட்டம் குறித்து உஷா கூறுகையில், ”அரசு பஸ்களின் ஓட்டைகளில் விழுந்து உயிர் பலி ஏற்பட்டும் இதுபோன்ற அலட்சியப்போக்கு தொடர்கிறது. அதிர்ஷ்டவசமாக எனது மகனை நான் காப்பாற்றி விட்டேன்.

வேறு எந்த குழந்தைக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு நான் போராடினேன். மோசமான நிலையில் ஓடும் அரசு பஸ்களை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 10 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.