தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 58 என்றும், இதனால் மொத்த பாதிப்பு 969ஆக உயர்ந்திருக்கிறது என்றும் கூறினார் தலைமைச் செயலர் சண்முகம். மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிடும் அறிவிப்பு பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார், தலைமைச் செயலர் சண்முகம்!
சுகாதாரத்துறை குறித்து மட்டும் பதில் அளிக்க வேண்டுமென்றால் பீலா ராஜேஷ் பதிலளிப்பார்கள்! சுகாதாரத்துறை மட்டுமல்லாமல் அரசின் பல திட்டங்களையும் சொல்ல வேண்டியிருப்பதால் தலைமைச் செயலாளராக நான் உங்களை சந்தித்து வருகிறேன் என்று, பீலா ராஜேஷ் பேட்டி அளிக்காதது குறித்து அப்போது, தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல் அளித்தார்.
மேலும் அவர் கூறியதாவது… “இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தற்போதைய சூழலில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதல்வர்கள் கோரிக்கை வைத்தனர். ஒருவேளை நீட்டிக்கப்படாவிட்டால் இதுவரை எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற முடியாது எனவும் முதல்வர்கள் வலியுறுத்தினர்.
தமிழக முதல்வரும் பல்வேறு வல்லுநர்களைக் கேட்டறிந்து தமிழகத்திலும் 2 வாரங்களுக்காவது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எடுத்துரைத்தார். பிரதமர் பல்வேறு முதல்வர்களின் கருத்தைக் கேட்டு அறிவுரையும் வழங்கியிருக்கிறார்.
ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பரவலாக பயன்படுத்துவது குறித்து மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஏற்ப பச்சை, மஞ்சள், மற்றும் ஆரஞ்சு நிறம் என மூன்று வகையாகப் பிரித்து நோய்த் தொற்றுக்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.
வல்லுநர்கள் தெரிவித்த கருத்தையும், பிரதமர் மற்றும் பிற மாநில முதல்வர்கள் கூறிய கருத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அமைச்சரவையில் எடுத்துரைத்தார்.
ஊரடங்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படுத்தினால், அதற்கான முழு பலன் கிடைக்காது. எனவே, நாடு தழுவிய அளவிலான முடிவை பிரதமர் அறிவிக்க வேண்டும் என்கிற சூழலைக் கருத்தில் கொண்டு பிரதமர் எவ்வாறு அறிவிக்கிறாரோ அதை முழுமையாக ஏற்று செயல்படுத்துவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், கடந்த 21 நாள்களாக பொது மக்கள் ஊரடங்குக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு பாராட்டுகளும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.” என்றார்.
- தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா
- தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
- இன்று 58 பேருக்கு தொற்று உறுதியானதால் தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 969 ஆக உயர்வு
- ஈரோட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்தார்
- தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
- தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் வந்து சேரவில்லை
- தமிழகத்தில் கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தேவையான அளவு உள்ளது
- தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை
- தமிழகத்தில் ஊரடங்கு குறித்து முடிவெடுக்க போதுமான காலம் உள்ளது. அவசரம் காட்ட தேவையில்லை
- பிரதமர் எத்தனை நாட்கள் ஊரடங்கை அறிவிப்பார் என்பதை பொறுத்து தமிழகத்தில் அமல்படுத்தப்படும்
- டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது
- தனிமைப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது
- தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க 29,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன
- ஹைட்ரோக்சிகுளோரோகுயின், பாரசிட்டமால் போன்ற மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளது