
ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பின்னர் வேலை இழப்பு, பணமின்மை, வியாபாரத்தில் பாதிப்பு என மேலும் சில காரணங்களால் குற்றங்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீஸார் அறிவுரை கூறுவது போல், சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. ஒவ்வொரு மாவட்ட போலீஸாரின் பெயரிட்டு, இந்த அறிவுரைகள் பெரிதாக வலம் வருகின்றன.
கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இருப்பினும், சில பல தளர்வுகளுடன், மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் படும் என்று தெரிகிறது. இதற்கான கோரிக்கையை தமிழக அரசும் முன் வைக்கிறது. மத்திய அரசும் மேற்கொள்ளும் என்பதற்கேற்ப பிரதமர் மோடியும் இதனை தெளிவாக தனது ஊடக உரையில் தெரிவித்து விட்டார்.
எனவே, வெகுநாட்களாக முடங்கிக் கிடப்பதால், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப் பட்ட பின்னர், அத்தகைய சூழலில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
- ஆண்கள் விலை உயர்ந்த கடிகாரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பெண்கள், அதிக நகைகள் அணிவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது
- வழிப்பறிக்கு வாய்ப்பு அதிகம் என்பதால், மொபைல் போன்களை, பொது வெளியில் அதிகம் பயன்படுத்த வேண்டாம்
- தெரியாத நபர்களுக்கு, வாகனங்களில், ‘லிப்ட்’ கொடுப்பதை தவிர்க்க வேண்டும்
- வெளியில் செல்லும் போது தேவைக்கு அதிகமாக பணம் எடுத்து செல்ல வேண்டாம்
- கிரெடிட், டெபிட் கார்டுகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்
- வீடுகளில், முன், பின் பக்க கதவுகள் பூட்டி இருக்கிறதா என, உறுதிப்படுத்தி கொள்ளவும். வீடுகளில் எச்சரிக்கை மணி பொருத்துவது அவசியம்
- வெளியில் சென்றவர்கள், வீடுகளுக்கு பிரதான சாலை வழியாக திரும்ப வேண்டும்; ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத குறுக்கு பாதைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்
- நீங்கள் இருக்கும் இடத்தில், பாதுகாப்பு உணர்வுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
- முக கவசம் அணிந்து இருப்பர் என்பதால், திருடர்களை உடனே அடையாளம் காண்பது கடினம். அதனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
- வாடகை கார்களில் செல்வோர், தங்கள் பயணம் குறித்து, பெற்றோர், உறவினர்கள், நம்பிக்கைக்குரிய நண்பர்கள், பாதுகாவலருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
- நெரிசலான பஸ் பயணத்தை தவிர்க்க வேண்டும். நடைபயிற்சிக்கு பிரதான சாலைகளை பயன்படுத்துங்கள்; வெற்று வீதிகளை தவிர்க்கவும்
- கூடுமானவரை, கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில், அதிகமாக நேரத்தை செலவிட வேண்டாம்
- பள்ளி, கல்லுாரி செல்லும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்
- வாகனங்களில், எவ்வித மதிப்புமிக்க பொருட்களையும் வைக்க வேண்டாம். இவ்வாறு, அவர்கள் கூறினர். மேற்கண்ட தகவல்கள், ‘வாட்ஸ் ஆப்’ செயலி வாயிலாக, பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
