
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கூகுள் தேடுபொறியில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் கொரோனா பற்றிய தேடல்கள் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது திரைப்படங்கள், வெப்பநிலை ஆகியவை இடம்பிடித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் தேடுபொறி டிரெண்டிங்கில் பதிவாகும் தேடுதல் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் குறைவாக இருந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொடர்பான தேடுதல்கள் அதிகமாக இருந்தன. ஆனால், கொரோனா தொற்று வேகமாகப் பரவத்தொடங்கிய மே மாதத்தில், கொரோனா பற்றிய தேடல்கள் பாதியாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மே மாதத்தில் கூகுள் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் கொரோனா என்ற வார்த்தை 12வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொதுமக்கள் திரைப்படம், வார்த்தைக்கு அர்த்தங்கள், செய்திகள், வெப்பநிலைக்கு முன்னுரிமை அளித்துள்ளனர்.
இதன் மூலம், பொதுமக்களுக்கு மே மாதத்திலேயே கொரோனா பற்றிய அச்சம் குறைந்துவிட்டதாகவும், கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தைப் போன்ற வாழ்க்கை முறைக்கு வேகமாகத் திரும்பி வருவதும் தெரிய வருகிறது.
மே மாதத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லாக்டவுன் 4.0 என்று இருந்தது
கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. தற்போது ஐந்தாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், மே மாதத்தில் கொரோனா தொடர்பான தேடல்களில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து என்பதே அதிகபட்ச தேடலாக இருந்துள்ளது.
அதே சமயம் இந்தியாவிலேயே கொரோனா பற்றி அதிகம் தேடப்பட்ட பகுதிகளாக கோவா, மேகாலயம், சண்டிகர், திரிபுரா ஆகியவை உள்ளன.