
ஒரு வைரஸ் கிருமியால் வண்டி ஓடமாகிறது. ஓடம் வண்டி ஆகிறது. லாக்டௌனால் பலரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. வேலையின்றி பணமின்றி ஜீவிதங்கள் பரிதவிக்கின்றன.
கற்ற வித்தை எல்லாம் வயிற்றுப் பாட்டுக்கு தானே! ஆனால் பலருக்கும் கல்வியறிவு கற்றுத்தந்த ஆசிரியர்களின் வயிற்றுப்பாடே கேள்விக்குறியாகி உள்ளது. எத்தகைய பணிகளில் இறங்கி உள்ளார்கள் பாருங்கள்!

கரோனா லாக்டௌனில் பள்ளி ஆசிரியர் பஜ்ஜி செய்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வகுப்பறையில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்ல வேண்டிய ஆசிரியர் வாணலியில் வாழைக்காய் பஜ்ஜி பொறித்தெடுக்கிறார்.
இவர் பெயர் ராம்பாபு. எம்ஏ, பிஎட் படித்துள்ளார். தெலங்காணா சத்துபல்லியில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். கிடைத்த வருமானத்தில் தாய், மனைவி, இரு குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

ஆனால் கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சம்பளம் கிடைக்காத வறுமை. ஒரு தள்ளு வண்டியை வாடகைக்கு எடுத்து இதோ… இப்படி பஜ்ஜி போட்டு விற்கிறார். மனைவி உதவுகிறார். வியாபாரம் டல்லாக இருந்தாலும் ஓரளவு பசி ஆற்றுகிறது என்கிறார் ஆசிரியர்.
காலையில் இட்லி தோசையும் மாலையில் பஜ்ஜி போண்டாவும் போடுகிறார்.

நல்லாசிரியர் விருது பெற்ற இந்த ஆசிரியரின் நிலைமை பலரையும் வருந்தச் செய்கிறது என்கின்றனர் அவருடைய மாணவர்கள். அரசாங்கம் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும் என்று கோருகிறார்கள் மாணவர்கள்.
இதே போல தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்ற ஒரு ஆசிரியருக்கு அவருடைய மாணவர்கள் உதவி செய்தார்கள். இந்த ஆசிரியரை யார் காப்பாற்றப் போகிறார்கள்?