
கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருள்களை வாங்க வருபவர்கள், வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் நடந்தே செல்ல வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அதை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங், காய்கறி, மளிகைப் பொருள்களை வாங்க காரில் வீட்டிலிருந்து வந்துள்ளார்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் காரை வழிமறித்துள்ளனர். பின்னர் காரை ஓட்டியவர் யாரென்று தெரியாமல், எங்கு செல்கிறீர்கள், இ-பாஸ் இருக்கிறதா என்று வழக்கம் போல விசாரித்துள்ளனர்.

அதற்கு கிரிக்கெட் வீரர் ராபின்சிங் ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளார். அப்போது அவரிடம் விசாரித்த போலீஸாருக்கு ஆங்கிலம் சரியாக புரியாமல் விழி பிதுங்கியுள்ளனர். பின்னர் தங்கள் பாணியில், காரை ஓரங்கட்டுங்கள், டிரைவிங் லைசென்ஸ் எடுங்க என கூறியுள்ளனர்.
இதையடுத்து, ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக உங்களின் காரை பறிமுதல் செய்கிறோம், மேலும் அபராதமும் விதிக்கிறோம் என்று போலீஸார் கூறியுள்ளனர். உடனே கிரிக்கெட் வீரர் ராபின்சிங், தனக்குத் தெரிந்த ஒருவருக்கு போன் செய்து காரில் வரும்படி கூறியுள்ளார்.
அவர் வந்ததும் அந்தக் காரில் ஏறி ராபின்சிங் சென்றுள்ளார். காரை பறிமுதல் செய்த போலீஸார் சாஸ்திரி நகர் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அதன்பிறகு போலீஸாரும் தங்களின் அன்றாடப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் சாஸ்திரி நகர் போக்குவரத்து பிரிவு போலீஸாருக்கு காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் பேசியுள்ளார். அப்போது அவர், கடந்த 20-ம் தேதி உத்தண்டியில் ஏதாவது வி.வி.ஐ.பி-யின் காரை பறிமுதல் செய்தீர்களா என்று விசாரித்துள்ளார்.
அப்போது போலீஸார் வி.வி.ஐ.பி காரா என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் போலீஸ் உயரதிகாரி, காரின் நம்பரைக் கூறியதும் போக்குவரத்து போலீஸார் ஆமாம் சார், அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கா என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.
அதன்பிறகே காய்கறி வாங்க ஊரடங்கு உத்தரவை மீறிய கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கின் கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கிரிக்கெட் வீரர் ராபின்சிங் என அங்கு பணியில் இருந்த போலீஸாருக்கு முதலில் தெரியவில்லை. அவரும் தன்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
ஜென்டில்மேனாகவே நடந்துகொண்ட கிரிக்கெட் வீரர் ராபின்சிங் அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு காரில் சென்றுவிட்டார். ஊரடங்கை மீறி காரில் வந்த கிரிக்கெட் வீரர் ராபின்சிங், குடியிருக்கும் பகுதி கட்டுப்படுத்த பகுதியாக உள்ளது.
அதனால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கே காரை ஓட்டி வந்துள்ளார். விசாரணைக்குப் பிறகுதான் அவர் கிரிக்கெட் வீரர் என்ற தகவல் எங்களுக்கு தெரிந்தது” என்றனர்.
முன்னணி கிரிக்கெட் வீரர் ராபின்சிங், சென்னையில் தங்கியிருந்து சில பிசினஸ்களை செய்துவருவதாகவும் தகவல் உள்ளது. கிரிக்கெட் வீரர் ஒருவரின் கார் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் பரபரப்பாக பேசப்படுகிறது.