
குடிகார கணவனை கொடூரமாக தாக்குவதை பார்த்த மனைவி, ஆவேசத்துடன் சப் இன்ஸ்பெக்டர் கன்னத்திலேயே பளார் என ஓங்கி ஒரு அறை விட்டார். இந்த சம்பவம் வீடியோவாகவும் வெளிவந்து பரபரப்பை தந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ளது ஆனத்தூர் என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் முத்துராமன். இவர் தற்போது அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி வருகிறார்.
வீடு முழுவதையுமே, அரசு கட்டி தரும் என்றாலும், வீடு கட்டும் பணிகளை மேஸ்திரி சுபாஷ் என்பவர்தான் கவனித்து வந்துள்ளார். இதற்காக, முத்துராமன் வீட்டுக்கு சிமெண்ட் மூட்டைகள், செங்கற்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இவைகளை சுபாஷ் எடுத்து சென்றதாகவும், அதை முத்துராமன் தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதான் இவர்களுக்குள் சண்டையாக நீடித்து வந்துள்ளது. கடந்த 4-ம் தேதி, வங்கி கணக்கிற்கு அரசு செலுத்திய 25,000 ரூபாய் பணத்தை எடுத்து தர வேண்டும் என முத்துராமனிடம் சுபாஷ் கேட்டிருக்கிறார். ஏற்கனவே தன் வீட்டில் இருந்து சிமெண்ட், செங்கலை தூக்கி சென்ற ஆத்திரத்தில் இருந்தவர், இப்போது பணம் தர முடியாது என்று சொல்லி உள்ளார். இது மறுபடியும் வாக்குவாதமாக மாறியது.
திருவெண்ணெய்நல்லுார் செக்போஸ்ட்டில் பணியில் இருந்த எஸ்.ஐ. தங்கவேல், போலீஸ்காரர் முருகன் ஆகியோரிடம் இதை பற்றி புகார் சொல்லி, அவர்கள் 2 பேரையும் கிராமத்துக்கு அழைத்து வந்தார். 2 போலீசாரும் ஆனாத்தூர் கிராமத்திற்கு வந்ததும், வீட்டில் குடி போதையில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனை வெளியே அழைத்தனர்எதுவுமே விசாரிக்காமல் அவரை சரமாரியாக தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் பைக் சாவியால் குத்தியதில் முத்துராமனுக்கு மூக்கில் காயமடைந்து ரத்தம் கொட்டி உள்ளது.. 2 பற்களும் உடைந்துவிட்டன.. இதை பார்த்ததும், முத்துராமனின் மனைவி ஆவேசமானார். “விசாரணை செய்யாமலேயே ஏன் அடிக்கறீங்க” என்று கேட்டபடியே பளார் என எஸ்ஐ கன்னத்தில் ஒரு அறைவிட்டார். அதற்குள் கிராம மக்களும் ஆத்திரமடைந்து, ஏன் அவரை அடிச்சீங்க என்று கேட்டு போலீசாரிடம் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டரின் பைக் சாவியையும் பிடிங்கி வைத்து கொண்டு தர மறுத்தனர். மற்றொரு புறம், படுகாயமடைந்த முத்துராமனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே விஷயத்தை கேள்விப்பட்டு டிஎஸ்பி நல்லசிவம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளார். ஆனால் கிராம மக்கள் 3 போலீஸ்காரர்களையுமே சிறைபிடித்துவிட்டனர்.
பிறகு, அங்கு வந்த வருவாய் அதிகாரிகள், கிராம மக்களிடம் பேசி, 3 போலீஸ்காரர்ளையும் மீட்டு சென்றனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து பதிவிட்டு விடவும், அது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது