
மதுரையில் சுகாதாரப் பணியாளர்களின் அலட்சியத்தாலும் வீம்பினாலும், பெண் ஒருவர் பெரும் அவஸ்தைகளைச் சந்தித்துள்ளார். இந்த அவலம், தமிழகத்தில் கொரோனா தாக்குதலின் அடுத்த மையம் என கூறப்படும் மதுரையில் நடந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சி ஆம்பூலன்ஸ் மதுரையில், வீரவாஞ்சி தெருவில் வந்து ஒரு வீட்டின் அருகே வந்து நின்றதாம். அதிலிருந்து சுகாதார செவிலியர், மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளர்கள், கவசம் அணிந்த ஒருவர் என சிலர் இறங்கி வந்துள்ளனர்.
அதில், சுகாதார செவிலியர் மட்டும் ஆம்பூலன்ஸ் நின்ற வீட்டின் அருகே சென்று வாசலில் பெண் ஒருவரை பெயரை சொல்லி அழைத்துள்ளனர். அவர்கள் அழைத்ததால், வெளியே வந்த அந்தப் பெண் அவர்களிடம் என்ன என்று கேட்டுள்ளார்
அந்தப் பெண், மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த பொறியாளர்! அவரிடம், சுகாதார செவிலியர் கொரோனா குறித்து கூறி, உடன் வருமாறு வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் அந்தப் பெண்ணோ சுகாதார செவிலியரைப் பார்த்து எனக்கு கொரோனா தொடர்பாக எந்த வித அறிகுறியும் இல்லை, நீங்கள் வேண்டுமானால், காய்ச்சலுக்கு சோதிக்கும் கொரோனா கிட் கொண்டு என்னை சோதித்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால், இதை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத அந்த மாநகராட்சிப் பணியாளர்கள் வேறு எதுவும் பதில் அளிக்காமல், அந்தப் பெண் பொறியாளரை ஆம்பூலன்சில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
மறுநாள் காலை விசாரித்தபோது, அந்த ஆம்பூலன்சின் உள்ளே ஏழு பேர் அமர்ந்திருந்தனராம். அந்த வேன் மதுரையில் பல இடங்களில் சுற்றி விட்டு, மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டின் வாசலில் நிறுத்தப்பட்டு, ஆம்பூலன்சில் இருந்த அனைவரும் கீழே இறங்கச் செய்யப் பட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த அலுவலர் ஒருவர், இந்த பெண் பொறியாளர் பெயர் லிஸ்டில் இல்லையே, ஏன் அழைத்து வந்தீர்கள் என்று சுகாதாரப் பணியாளர்களிடம் கேட்க, அவர்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், அந்தப் பெண்ணை, வாசலோடு வீட்டுக்குப் போங்க… ஆனா 14 நாட்கள் வீட்டிலே தனிமைப் படுத்திக்குங்க… என்று கூறி அனுப்பினராம்.
எந்தவித அறிகுறியும் இல்லாமல், வீட்டில் அமைதியாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பெண்ணை, கொரொனா அறிகுறி என்று சொல்லி கொரோனா அறிகுறியுடன் வந்த சிலருடன் ஒன்றாக வேனில் அமர வைத்து அழைத்துச் சென்று, இப்போது அந்தப் பெண்ணுக்கும் கொரோனா பீதியைக் கிளப்பி விட்ட அந்த மாநகராட்சிப் பணியாளர்களை என்னவென்று சொல்வது? அவர்களை என்ன செய்வது?
இருந்தாலும், அந்தப் பெண்ணும், மாநகராட்சி அதிகாரிகளின் சொல்லை மதித்து வீட்டுக்குள்ளே இருந்து வருகிறார் என்பதுதான் கூடுதல் தகவல்!
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை