
நடிகர் கமல்ஹாசனின் பிக்பாஸ் 4 விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை புறக்கணிப்போம் என்று இந்து மக்கள் கட்சி பிரசார இயக்கம் தொடங்கியுள்ளது. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி மத்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் செய்தி தணிக்கைத் துறையிடம் தமிழக அரசின் சார்பில் முறையீடு செய்ய வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…
நடிகர் கமல்ஹாசனின் பிக்பாஸ் 4 விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியினை புறக்கணிப்போம் – இ.ம.க. பிரச்சார இயக்கம் – மற்றும் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி மத்திய அரசின் தொகைக்காட்சி ஒளிபரப்பு ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் செய்தி தணிக்கைத் துறையிடம் தமிழக அரசின் சார்பில் முறையீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பொழுது போக்கு தனியார் தொலைக்காட்சியான விஜய் T.V.யில் நடிகர் கமலஹாசனின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
ஏற்கனவே பிக்பாஸ் 1,2,3 நிகழ்ச்சிகள் மூலம் கமலஹாசனும் விஜய் தொலைக்காட்சி நிறுவனமும் பெரும் வருவாயை ஈட்டியுள்ளனர். முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சமூக பொறுப்புணர்வு இல்லாமல் தமிழர் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் 15க்கும் மேற்பட்ட பிரபலங்கள் நூறு நாட்கள் தங்கி அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை 60க்கும் மேற்பட்ட கேமிராக்களில் படம் பிடிக்கப்பட்டு 24 மணி நேர நிகழ்ச்சியை ஒன்றரை மணி நேரமாக எடிட் செய்து ஒளிபரப்புகின்றனர்.
திருமணமான ஒருவரை இன்னொருவர் காதலிப்பது போலவும், சாதி மத உணர்வுகளை தூண்டிவிடும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. அந்தரங்க விசயங்கள் கூட அலசி ஆராயப் படுகின்றன. ஆபாசமாக பெண்களை காட்சிப்படுத்துதல், குடும்ப அமைப்பு முறைகளுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெரும் வகையில் கலாச்சார பண்பாட்டு சீரழிவு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஒரு பிரபலமான நடிகர் தற்போது ஒரு அரசியல் கட்சியை நடத்திவருபவர் பணத்திற்காகவும், புகழுக்காகவும் மலிவான விளம்பரத்திற்காகவும் இத்தகைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சரியானது தானா என்பதை அவரது மனசாட்சிக்கே விட்டுவிடுகிறோம்.
தமிழக மக்களிடையே சினிமாவின் தாக்கம் அதிகம் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். தற்போது இந்நிகழ்ச்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மிகவும் கீழ்த்தரமான யுக்திகளை கையாளுகின்றனர். டாஸ்க் எனும் பெயரில் சண்டைகள் மூட்டி விடப் படுகின்றன. மிட்நைட் மசாலா பாணியில் இளம் பெண்கள் ஆண்களுடன் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்படுகின்றன. தமிழக மக்களின் சினிமா தொலைக்காட்சி மோகத்தை பயன்படுத்தி சமுதாயத்திற்கு தவறாக முன்னுதாரணத்தை ஏற்படுத்து கின்றனர்.
பெண்கள் குழந்தைகள் குடும்பத்துடன் அமர்ந்து இந்நிகழ்ச்சியை பார்த்திட முடியுமா? சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி பார்க்க வைக்கின்றனர். பணம் மற்றும் விளம்பரத்திற்காக இத்தகைய தரமற்ற கலாச்சார பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இது சம்மந்தமான விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஜனநாயக வழியில் சட்டப் பூர்வமாக இ.ம.க தொண்டர்கள் மேற்கொள்வார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியை தடைசெய்யக் கோரி விரைவில் அறப்போராட்டங்களை நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் இது விஷயத்தில் நேரடி கவனம் கொடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்… என்று கோரியுள்ளார்.