மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்! நவம்பர் 20ஆம் தேதி அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து மு.க.அழகிரி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி தன் மகன் ஸ்டாலின் அடுத்த திமுக., தலைவர் ஆக்கப் பட வேண்டும் என்பதற்காக, இன்னொரு மகன் அழகிரியை ஓரங்கட்டி வைத்திருந்தார். ஆனால், ஸ்டாலின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அழகிரி ஈடுபடவே, ஸ்டாலினுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அழகிரியை கட்சியில் இருந்து நீக்கினார்.
கருணாநிதி உடல்நலம் குன்றி படுத்திருந்த காலம் முதல், கடைசி வரை அழகிரி திமுக.,வில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. கருணாநிதி மறைந்த பின்னரும், அழகிரியும் அழகிரி ஆதரவாளர்களும் திமுக.,வில் சேர்த்துக் கொள்ளப் படவே இல்லை. ஸ்டாலின் திமுக., தலைவர் ஆன பின்னர், அழகிரிக்கு பலம் வாய்ந்த பகுதி என்று கருதப் பட்ட மதுரை மற்றும் தென்மாவட்டங்களை ஸ்டாலின் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். தனக்கு ஆதரவானவர்களை கட்சிப் பொறுப்புகளில் கொண்டு வந்து, அழகிரி ஆதரவாளர்களை முற்றிலும் களை எடுத்தார்.
இதனால், மு.க.அழகிரிக்கு திமுக., மீதான பிடி முற்றிலும் போனது. அழகிரியின் மகன் துரை தயாநிதியாவது திமுக.,வின் பொறுப்புகளில் ஏதாவது கொண்டுவரப் படுவார் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், ஸ்டாலின் மகன் உதயநிதியே கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார்.
கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட, தென்மாவட்டங்களில் உள்ள அழகிரியின் செல்வாக்கால் ஸ்டாலின் அடிவாங்குவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அழகிரியின் செல்வாக்கு அப்படி ஒன்றுமில்லை என்று காட்டுவது போல் தென்மாவட்டங்களில் ஸ்டாலின் கையே ஓங்கியிருந்தது. அனைத்து தொகுதிகளிலும் திமுக., கூட்டணிக் கட்சிகள் வென்று, மு.க.அழகிரியின் தென்மாவட்ட செல்வாக்கை ஒன்றுமில்லாமல் காட்டியது.
இப்படி சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலை விட்டே முற்றிலும் ஒதுங்கியிருக்கும் அழகிரி, ஏதாவது தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் போதெல்லாம் திமுக மற்றும் ஸ்டாலின் குறித்து ஏதாவது கருத்துகளைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துவார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே உங்களை மதிக்காத ஸ்டாலின் ஆளுங்கட்சியாகி விட்டால் உங்கள் நிலை மோசமாகிவிடும் என்று அழகிரி ஆதரவாளர்கள் தொடர்ந்து அழகிரியை உசுப்பேத்தி வருகின்றனர். இனி திமுக.,வில் வாய்ப்பு இல்லை என்பதால், கருணாநிதி பெயரில் ஒரு கட்சியை தொடங்குங்கள் என்று அழகிரியை அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வருவார், அவர் மூலம் நெருங்கிய நட்பில் இருக்கும் அழகிரியும் கட்சியில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளைத் தொடரலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரஜினி கட்சி தொடங்கும் நிலையில் இல்லை என்று தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், மு.க. அழகிரியே தனி கட்சிக்கான பணிகளை தொடங்கியுள்ளாராம்.
நவ.20ல் ஆலோசனை, டிசம்பரில் புதிய கட்சி அறிவிப்பு என்ற கட்டத்தை நோக்கி அழகிரி நகர்ந்து வருவதாகக் கூறப் படுகிறது.