
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, ஆய்வு செய்தார்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலால் மழை கொட்டித் தீர்த்ததுடன், பலத்த காற்று காரணமாக வாழை மரங்கள், குடிசை வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. புயல் காரணமாக கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து, அதிகம் பாதிப்புக்கு உள்ளான கடலூர் மாவட்டத்தில் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதற்காக கடலூர் சென்ற முதல்வர் பழனிசாமி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். ரெட்டிசாவடி குமாரமங்கலத்தில் விவசாய நிலங்களில் பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வரிடம், மாவட்ட ஆட்சியர் சஹாமுரி புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

பின்னர் துறைமுகம் பகுதியில் மீனவர்களிடம் பாதிப்புகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். அவருடன், அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, இரவு பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த போது… கடலூரில் சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சுமார் 2.3 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்!

பயிர்க் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடும் பெற்றுத் தரப்படும். நிவர் புயலால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை ! நிவர் புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருந்தோம்!
மாவட்ட ஆட்சியர்களுக்கும் முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது! தமிழ்நாடு அரசு எடுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ‘நிவர்’ புயலால் பெரிய பாதிப்பு இல்லை !

கடலூரில் புயலால் சாய்ந்த 77 மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அரசு அறிவித்த வழிமுறைகளை கடலூர் மாவட்டம் சரியாக பின்பற்றியதால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை!
நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் விழுந்த 321 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன; அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.