
நாடு முழுதும் 9 மாநிலங்களில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எஃப்.ஐ) அமைப்பினரின் தொடர்புடைய 26 இடங்களில் மத்திய அமலாக்கத் துறை இயக்குநரகம் (இ.டி) வியாழக்கிழமை இன்று திடீர் சோதனைகளை மேற்கொண்டது. பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக பி.எஃப்.ஐ தலைவர் ஓ எம் அப்துல் சலாம் மற்றும் கேரள மாநிலத் தலைவர் நஸருதீன் எலமாரோம் ஆகியோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
தமிழ்நாடு, கர்நாடகா, பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் கேரளாவின் மலப்புரம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக இன்று காலை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) விதிகளின் கீழ் இந்த மாநிலங்களின் குறைந்தது 26 இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சிஏஏ எதிர்ப்பு கலவரத்தில் பிஎஃப்ஐயின் “நிதி பங்களிப்புகள்” குறித்து மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பி.எஃப்.ஐ தலைவரும் கேரள மாநில மின்சார வாரியத்தின் மூத்த அதிகாரியுமான சலாம் மற்றும் தீவிர இஸ்லாமிய அமைப்பின் பிற தலைவர்களின் அறிக்கைகளை மத்தியப் புலனாய்வு நிறுவனம் முன்பு பதிவு செய்திருந்தது.
இதனிடையே, இந்த சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த பிஎஃப்ஐ அமைப்பு “பி.எஃப்.ஐ தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனைகளை நடத்துகிறது. இது விவசாயிகளின் பிரச்சினையைத் திசைதிருப்பவும், பாஜக அரசாங்கத்தின் தோல்வியை மறைக்கவும் மேற்கொள்ளப் படும் முயற்சி” என்று கூறியது.
“அரசியல் அமைப்பு நிறுவனங்களை அரசியல் கருவிகளாகப் பயன்படுத்துவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு இது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், நீதிக்கான குரல் எழும்புவதைத் தடுக்கவோ அல்லது உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டங்களை பலவீனப்படுத்தவோ முடியாது” என்று அந்த அமைப்பின் சலாம் கூறினார்.
CAA எதிர்ப்பு கலவரம் தொடர்பாக பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான “நிதி தொடர்புகள்” குறித்து விசாரிப்பதாக புலனாய்வு நிறுவனம் கடந்த மாதம் கூறியிருந்தது.
சீனியர் பி.எஃப்.ஐ தலைவர்களிடமிருந்து மீட்கப்பட்ட நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் பி.எஃப்.ஐ மற்றும் பீம் ஆர்மிக்கு இடையிலான நிதி தொடர்புகள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது” என்று ஈ.டி., ட்வீட்டில் தெரிவித்திருந்தது.
இதனிடையே, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ஈடி., நடத்திய சோதனைகளுக்கு எதிராக PFI உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அந்த கும்பல் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் ED அதிகாரிகளுக்கு எதிராக நாரா-இ-தக்பீர், அல்லாஹு அக்பர் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியது.
தமிழகத்தில், குறிப்பாக தென்காசி மாவட்டம் அச்சம்புதூர் காவல் நிலைய சரகத்தில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா (S/0, நயினார் முகமது, கோவலன் கிணற்று தெரு, பண்பொழி) வீட்டில் மத்திய அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.