மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை டிச.5 சனிக்கிழமை அன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெற்றது.
அதற்கு முன்னதாக மதுரை அழகர் கோவில் பழமுதிர்ச் சோலையில் நடைபெற்ற வேலை யாத்திரை கலந்து கொண்டு பின்னர் திருப்பரங்குன்றம் வந்த பாஜக மாநிலத் தலைவர் முருகன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமியை தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது… எங்களின் வேல் யாத்திரை பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு பின்னர் நடைபெற்று வருகிறது. இடையில் புயலின் காரணமாக வேல் யாத்திரை தடைப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சேவை செய்ததற்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
திருத்தணியில் தொடங்கி மதுரை பழமுதிர்ச்சோலை திருப்பரங்குன்றத்தில் தொடர்ந்து, நாளை மறுநாள் திருச்செந்தூரில் திட்டமிட்டபடி நிறைவுபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டு நிறைவு செய்கிறார்… என்றார் எல்.முருகன்.
அதிமுக.,வுடன் கூட்டணி தொடர்கிறதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, கோபத்துடன் பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தலைவர் முருகன், நீங்களாக ஒரு கேள்வி கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும், நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன் மீண்டும் சொல்கிறேன் நீங்களாக ஒன்றை திணிக்காதீர்கள்.. அதிமுகவுனுடைய ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தொடங்கிய கூட்டணி இப்போதும் தொடரும் என்று தெரிவித்திருந்தனர். அந்த மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இருந்தார். இதுகுறித்து முறையான அறிவிப்பை எங்களுடைய தேசிய தலைமைதான் அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தோம் நீங்களாக ஏதாவது கேட்டு சொல்லாதீர்கள் என்றார்.