
நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி நாளை பாஜக.,வில் இணையவுள்ளதாக அக்கட்சித் தலைவர் விவேக் வேங்கடசாமி தெரிவித்துள்ளார்.
அண்மையில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்தார். தொடர்ந்து நடிகை விஜயசாந்தியும் பா.ஜ.க.வில் விரைவில் இணைவார் எனத் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் விஜயசாந்தி தற்போது பாஜக.,வில் இணைவது உறுதியாகியுள்ளது.
இது குறித்து தில்லியில் பாஜக தலைவர் விவேக் வேங்கடசாமி கூறுகையில், விஜயசாந்தி நாளை முறைப்படி பாஜக.,வில் இணைவார். அவர் இன்று அமித்ஷாவை சந்தித்தார். கே.சி.ஆரால் ஓரங்கட்டப்பட்ட அனைவரும் பாஜகவில் சேர்வார்கள் என்று கூறினார்.

கடந்த 1998-ஆம் ஆண்டு பாஜக.,வில் இருந்துதான் நடிகை விஜயசாந்தி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். அப்போது அவருக்கு பாஜக., மகளிா் அணி செயலாளா் பதவி அளிக்கப்பட்டது. 2005இல் பாஜக.,வில் இருந்து வெளியேறினார். பின்னர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அவர் தனிக்கட்சி தொடங்கினார். 2005 முதல் 4 வருடங்கள் தல்லி தெலங்கானா கட்சியிலும் பின்னர் 2009 முதல் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியிலும் இருந்தார். 2014இல் டிஆர்எஸ்ஸில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். இப்போது பாஜக.,வில் இணையவுள்ளார் விஜயசாந்தி.
தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ரஜினி கட்சி தொடங்கவுள்ள நிலையில், அவருடன் திரையுலகில் இணைந்து பயணித்த குஷ்பு, விஜயசாந்தி இருவரும் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பிரசாரக் களம் காண்பார்கள்!