மக்களவையின் தலைவர், திருவாளர் ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களவையின் துணைத்தலைவர், திருவாளர் ஹரிவன்ஷ் அவர்களே, மத்திய அமைச்சரவையின் என்னுடைய சகாவான, திரு. பிரஹலாத் ஜோஷி அவர்களே, திரு. ஹர்தீப் சிங் பூரி அவர்களே, இன்னும் பிற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளே, மெய்நிகர் முறையில் இணைந்திருக்கும், பல நாடுகளின் நாடாளுமன்ற அவைத்தலைவர்களே, இங்கே குழுமியிருக்கும், பல நாடுகளின் ராஜாங்கத் தூதுவர்களே, அனைத்து நாடுகளின் நாடாளுமன்ற கூட்டமைப்பின் உறுப்பினர்களே, மற்ற பிற சான்றோர்களே, மேலும் எனதருமை நாட்டுமக்களே.
இன்றைய நன்னாள், மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய நன்னாள், பாரதநாட்டின் ஜனநாயக சரித்திரத்திலே, நீலக்கல்லினைப் போல ஒளிர்வது. இந்தியர்கள் வாயிலாக, பாரத நாட்டுக் கருத்தியலால் முழுவதும் நிரம்பிய, பாரத நாட்டின் நாடாளுமன்றத்தின் மங்கலமான தொடக்கம், நம்முடைய ஜனநாயக பாரம்பரியத்தின், மிகமிக முக்கியமான கட்டங்களிலே, ஒன்றாக விளங்குகிறது. பாரதநாட்டு மக்களாகிய நாம், இணைந்து, நம்முடைய நாடாளுமன்றத்தின், இந்தப் புதிய கட்டிடத்தை உருவாக்குவோம். மேலும், நண்பர்களே, இதை விட வேறு என்ன அழகானதாக இருக்க முடியும்!! இதை விடப் புனிதமானது வேறு என்ன இருக்க முடியும்!!
நமது பாரதம், தனது சுதந்திரத்தின், 75ஆம் ஆண்டினைக் கொண்டாடும் வேளையில், அந்தப் புனித வேளையின் மெய்யான கருத்தூக்கமாக, நம்முடைய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் அமைந்திருக்கும். இன்று, 130 கோடிக்கும் மேற்பட்ட பாரதநாட்டவர்களுக்கு, பெரும்பேற்றினைக் கூட்டும் நாளிது, பெருமிதம் சேர்க்கும் நாளிது, நாம் இன்று, இந்த சரித்திர முக்கியத்துவமான நிகழ்வின், சாட்சிகளாக விளங்குகின்றோம்.
நண்பர்களே, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் உருவாக்கம், நவீனமான, மற்றும் பாரம்பரியத்தினுடைய, இணை இருப்பின் சிறந்த உதாரணமாக விளங்குவது. இது காலம், மற்றும் தேவைகளுக்கு ஏற்ற வகையிலே, தன்னிடத்திலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி. என்னுடைய வாழ்நாளிலே என்னால், அந்த ஒரு கணத்தை, என்றைக்குமே மறக்க முடியாது. அது 2014ஆம் ஆண்டு, முதன்முறையாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போது, ஜனநாயகத்தின் இந்த ஆலயத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் முன்பாக, நான் என் தலைவணங்கி, என் சிரத்தால் நிலம் தொட்டு, ஜனநாயகத்தின் இந்த ஆலயத்திற்கு ஆராதனை செய்தேன். நம்முடைய தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடமானது, சுதந்திரப் போராட்ட வேள்வி, அதன் பின்னர், சுதந்திர பாரதத்தை உருவாக்குவதில், தன்னுடைய சிறப்பான பங்கினை ஆற்றியிருக்கிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் அரசின் உருவாக்கம் கூட, இங்கே தான் நடந்தது. மேலும், முதல் அவைக்கூட்டம் கூட, இங்கே தான் கூட்டப்பட்டது. இதே நாடாளுமன்றக் கட்டிடத்திலே தான், நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. நமது ஜனநாயகம் மறுநிர்மாணம் செய்யப்பட்டது. பாபாசாஹேப் அம்பேட்கரும், இன்னும் பிற சான்றோர்களும், மத்திய அரங்கிலே ஆழமான கருத்தாய்வுக்குப் பின்னர், நமக்கெல்லாம், நமது அரசியலமைப்புச் சட்டத்தை அளித்தார்கள்.
நாடாளுமன்றத்தின் தற்போதைய கட்டிடம், சுதந்திர பாரதநாட்டின், ஒவ்வொரு உயர்வுதாழ்வுகள், நமது அனைத்து சவால்கள், நாம் கண்ட தீர்வுகள், நமது ஆசைகள் அபிலாஷைகள், மேலும் நமது வெற்றியினுடைய, அடையாளமாக விளங்கியிருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் இயற்றப்பட்ட ஒவ்வொரு சட்டமும், இந்தச் சட்டங்களின் உருவாக்கம் வாயிலாக, நாடாளுமன்ற அவைகளிலே ஆய்வு செய்யப்பட்ட, அநேக ஆழமான விஷயங்கள், இவை அனைத்தும், நம்முடைய ஜனநாயகத்தின் பாரம்பரியங்கள்.
ஆனால், நண்பர்களே, நாடாளுமன்றத்தினுடைய சக்திவாய்ந்த சரித்திரத்தின் கூடவே, யதார்த்த நிலையை ஏற்பதும் கூட, அதே அளவுக்கு அவசியமான ஒன்று. இந்தக் கட்டிடம் கட்டி, இப்போது கிட்டத்தட்ட, 100 ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. கடந்த தசாப்தங்களிலே, அப்போதைய தேவைகளை மனதில் கொண்டு இதை, தொடர்ந்து மேம்படுத்தி வந்தார்கள்.
இந்தச் செயல்பாட்டிலே, எத்தனையோ முறை, சுவர்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன, சில வேளைகளில் புதிய ஒலியமைப்புகள், தீயிலிருந்து பாதுகாக்கும் அமைப்புகள், சில சமயம் ஐடி அமைப்புகள். மக்களவையில் அமர்வதற்கான இடத்தை அதிகரிக்க வேண்டி, சுவர்கள் கூட அகற்றப்பட்டிருக்கின்றன.
இத்தனை எல்லாம் நடந்த பிறகு, நாடாளுமன்றத்தின் இந்தக் கட்டிடம், இப்போது, ஓய்வு பெற வேண்டி நிற்கிறது. இப்போது, மக்களவைத் தலைவர் கூட சொல்லிக் கொண்டிருந்தார்….. அதாவது எந்த வகையில், பல ஆண்டுகளாக, இடர்கள் நிறைந்த நிலை இருந்து வந்திருக்கிறது, பல ஆண்டுகளாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான தேவை, உணரப்பட்டு வந்திருக்கிறது என்று.
இந்த நிலையிலே, நம்மனைவரின் கடமை என்னவென்றால், அதாவது 21ஆம் நூற்றாண்டின் பாரதத்திற்கு, இப்போது ஒரு, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கிடைக்க வேண்டும் என்பதே. இந்தத் திசையிலே தான், இன்று, இந்த சுப ஆரம்பம் ஆகி இருக்கிறது. அந்த வகையிலே, இன்று நாம், ஒரு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின், நிர்மாணத்தைத் தொடங்கும் வேளையிலே, தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் இருப்புடன், மேலும் ஆயுளையும் நாம் இணைக்கிறோம்.
நண்பர்களே, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திலே, பல புதிய விஷயங்கள் இணைக்கப்பட இருக்கின்றன, இதனால் அவை உறுப்பினர்களின், திறன் மேம்பாடு அதிகரிக்கும், அவர்களுடைய பணிக்கலாச்சாரத்தில், நவீன வழிமுறைகள் அறிமுகமாகும். இப்போது எடுத்துக்காட்டாக, நம்முடைய அவையுறுப்பினர்களை, சந்திக்க வேண்டி, அவர்களுடைய தொகுதியைச் சேர்ந்த மக்கள் வருகிறார்கள்.
ஆனால் இப்போது இருக்கும் நாடாளுமன்றக் கட்டிடத்தில், இதிலே மக்களுக்கு பல சிரமங்கள் இருந்து வருகிறது. பொதுமக்களுக்கு சிரமங்கள் குடிமக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. வரும் பொதுமக்கள், தங்களுடைய சிரமங்களை, தங்களுடைய பிரதிநிதியிடம் தெரிவிக்க வேண்டும். தங்களுடைய சுகதுக்கங்களைப் பகிர வேண்டும், இந்த விஷயத்துக்கும் கூட, நாடாளுமன்றக் கட்டிடத்திலே இடப்பற்றாக்குறை சிரமங்கள் உணரப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்திலே, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரிடத்துக்கும், ஏற்படவிருக்கும் வசதி காரணமாக, அவர் தன்னுடைய தொகுதி மக்களுடன், இங்கே அருகிலேயே கூட இந்த….. விசாலமான பரந்துபட்ட வளாகத்திலேயே, ஒரு அமைப்பு ஏற்படும், இதன் வாயிலாக அவர்கள் தங்கள் தொகுதியைச் சேர்ந்த மக்களுடன், அவர்களுடைய சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
நண்பர்களே, பழைய நாடாளுமன்றக் கட்டிடம் தான், சுதந்திர பாரத நாட்டிற்கு திசையமைத்துக் கொடுத்தது. அதே வேளையில் புதிய கட்டிடம், தற்சார்பு பாரதத்தினுடைய நிர்மாணத்தின் சாட்சியாக விளங்கும். பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திலே, தேசத்தின் தேவைகள் நிறைவு செய்யப்படப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் புதிய கட்டிடத்திலே, 21ஆம் நூற்றாண்டு பாரத நாட்டின், எதிர்பார்புகள் நிறைவு செய்யப்படும்.
எப்படி இன்று, இண்டியா கேட்டிற்கு முன்பாக, தேசிய போர்நினைவுச் சின்னம், தேசிய அடையாளமாக விளங்குகின்றதோ, இதைப் போலவே, நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம், தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாக அளிக்கும். தேசத்தின் மக்கள், இனிவரும் தலைமுறையினர், புதிய கட்டிடத்தைப் பார்த்து, பெருமிதம் கொள்ளுவார்கள், இந்தக் கட்டிடம், சுதந்திர பாரதத்தில் அமைக்கப்பட்டது என்று. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை, நினைவில் நிறுத்தி இது நிர்மாணிக்கப்படவிருக்கிறது.
நண்பர்களே, நாடாளுமன்றத்தின் சக்தியின் ஊற்றுக்கண், இதன் ஆற்றலின் ஊற்றுக்கண், நம்முடைய ஜனநாயகம் தான். சுதந்திரமடைந்த வேளையிலே, எந்த வகையிலே, ஒரு ஜனநாயக நாடு என்ற முறையிலே, பாரதம் நிலைத்திருக்குமா என்ற, ஐயப்பாடுகள், மற்றும் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இவையும் வரலாற்றின் ஒரு அங்கம் தான்.
கல்வியறிவின்மை, எழ்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள், மற்றும், அனுபவமின்மை போன்ற, பல வாதங்கள் ஐயங்களோடு, வருமுன் கணிப்புகளும் வெளியிடப்பட்டன. அதாவது பாரதநாட்டிலே, ஜனநாயகம் தோல்வியைத் தழுவும் என்று. இன்று, நம்மால் பெருமிதம் பொங்கச் சொல்ல முடியும், அதாவது நமது தேசமானது, அந்த சந்தேகங்களை எல்லாம், தவறானவை என்பதை நிரூபித்ததோடு மட்டுமல்லாமல், 21ஆம் நூற்றாண்டு உலகம், பாரத நாட்டை, முக்கியமான ஜனநாயக சக்தியென்ற வகையிலே, முன்னேறி வருவதைப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றது.
நண்பர்களே, ஜனநாயகம் பாரத நாட்டிலே, ஏன் வெற்றி பெற்றது, ஏன் வெற்றியோடு இருக்கிறது, மேலும் ஏன் என்றும் ஜனநாயகத்திற்கு, சிதைவேதும் ஏற்படாது, இந்த விஷயத்தை, நமது தலைமுறையினர் அனைவரும் தெரிந்து புரிந்து கொள்வது, மிகவும் அவசியமான ஒன்று. நாம் பார்க்கிறோம் கேள்விப்படுகிறோம் இல்லையா? உலகத்திலே, 13ஆம் நூற்றாண்டிலே இயற்றப்பட்ட, மேக்னா கார்டா பற்றிய விவாதங்கள் நடைபெறுகின்றன. சில அறிஞர்கள், இதை ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும் கூட கூறுவார்கள். ஆனால், அதே அளவு மேலும் ஒரு விஷயமும் உண்மையானது.
அதாவது மேக்னா கார்டாவுக்கும் முன்பாக, 12ஆம் நூற்றாண்டிலேயே twelfth centuryயிலேயே கூட, பாரத நாட்டிலே, பகவான் பஸவேஸ்வருடைய, அனுபவ மண்டபம், தொடங்கப்பட்டு விட்டது. அனுபவ மண்டபம்….. என்ற வடிவத்தில் அவர், மக்கள் மன்றத்தை மட்டும் அவர் நிர்மாணிக்கவில்லை, மாறாக, அதன் நிர்வாகத்தையும் அவர் செப்பனிட்டுக் கொடுத்தார்.
அப்போது பகவான் பஸவேஸ்வர் அவர்கள் கூறினார், இந்த அனுபவ மண்டபம் என்ற மக்களவை, நாடினா மட்டு ராஷ்ட்ரதா, உன்னதி கே ஹாகு, அபிவிருத்தி கே, புர்காவ்கீ, கேஸா மாதத்தாகே. அதாவது, இந்த அனுபவ மண்டபம், எப்படிப்பட்ட மக்கள் மன்றம் என்றால், இது மாநிலம் மற்றும் நாட்டின் நலனுக்காகவும், மேலும் அவற்றின் மேம்பாட்டிற்காகவும், அனைவரையும், ஒன்றிணைந்து பணியாற்றத் தேவையான உத்வேகம் அளிக்கக் கூடியது. அனுபவ மண்டபம், ஜனநாயகத்தின் ஒரு வடிவமாகவே விளங்கியது.
நண்பர்களே, இந்தக் காலகட்டத்திலிருந்து இன்னும் சற்று பின்னோக்கிச் சென்றால், நம் தமிழ்நாட்டிலே, சென்னையிலிருந்து 75-80 கிலோமீட்டர் தொலைவில், உத்திரமேரூர் என்ற ஒரு கிராமத்திலே, ஒரு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாட்சியைக் காண முடியும்.
இந்த கிராமத்திலே, சோழர்கள் சாம்ராஜ்ஜியத்தின் போது, பத்தாம் நூற்றாண்டிலே, கற்பாறைகளிலே, தமிழ் மொழியில் எழுதப்பட்ட, பஞ்சாயத்து முறை பற்றிய விளக்கம் காணப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டிலே. இதிலே என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது தெரியுமா? அதாவது எப்படி, ஒவ்வொரு கிராமமும், குடும்பமாக வகைப்படுத்தப்பட்டது என்று.
அதை இன்றைய வழக்கிலே சொல்ல வேண்டுமென்றால், அதை வார்ட் என்று வகைப்படுத்தலாம். இந்தக் குடும்பங்களிலிருந்து, தலா ஒரு பிரதிநிதி என்று மகாசபைக்கு அனுப்பப்பட்டார்கள். இப்படித்தானே இன்றும் நடக்கிறது!! இந்தக் கிராமத்திலே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, செயல்படுத்தப்பட்ட மஹாசபையானது, இன்றும்கூட நிலுவையில் இருக்கிறது. மேலும் நண்பர்களே, ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, ஏற்படுத்தப்பட்ட இந்த ஜனநாயக அமைப்புமுறையிலே, மேலும் ஒரு விஷயம் மகத்துவம் வாய்ந்தது.
அந்தப் பாறையிலே என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? அந்த கல்வெட்டிலே விவரமாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதிலே என்ன எழுதியிருக்கிறது என்றால், மக்களின் பிரதிநிதி, தேர்தலில் போட்டியிடத் தகுதியானவர் அல்ல என்று அறிவிக்கவும் ஷரத்துக்கள் இருந்தன. அந்தக் காலகட்டத்திலே!!
ஷரத்துக்கள் என்ன? ஷரத்து என்னவென்றால், எந்த மக்கள் பிரதிநிதி, தனது சொத்து விவரத்தை அளிக்கவில்லையோ, அவரும், அவருடைய நெருங்கிய உறவினர்களும், தேர்தலில் போட்டியிட முடியாது. எத்தனை ஆண்டுகள் முன்பாக!!! சிந்தித்துப் பாருங்கள்!!! எத்தனை நுணுக்கமாக அந்தக் காலத்திலேயே, ஒவ்வொரு அம்சத்தையும் சிந்தித்திருக்கிறார்கள்!!! புரிந்து கொண்டிருக்கிறார்கள்!!! தங்களுடைய ஜனநாயக பாரம்பரியத்தின், அங்கமாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்!!!
நண்பர்களே, ஜனநாயகம் தொடர்பான நம்முடைய வரலாறு, தேசத்தின் அனைத்து மூலைகளிலும் ஒவ்வொரு இடத்திலும் பரவிக் காணப்படுகிறது. சில சொற்களோடு நமக்கு அதிக பரிச்சயம் இருக்கிறது. சபை, சமிதி, கணபதி, கணாதிபதி, இந்தச் சொற்கள் எல்லாம், நமது மனதிலும் புத்தியிலும், பல நூற்றாண்டுகளாகவே கலந்திருக்கிறது. பல நூற்றாண்டுகள் முன்பாக, சாக்யா, மல்லா, மற்றும் வேஜ்ஜி போன்ற குடியரசுகள் ஆகட்டும், லிச்வி, மல்லக், மரக், மற்றும் கம்போஜம் போன்ற குடியரசுகள் ஆகட்டும், அல்லது நமது, மௌரிய காலத்திலே, கலிங்கம் என அனைத்தும், ஜனநாயகத்தையே ஆட்சியின் அடித்தளமாக அமைத்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக அருளப்பட்ட நமது வேதங்களிலேயே, ரிக்வேதத்திலே, ஜனநாயகக் கருத்தியல்களை, சமஞானம், அதாவது, சமூக உணர்வு, collective consciousness என்ற கோணத்திலே பார்க்கப்பட்டது.
நண்பர்களே, பொதுவான வகையிலே, மற்ற இடங்களிலே ஜனநாயகம் பற்றிய விவாதங்கள் நடக்கும் போது, அதிகபட்சமாக, தேர்தல்கள், தேர்தல் வழிமுறைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அவற்றை அமைக்கும் முறைகள், நிர்வாகம் மேலாண்மை, ஜனநாயகத்தின் பொருள் இந்த விஷயங்கள் தொடர்பானதாகவே இருக்கின்றன. இது போன்றதொரு அமைப்பின் மீது, அதிக அழுத்தம் கொடுப்பதிலேயே, பெரும்பாலான இடங்களில், இதையே ஜனநாயகம் என்று அழைக்கின்றார்கள்.
ஆனால், பாரதநாட்டிலே, ஜனநாயகம் என்பது ஒரு அருட்சாதனம். பாரத நாட்டிற்கு, ஜனநாயகம் வாழ்கையின் ஒரு விழுமியம். உயிர்ப்புடைய இயக்கம். நாட்டின் உயிரின் ஆன்மா இது. பாரத நாட்டின் ஜனநாயகம், பல நூற்றாண்டுகள் அனுபவத்தில் மலர்ந்த ஒரு அமைப்பு முறை. பாரத நாட்டிற்கு, ஜனநாயகத்திலே, வாழ்க்கை மந்திரமும் உள்ளது, வாழ்க்கைத் தத்துவமும் உள்ளது, அது மட்டுமில்லாமல், அமைப்பு பற்றிய, வழிமுறையும் இருக்கிறது. தத்துவமும் உள்ளது வழிமுறையும் உள்ளது. அவ்வப்போது இதிலே, அமைப்புமுறைகள் மாற்றமடைந்தன. செயல்பாடுகள் மாற்றமடைந்தன, ஆனால், ஆன்மா, ஜனநாயகமாகவே இருந்து வந்துள்ளது. இதிலே முரணைப் பாருங்கள்!!
இன்று பாரதநாட்டின் ஜனநாயகத்தை, மேற்கத்திய நாடுகள் நமக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம், முழு நம்பிக்கையோடு, நமது ஜனநாயக வரலாறு பற்றி பரணி பாடினால், அந்த நாள் தொலைவில் இல்லை, அப்போது உலகமே புகழ்பாடும், உலகமே புகழ்ந்தேத்தும், India is mother of democracy. இந்தியா தான் ஜனநாயகத்தின் தாய்நாடு. India is mother of democracy என்று.
நண்பர்களே, பாரத நாட்டின் ஜனநாயகத்திலே, சமூகத்தின் சக்தி தான், நாட்டின் முன்னேற்றத்திற்கு புத்தாற்றல் அளித்து வருகிறது. நாட்டு மக்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்து வருகிறது. உலகத்தின் பல நாடுகளிலே, ஜனநாயகத்தினுடைய வழிமுறைகள் குறித்த, தனியானதொரு நிலை ஏற்படும் வேளையிலே, நம்முடைய பாரதத்திலே, ஜனநாயகம் நிதம் புதுப்பொலிவுடன் புலர்ந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் நாம் பார்த்திருக்கிறோம், பல ஜனநாயக நாடுகளிலே, இப்போது வாக்காளர் பங்கெடுப்பு, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. இதற்கு மாறாக, பாரத நாட்டிலே, நாம் ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்காளர் பங்கெடுப்பு பெருகி வருவதைக் கண்டு வருகிறோம். அதிகரித்து வருவதைக் காண்கிறோம். இதிலுமே கூட, பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கெடுப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 20.10
நண்பர்களே, இந்த பிடிப்பிற்கான, இந்த நம்பிக்கைக்கான காரணம், பாரத நாட்டிலே, ஜனநாயகம் என்றைக்கும் எப்போதுமே, ஆளுமையுடன் கூடவே, கருத்து வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் தீர்க்கும் வகையிலான, மகத்துவம் வாய்ந்த ஊடகமாகவும் இருந்திருக்கிறது.
பலதரப்பட்ட எண்ணப்பாடுகள், பலதரப்பட்ட அணுகுமுறைகள், இந்த விஷயங்கள் அனைத்தும், உயிர்ப்புள்ள ஒரு ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கின்றன. வேறுபாடுகளுக்காக, எப்போதும் இடம் இருக்க வேண்டும். ஆனால், விடுபட்டுப் போவது என்றும் இருக்கக்கூடாது. இதையே இலட்சியமாகக் கொண்டு, நமது ஜனநாயகம் முன்னேறி வந்திருக்கிறது. குருநானக் தேவ் அவர்கள், மிகவும் சிறப்பான ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார். குருநானக் தேவ் அவர்கள் என்ன கூறியிருக்கிறார் என்றால், जब लग दुनिया रयिये नानक, जब लग, दुनिया रयिये नानक्, किछु सुणिये, किछु कहिये.
அதாவது, என்றுவரை உலகம் இருக்கிறதோ அன்றுவரை, உரையாடல் நிகழ்ந்து கொண்டு தான் இருக்க வேண்டும். கொஞ்சம் சொல்வது, கொஞ்சம் கேட்பது, இது தானே உரையாடலின் சாராம்ஸம். இதுதான் ஜனநாயகத்தின் ஆன்மாவாகும். கொள்கைகளிலே வேறுபாடுகள் இருக்கலாம். அரசியலில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாம் பொதுமக்கள் சேவைக்காக இருக்கிறோம். இந்த முடிவான இலட்சியத்திலே, எந்தவிதமான கருத்து வேற்றுமைக்கும் இடமில்லை.
விவாதங்கள்-உரையாடல்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே நடக்கிறதோ, அல்லது நாடாளுமன்றத்துக்கு வெளியேவோ, நாட்டுப்பணி புரிய வேண்டும் என்ற உறுதி, நாட்டுநலன் குறித்த அர்ப்பணிப்புணர்வு, இடைவிடாமல், சுடர்விட்டு எரிய வேண்டும். அந்த வகையிலே, இன்றைய நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான அஸ்திவாரம் அமைக்கப்படும் போது, நாம் ஒரு விஷயத்தை மனதிலே கொள்ள வேண்டும்,
அதாவது நாடாளுமன்றத்தின், இருப்பிற்கான ஆதாரமான ஜனநாயகம், இதன் பொருட்டு, நம்பிக்கையுணர்வை விழிப்போடு வைத்திருப்பது, நம்மனைவரின் பொறுப்பாகும். நாம் என்றைக்குமே ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது நாடாளுமன்றம் வந்திருக்கும் பிரதிநிதிகள், பதில் சொல்லும் கடப்பாடு உடையவர்கள். இந்தக் கடப்பாடு, மக்களின் பொருட்டும் இருக்கிறது, மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் பொருட்டும் இருக்கிறது.
நம்முடைய அனைத்து முடிவுகளும், நாட்டுக்கே முதன்மை, Nation First, இந்த உணர்வை முன்னெடுத்தே அமைய வேண்டும். நம்முடைய ஒவ்வொரு தீர்மானத்திலும், நாட்டுநலனே தலையாயதாக இருக்க வேண்டும். தேசத்தின் உறுதிப்பாடுகளை நனவாக்க வேண்டி, நாம் ஒரே குரலில், ஒரே தரப்பில் நின்றுரைக்க வேண்டும், இது மிகவும் அவசியமான ஒன்று.
நண்பர்களே, நம் நாட்டிலே, ஆலய அமைப்பு நிர்மாணிக்கப்படும் போது, தொடக்கத்திலே, அதன் ஆதாரத்திலே, செங்கல்லும் கற்களுமே இடப்படுகின்றன. கலைஞர்கள் சிற்பிகள், அனைவருடைய உழைப்பின் பலனாக ஆலயம் எழுப்பப்படுகிறது. ஆனால், அந்த அமைப்பு, ஆலயமாக எப்போது ஆகிறது என்றால், அது எப்போது முழுமை பெறுகிறது என்றால், எப்போது அதிலே, பிராண பிரதிஷ்டை செய்யப்படும் போது தான். பிராண பிரதிஷ்டை ஆகாத வரையிலே, அது வெறும் கட்டிடமாகவே இருக்கிறது.
நண்பர்களே, புதிய நாடாளுமன்றக் கட்டிடமும் கூட, கட்டி முடிக்கப்பட்டு தயாராகி விடும். ஆனால், அதில் பிராணபிரதிஷ்டை செய்யாத வரை, அது வெறும் கட்டிடமாக மட்டுமே இருக்கும். ஆனால் இங்கே பிராணபிரதிஷ்டை, ஒரு விக்ரஹத்துக்கு நடைபெறாது. ஜனநாயகத்தின் இந்த ஆலயத்திலே, இதற்கான எந்த ஒரு வழிமுறைகளும் கிடையாது. விதிமுறைகளும் கிடையாது. இந்த ஆலயத்துக்கான பிராணபிரதிஷ்டை செய்பவர்கள், இங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு வரக்கூடிய, மக்கள் பிரதிநிதிகள்.
அவர்களுடைய அர்ப்பணிப்பு, அவர்களுடைய சேவையுணர்வு, இந்த ஆலயத்துக்கான பிராணபிரதிஷ்டையை நிறைவேற்றும். அவர்களுடைய நடத்தை, எண்ணங்கள், செயல்பாடுகள், இந்த ஜனநாயகத்தின் ஆலயத்திற்கான பிராணபிரதிஷ்டையைச் செய்யும். பாரதநாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை முன்னிட்டுப் புரியப்படும், அவர்களுடைய முயல்வுகள், இந்த ஆலயத்தின் பிராணபிரதிஷ்டைக்கான ஆற்றலமைத்துக் கொடுக்கும். மக்கள் பிரதிந்திகள் அனைவரும், தங்களுடைய அறிவு, தங்களுடைய திறமைகள், தங்களுடைய புத்தி, தங்களுடைய கல்வி, தங்களுடைய அனுபவம், முழுமையான வகையிலே, இங்கே அர்ப்பணிக்கும் போது, நாட்டுநலனில் அர்ப்பணிக்கும் போது, அவற்றால் அபிஷேகங்கள் செய்யும் போது, அப்போது, இந்தப் புதிய கட்டிடத்திற்கான பிராணபிரதிஷ்டை அரங்கேறும். இங்கே, ராஜ்யசபை என்ற மாநிலங்களின் அவை இருக்கின்றது,
இது எப்படிப்பட்ட அமைப்பென்றால், இது பாரத நாட்டின் கூட்டாட்சிக்கு பலம் சேர்க்கின்றது. நாடு நலம் பெற வேண்டும் என்றால், மாநிலங்கள் நலம் பெற வேண்டும். நாடு நலம் பெற வேண்டும் என்றால் மாநிலங்கள் நலம் பெற வேண்டும். நாடு உறுதிப்பட வேண்டும் என்றால், மாநிலங்கள் உறுதிப்பட வேண்டும். நாடு தழைக்க வேண்டும் என்றால், மாநிலங்கள் தழைக்க வேண்டும்.
இந்த அடிப்படையான கோட்பாட்டுடன் பணியாற்ற நாம், உறுதியேற்க வேண்டும். அடுத்தடுத்து வரவிருக்கும், தலைமுறையினர் அனைவரும், மக்கள் பிரதிநிதிகளாக நாளை வரும் போது, அவர்கள் உறுதிமொழி ஏற்கும் போது கூடவே, பிராணபிரதிஷ்டைக்கான மஹாவேள்விக்கான அவர்களுடைய, பங்களிப்பும் தொடங்கி விடும். இதனால் ஆதாயம், தேசத்தின் கோடானுகோடி மக்களுக்கு ஏற்படும். நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம், எப்படிப்பட்ட தவமியற்றும் இடமாக இருக்குமென்றால், இது நாட்டுமக்களின் வாழ்க்கையிலே, சந்தோஷத்தைக் கொட்டி முழக்கும் பணியை ஆற்றும். மக்கள் நலனில் பணியாற்றும்.
நண்பர்களே, 21ஆம் நூற்றாண்டு, பாரத நாட்டின் நூற்றாண்டாக இருக்க வேண்டும். இது தேசத்தின் மாமனிதர்களின், மகத்தான பெண்மணிகளின் கனவாக இருந்து வந்திருக்கிறது. நெடுங்காலமாகவே இதுபற்றிய சொற்களை நாம் கேட்டு வந்திருக்கிறோம்.
21ஆம் நூற்றாண்டு, பாரதத்தின் நூற்றாண்டாக எப்போது ஆகுமென்றால், பாரதநாட்டின் ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பாரதநாட்டை, அனைத்திலும் சிறந்ததாய் ஆக்குவதற்காக, தன்னுடைய பங்களிப்பை அளிக்கும் போது தான். மாற்றம் கண்டுவரும் இந்த உலகத்திலே, பாரத நாட்டிற்கு, வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அவ்வப்போது வாய்ப்புகளின் வெள்ளம் வந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
இந்த வாய்ப்புகளை எல்லாம் நாம், எந்த ஒரு நிலையிலும் எந்த ஒரு கட்டத்திலும், இந்த சந்தர்ப்பங்களை நாம், கைநழுவ விட்டு விடக்கூடாது. கடந்த நூற்றாண்டில் நாம் பெற்ற அனுபவங்கள், நமக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்போம், அந்த அனுபவப் பாடங்கள், நமக்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்துவதெல்லாம், இனிமேல், காலத்தை நாம் விரயம் செய்யக்கூடாது என்பதே. காலத்தை நாம், சிக்கெனப் பிடிக்க வேண்டும்.
நண்பர்களே, மிகப் பழமையான மகத்துவம்வாய்ந்த ஒரு விஷயம் பற்றி உரைக்க விரும்புகிறேன். 1897ஆண்டிலே eighteen ninety sevenஇலே, ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள், நாட்டுமக்களிடத்திலே, ஆயிரத்து எண்ணூற்று தொண்ணூற்று ஏழிலே கூறினார்……..
அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான, ஒரு அறைகூவல் விடுத்தார் அவர். அப்போது, ஸ்வாமிஜி என்ன கூறினார்? அடுத்து வரவிருக்கும் ஐம்பது ஆண்டுகள் வரை, பாரத அன்னையை ஆராதிப்பது தான் தலையாயதாக இருக்க வேண்டும். நாட்டுமக்களுக்கு அவர் இட்ட பணி இதுதான் பாரத அன்னையை ஆராதியுங்கள்.
நாம் அந்த மகானுடைய சொற்களின் சக்தியை நாம் கண்டோமில்லையா? இதற்கு சரியாக 50 ஆண்டுகள் கழித்து, 1947ஆம் ஆண்டிலே, பாரதநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. இன்றைய தினம், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் வேளையிலே, நமது நாடு, ஒரு புதிய உறுதிப்பாட்டிற்கான அடிக்கல்லையும் நாட்ட வேண்டும்.
ஒவ்வொரு குடிமகனும் புதிய உறுதிப்பாட்டிற்கான அடிக்கல்லினை நாட்ட வேண்டும். ஸ்வாமி விவேகானந்தரின், அந்த அறைகூவலினை, நினைவுபடுத்திக் கொண்டு, நாமனைவரும் இந்த உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். அந்த உறுதிப்பாடு என்ன? இந்தியாவுக்கே முதன்மை என்பது தான்.
பாரதம் முதன்மையானது. ஒன்றை மட்டுமே, நாம் ஒன்றை மட்டுமே, பாரதத்தின் மேன்மை, பாரதத்தின் வளர்ச்சியை மட்டுமே, நம் வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நம்முடைய ஒவ்வொரு முடிவும், தேசத்தின் பலத்தைப் பெருக்க வேண்டும். நமது ஒவ்வொரு தீர்மானமும், ஒவ்வொரு முடிவும், ஒரே தராசிலே நிறுக்கப்பட வேண்டும். அந்தத் தராசின் பெயர், தேசத்தின் நலனே பிரதானம். தேசத்தின் நலனுக்கே முதன்மை. நம்முடைய அனைத்து முடிவுகளும், தற்கால, மற்றும் எதிர்கால சந்ததிகளின் நலனுக்காக இருக்க வேண்டும்.
நண்பர்களே, ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள், 50 ஆண்டுகள் என்று உரைத்தார். நமக்கு முன்னால், 25-26 ஆண்டுகள் கழித்து, பாரத நாடு சுதந்திரம் அடைந்து, 100 ஆண்டுகள் நிறைவாகவிருக்கிறது. நமது நாடு, twenty forty sevenஇலே, இரண்டாயிரத்து நாற்பத்து ஏழிலே, தான் சுதந்திரம் அடைந்த நூறாம் ஆண்டிலே அடியெடுத்து வைக்கும், அப்போது நமது தேசம் எப்படி இருக்கும், நமது தேசத்தை எந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும், இந்த 25-26 ஆண்டுகளில் நாம் எப்படி உழைக்க வேண்டும்.
இதன் பொருட்டு நாம், இன்று உறுதிப்பாடு மேற்கொண்டு, பணியாற்றத் தொடங்க வேண்டும். நாம் இன்று, உறுதிப்பாடு மேற்கொண்டு, நாட்டுநலனைத் தலையாயதாகக் கருதி, பணியாற்றினோம் என்றால், தேசத்தின் நிகழ்காலம் மட்டுமல்ல, தேசத்தின் எதிர்காலத்தையும், நாம் சிறப்பானதாக ஆக்குவோம். தற்சார்பு பாரதத்தின் நிர்மாணம், தன்னிறைவு பாரதத்தின் நிர்மாணம், இனி தடைப்படப் போவதுமில்லை யாராலும் தடுக்கவும் முடியாது.
நண்பர்களே, பாரத நாட்டவர்களான நாம், உறுதி பூணுவோம். அதாவது நமக்கெல்லாம், நாட்டுநலனை விடப் பெரிய நலன் வேறேதும் இருக்க முடியாது என்று. பாரத நாட்டவர்களான நாம், உறுதி பூணுவோம், நமக்கெல்லாம், தேசம் பற்றிய சிந்தனையே, நம்மைப் பற்றிய சிந்தனையை விடப் பெரியதாக இருக்கும் என்று. பாரத நாட்டவர்களான நாம், உறுதி பூணுவோம், நமக்கெல்லாம், தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை விடவும், மற்றவையேதும் பெரிதல்ல என்று.
பாரத நாட்டவர்களான நாம், உறுதி பூணுவோம், நமக்கெல்லாம், தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமை, அதன் எதிர்பார்புக்களின் நிறைவு, வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியமாக இருக்கும் என்று. நாமெல்லாம், குருதேவ் ரவீந்திரநாத் டகோரின், ஒரு உணர்வை என்றைக்குமே நினைவில் கொள்ள வேண்டும். குருதேவ் ரவீந்திரநாத் டகோரின் உணர்வு என்னவாக இருந்தது?
குருதேவர் கூறுவதுண்டு….. ஏகாதோ உத்சாஹோ தரோ, ஏகோதோ, உத்சாஹோ தரோ, ஜாதியா உன்னதி தரோ, தூஷோ போபோனே, ஷோபே பரோகேர் ஜோய், அதாவது, ஒற்றுமை என்ற உற்சாகத்தை நிரப்ப வேண்டும். அனைத்துக் குடிமக்களும் உயர்வடைய வேண்டும், உலகம் முழுவதும் பாரதம் மீது வாழ்த்துப்பா பாட வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நமது நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம், நம்மனைவருக்குமே, ஒரு புதிய ஆதர்சத்தை அமைத்துக் கொள்ளும் உற்சாகத்தை அளிக்கும் என்று.
நமது ஜனநாயக வழிமுறைகளின் மீதான நம்பகத்தன்மை, எப்போதும், மேலும் வலுவடைந்து கொண்டிருக்க வேண்டும். இந்த விருப்பத்தோடு நான், எனது உரையை நிறைவு செய்கிறேன். மேலும் இரண்டாயிரத்து நாற்பத்து ஏழுக்கான உறுதிப்பாட்டோடு, நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும், முன்னேறிச் செல்ல அழைப்பு விடுக்கிறேன். உங்கள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.
- உரையின் தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன் (அகில இந்திய வானொலி, சென்னை)