
தருமபுரி அருகே பிரேக் பழுதான நிலையில், கண்டெய்னர் லாரி ஒன்று அடுத்தடுத்து 13 கார்கள் உள்பட 15 வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
தர்மபுரியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி, தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் சென்றது. தொப்பூர் மலைப்பாதையில் போலீஸ் குடியிருப்பு அருகே இறக்கத்தில் சென்ற போது, சோளத்தட்டை ஏற்றி வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் லாரியின் பின் புறத்தில் மோதியது. இந்த விபத்தால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதனால், தருமபுரியில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட வரிசையில் தேங்கின.
இந்நிலையில் ஆந்திராவில் இருந்து தருமபுரி வழியாக சிமெண்ட் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தொப்பூர் கணவாய் பாலத்தின் இறக்கத்தில் வந்த போது வாகனங்கள் தேங்கி நின்றதைக் கண்டு, லாரியின் வேகத்தைக் குறைக்க ஓட்டுநர் பிரேக்கை அழுத்தினார். ஆனால் சிமெண்ட் மூட்டைகளின் பாரம் அதிகமாக இருந்த நிலையில் இறக்கமான சாலையில் பிரேக் பிடிக்காமல் லாரி அதே வேகத்தில் சென்றுள்ளது.

இதைஅடுத்து கண் இமைக்கும் நேரத்தில், சாலையில் வாகன நெரிசல் காரணமாக நின்று கொண்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்கள் மீது லாரி மோதியது. இதனால் பதறிய ஓட்டுநர் லாரியை சாலையில் வலது பக்கவாட்டுச் சுவரில் மோதி நிறுத்த முயன்றதில் வலது புறத்தில் நின்ற கார்கள், லாரிக்கும் சாலைத் தடுப்புச் சுவருக்கும் இடையில் சிக்கி கடுமையாக சேதமடைந்தன.
இந்த கோர விபத்தில் 13 கார்களும் இருசக்கர வாகனம் ஒன்றும் உருக்குலைந்தன. விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 5 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்கள், கியா காரில் வந்த கோவையைச் சேர்ந்த நித்தியானந்தம் (35), பொலிரோ காரில் வந்த சேலத்தைச் சேர்ந்த மதன்குமார் (42), கார் டிரைவர் கார்த்தி (38) ஹோண்டோ பைக்கில் வந்த கண்ணன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக சுமார் 4 கி.மீ., தொலைவுக்கு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்து கிரேன்கள், ஜேசிபிகள் கொண்டு சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொப்பூர் கணவாய் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் இதற்கு தீர்வு காண்பதற்காக, நெடுஞ்சாலைத் துறையிடம் ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகா செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்