
நேபாள அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை (டிச. 20) இன்று நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரை செய்துள்ளது. பிரதமர் கே.பி. சர்மா ஓலி விடுத்த அவசரக் கூட்டத்தின் போது நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் பர்சமன் புன் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் குழு கலந்து கொண்டதாகக் கூறிய பர்சமன் புன், இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது என்றார்.
எப்படி இருப்பினும், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயங்காஜி ஸ்ரேஸ்தா, வேறு விதமாக கருத்தினை ஒலித்தார். பிரதமர் ஒலியின் முடிவை எதிர்த்து அவர் கூறிய போது, “இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள வில்லை. எனவே இந்த முடிவு அவசர அவசரமாக எடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விதிமுறைகளுக்கு எதிரானது. நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லும். அதை செயல்படுத்த முடியாது. ” என்று குறிப்பிட்டார்.
அண்மைய தகவல்படி, நேபாள பிரதமர் ஓலி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான பரிந்துரையுடன் ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.