பாரதியாரின் பிறந்த நாளில்: தினமணி முன்னாள் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் நினைவுகள்!

Published:

பாரதியார் பிறந்தநாள் இன்று. அவருடன் நெருங்கிப் பழகிய ‘தினமணி’ நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், தினசரி நாளிதழைத் துவக்கி நடத்தியவருமான தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் ஒரு பேட்டியில் கூறியது:

கடந்த, 1919ம் ஆண்டு ஆரம்பத்தில் தான், முதன் முதலில் நான் பாரதியாரைப் பார்த்தேன். அச்சமயம் தான், அவர், புதுச்சேரியை விட்டு வெளியே வந்தார். என் சகோதரரும், அவரும் நண்பர்களானதால், புதுச்சேரியை விட்டு பாரதியார் வெளியே வந்ததும், சில தினங்கள், எங்கள் வீட்டில் வந்து தங்கினார்.

பாரதியார், புதுச்சேரியில் இருந்தபோது, எழுதி வந்த கதை, கவிதை மற்றும் கட்டுரைகளையும் ஒழுங்காய் படித்து வந்தேன். அவர் நடத்தி வந்த, ‘இந்தியா’ என்ற பத்திரிகையில் வெளியான கருத்துப் படங்கள், என் மனதை பெரிதும் கவர்ந்தன.

பாரதியாரின் பெருமையைப் பற்றி பூரணமாய் அறியக்கூடிய வயது, அப்போது எனக்கு இல்லை. ஆனால், அவர் ஒரு பெரிய தேசபக்தர், புரட்சி வீரர் என்ற முறையிலேயே, அச்சமயம் அவரைக் கருதினேன். எனக்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுக்கும்படி, அவரிடம் கேட்டேன்.

மறுபேச்சு பேசாமல், ஒரு காகிதத்தை எடுத்து, தன் மணி மணியான எழுத்துக்களில், ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே…’ என்ற பாட்டை எழுதிக் கொடுத்தார். எதற்காக அந்தப் பாட்டைத் தேர்ந்தெடுத்தார் என, நான் கேட்கவில்லை. ஒருவேளை, அப்போது, என் வயதில் அந்தப் பாட்டு தான் எனக்கு அவசியம் என, அவர் நினைத்திருக்கலாம்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

 பாரதியார், தம்மோடு ஒரு வேலைக்காரப் பையனையும் அழைத்து வந்திருந்தார். அவன் சொந்தப் பெயர் என்ன என்பது, எனக்கு ஞாபகமில்லை. பாரதியார் அவனுக்கு, சமத்துவம் என்று பெயரிட்டிருந்தார்.

ஒரு நாள், எங்கள் வீட்டில் பாரதியாரும், சில நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தனர். எல்லாரும், நாற்காலியில் அமர்ந்திருந்தனர். சமத்துவம், ஏதோ வேலையாகப் சென்றுத் திரும்பியவன், கீழே உட்கார்ந்தான்.

பாரதியார் அவனைப் பார்த்தார். ‘அடே, சமத்துவம்… நாற்காலியில் உட்கார்…’ என்றார். அவன் நாற்காலியில் உட்காரத் துணியவில்லை; நடுங்கினான். பாரதி எழுந்து அவனைத் துாக்கி, நாற்காலியில் உட்கார வைத்தார். அவர் அப்படிச் செய்தது, மற்றவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றலாம்.

ஆனால், தம் கற்பனை உலகத்தில், எப்போதுமே லயித்துப் போயிருந்த பாரதிக்கு, அப்படித் தோன்றவில்லை. சமத்துவத்தை உருவகப்படுத்திய அவருடைய கவிதை உள்ளம், எல்லாருக்கும், எல்லா இடத்திலேயும் சமத்துவத்தையே கண்டது.

 ‘ஸ்டார் கம்பெனி’ என்ற பெயரில், நான் ஒரு கடை நடத்தி வந்தேன். ஒரு நாள் என் கடைக்கு வந்து, அங்குள்ள சரக்குகளைப் பாரதியார் பார்வையிட்டார். துணிகளைப் பார்த்த போது, ‘தம்பி… இந்த துணியில், ‘கோட்டு’ தைத்தால் எனக்கு நன்றாய் இருக்கும்…’ என்றார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

‘எதில் வேண்டுமானாலும் தைத்துக் கொள்ளுங்கள்…’ என்று சொல்லி, தையல்காரரைக் கூப்பிட்டு, தைக்கும்படி சொன்னேன்.

அந்த கோட்டுகள், தென்காசியை விட்டு அவர் புறப்படுகிற வரையாவது, அவரிடம் இருந்தனவா என்பது தெரியாது. அவர் சுபாவம் அப்படி; யார் கேட்டாலும், கொடுத்து விடுவார்.

என் கடையில் அன்று பேசிக் கொண்டிருந்தபோது, ‘தம்பி… எனக்கு ஒரு லட்ச ரூபாய் வேண்டும்…’ என்றார் பாரதியார்.

‘எதற்காக?’ என்றேன்.

‘என் கவிதைகளை அச்சிட்டு, புத்தகமாகப் போட வேண்டும். என் புத்தகங்களை, அமெரிக்காவில் அச்சிட வேண்டும். உலகத்திலேயே, அமெரிக்காவில் தான் சிறந்த முறையில் அச்சிடுகின்றனர்…’

‘அப்படியே இருந்தாலும் அதற்கு ஒரு லட்ச ரூபாய் வேண்டியிருக்குமா?’

‘ஐம்பது ஆயிரம் ரூபாய் அச்சுக் கூலி; இன்னும், 50 ஆயிரம் ரூபாய் சித்திரக்காரனுக்கு…’

‘சித்திரக்காரன் எதற்கு?’

‘என் பாட்டுகளுக்குச் சித்திரம் போட…’

அன்று, அவர் சொன்னது என் மனதில் பதிந்து போய் விட்டது. நான், பத்திரிகை உலகிற்கு வந்த பின், பாரதியார் பாடல்களுக்கு, எப்படியாவது சித்திரம் போட வேண்டும் என்றும் நினைத்தேன். 1925ல் வெளியான, ‘தமிழ்நாடு’ பொங்கல் மலரில், பாரதியார் பாட்டுக்கள் சிலவற்றுக்கு, சித்திரங்கள் போட ஏற்பாடு செய்தேன்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அதற்குப் பின், தமிழகத்தில் அந்த முறை வேகமாய்ப் பரவியது. அதைப் பார்ப்பதற்கு, பாரதியார் உயிரோடு இல்லாவிட்டாலும், அவருடைய ஆத்மா திருப்தி அடையும் என, நினைக்கிறேன்.

தொகுப்பு – ஆர்.சி.சம்பத் (தினமலர்)

Related articles

Recent articles

spot_img