
தாம் அவ்வளவு தூரம் உறுதி அளித்தும், தாம் மக்களிடம் சொன்னதைச் செய்ய முடியாமல் போனதால், நடிகர் ரஜினிகாந்த் கடுமையான மன உளைச்சலில் உள்ளார் என்றும், தன் மன அமைதிக்காக ஆன்மிக பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப் படுகிறது.
அடுத்தடுத்து ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் சரியான தலைமை ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இல்லாத சூழலில், தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே தாம் கட்சி தொடங்கி மக்களுக்காக ஆன்மிக அரசியலை நேர்மறை அரசியலை கொண்டு வர முடியும் என்று கூறினார் ரஜினி காந்த்.
ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது கட்சி தொடங்குவார் என்று கூறப் பட்ட நிலையில், தாம் சட்டமன்றத் தேர்தலின் போது கட்சி தொடங்குவதாகவும், போர் என்று வரும் போது வாளாவிருக்க மாட்டோம் என்றும் கூறினார் ரஜினி. ஆனால், இதுவரை அவர் கனவு கண்ட எழுச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை.
இந்த நிலையில், அவரது உடல் நிலை அரசியல் கட்சி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதால், மருத்துவர்கள் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தனர். இந்நிலையில், கொரோனா பரவல் அச்சத்தால் அரசியலில் நுழையும் முடிவில் இருந்து திடீரென பின்வாங்கினார் ரஜினி.
அரசியல் கட்சி தொடங்கப்படும், டிச.31ல் அறிவிப்பேன் என்று கூறிய ரஜினி, கட்சி தொடர்பான வேலையையும் ஒத்தி வைத்துவிட்டு, சினிமா படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றார். ஆனால் அந்த அண்ணாத்த படப்பிடிப்பில் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதை அடுத்து ரஜினிக்கும் சோதனை மேற்கொள்ளப் பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற போதும், ரத்த அழுத்த மாறுபாடு இருந்ததால், ஹைதராபாத்தில் அபல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தனது தனிக் கட்சி அரசியலையும் மூட்டை கட்டி வைத்தார். இருப்பினும், அவருக்கு தாம் தமது ரசிகர்களையும் நிர்வாகிகளையும் ஏமாற்றி விட்டோமோ என்ற கடுமையான சுய பச்சாதாபம் ஏற்பட்டு, மன உளைச்சலில் அவதிப்படுவதாகக் கூறப் படுகிறது.
இந்த நிலையில் ரஜினி வீட்டுக்கு, நமோ நாராயணா ஸ்வாமிகள் வந்துள்ளார். அவரை வரவேற்ற ரஜினிக்கு, ஸ்வாமிகள் ஸ்படிக மாலை அணிவித்து, ஆசிர்வதித்துள்ளார். இதை அடுத்து, தனது மன நிம்மதிக்காக ஓர் ஆன்மிக பயணத்தை அவர் மேற்கொள்ளக் கூடும் என்று கூறப் படுகிறது.