கரூர் மாவட்டத்தில் அரசினால் நிறைவேற்றப் பட்ட திட்டங்கள் குறித்த பிளக்ஸ் போர்டுகளை, கருப்பு சிவப்பு சேலைகளைப் போட்டு மூடி திமுக வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதற்கு செந்தில் பாலாஜியின் கட்டளையே காரணம் என்று கூறப் படுவதால், கரூர் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
அதிமுக.,வின் விளம்பரங்களை மறைத்து திமுக.வின் கொடிகளை நட்டு வைக்கும் முன்னாள் அதிமுக., காரரான செந்தில்பாலாஜி, இத்தகைய அராஜக அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர் கரூர் வாசிகள்.
தற்போதைய திமுக.,வில், முக்கியப்புள்ளியாக மாறிவிட்ட செந்தில் பாலாஜியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொங்கு மண்டலத்தினை பலப்படுத்த வந்தவர் என்றே பார்க்கிறார். அதனால், திருச்சி கே.என்.நேரு, வெள்ளக்கோயில் சாமிநாதன் ஆகியோரை எல்லாம் உதறித் தள்ளி விட்டு செந்தில்பாலாஜிக்கு அதிக இடம் கொடுக்கிறார் என்று கட்சியினர் குறை சொல்கின்றனர்.
குறிப்பாக, கொடைக்குரிசில் என்று பெயர் வைக்கப்பட்டவர் கேசிபி என்று அழைக்கப் பட்ட கேசி பழனிசாமி. அவரிடம் இருந்து அள்ளி அள்ளிப் பெற்று, தற்போது ஒன்றும் இல்லாமல் அவரை வாடகை வீட்டில் வசிக்க வைத்துள்ளடு திமுக.,! அவரைப் போன்றவர்களைக் கூட விட்டு விட்டு செந்தில் பாலாஜியே திமுக.,வின் வருங்காலம் என்று கூறி, அவரை நம்பி திமுக.,வின் ‘மக்கள் கிராம சபைக் கூட்ட’த்தினை நடத்தினர். ஆனால், அதில் எழுதிக் கொடுத்ததைக் கூட ஒழுங்காகக் கொடுக்கவில்லை என்கின்றனர் திமுக.,வினர்.
கரூர் அடுத்த வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திற்கு வந்த திமுக தலைவர் முதலில் செந்தில்பாலாஜியைப் பாராட்டினார்.
ஆனால், கிராம சபைக் கூட்டத்திற்கு மக்களை அழைத்து வராமல் கட்சி நிர்வாகிகளையே அதிக அளவில் அழைத்து வந்தார்களாம். மேலும், கட்சி நிர்வாகிகளில் மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டு, செந்தில்பாலாஜியுடன் திமுக வில் இணைந்தவர்களுக்கே முக்கிய பொறுப்பு கொடுக்கப் பட்டதாம். இதை மு.க.ஸ்டாலினிடம் பாதிக்கப் பட்டவர்கள் கூறியும், ஒன்றும் செய்யவில்லை என்கின்றனர்.
ஒரு பிரதான கட்சியின் தலைவர் அதுவும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு வரும் போது, நீதிமன்ற அறிவுரையின் படி, அரசு உத்தரவுக்கிணங்க பிளக்ஸ் புதிதாக எங்கும் வைக்காமல், அதிமுக.,வினர் ஏற்கெனவே வைத்திருந்த பிளக்ஸ் விளம்பரங்கள் மீதே, திமுக வினர் கருப்பு சிவப்பு சேலைகளைக் கொண்டு அந்த விளம்பரங்களை மறைத்துள்ளனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுவும் இல்லாமல், அங்கே நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கூவத்தூரில் நடந்த விவகாரம் மற்றும் ஜெயலலிதாவின் மரணம் ஆகியவைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசினார். இதற்கெல்லாம் முடிவு கட்ட நமது ஆட்சி வரும்… 4 மாதம் பொறுத்திருங்கள் என்று ஸ்டாலின் முத்தாய்ப்பாக கூறினார்.
ஆனால் ஸ்டாலின் பேசியதைக் கேட்டு, அருகில் இருந்த கட்சி மூத்த நிர்வாகிகளே வாய்விட்டு சிரித்துள்ளனர். அட… இப்போ இருக்காரே நம்ம மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி… அவர்கிட்டயே இதைப் பத்தி கேட்டுக்கலாமே! ஏன்னா… இரண்டும் நடந்த போது, அவரு அதே இடத்துல தான் சாட்சியா நின்னுக்கிட்டிருந்தாரு… என்று கமெண்ட் அடித்துள்ளனர்.
அதோடு, தமிழக போக்குவரத்துத் துறையில் ஊழல் என்று ஸ்டாலின் கூறியது கேட்டும் சிரித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தற்போதுள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 5 ஆண்டுகள் இருந்துள்ளார்… ஆனால் அதற்கு முன்னர் இருந்த 5 ஆண்டுகளும் நம்ம தற்போதைய மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தானே இருந்தார்… அவரை பக்கத்துலயே வெச்சிக்கிட்டு… அவரோட ஊழல் பத்தி பேசுற தில்லு நம்ம தலைவருக்கு தான் உண்டு என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர்.
மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் வரை, யாரும் அதாவது திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அவரை சந்திக்கக் கூடாது, என் பட்டியலில் இருப்பவர்கள் தான் ஸ்டாலிடம் பேசலாம்… அதுவும் நான் எழுதிக் கொடுத்ததைத் தான் பேச வேண்டும் என்று செந்தில் பாலாஜி கட்டளை இட்டதாகக் கூறுகின்றனர் திமுக., நிர்வாகிகள் சிலர்.
இவை எல்லாவற்றையும் விட, ஸ்டாலின் வந்து சென்ற இந்த நேரத்தில், மக்களிடம் பரபரப்பாகப் பேசப்படுவது… வழிநெடுகிலும் அதிமுக வினர் வைத்த சாதனை விளம்பரங்கள் மற்றும் வீடுகளில் மேல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ், கடைகளின் மேல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் ஆகியவற்றை கருப்பு சிவப்பு சேலைகளால் மறைத்தனர்.
இவை எல்லாவற்றையும் விட, கரூரில் எம்.ஆர்.வி டிரஸ்ட் என எம்.ஆர்.விஜயபாஸ்கரால் கானகத்திற்குள் கரூர் என்கின்ற திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட மரக்கன்றுகளையும் வாழை மரங்களையும் குட்டி வாழை மரங்கள் கொண்டு மறைத்து தங்கள் புத்தியைக் காட்டியுள்ளனர் திமுக.,வினர் என்கின்றனர் பொதுமக்கள்.
திமுக.,வினரின் இந்தச் செயல்களால், கரூரில் உள்ள ஜவுளிக்கடைகளில் கருப்பு சிகப்பு சேலைகள் அதிகம் விற்பனை ஆனதாம்! அதற்கும்கூட திமுக.,வினர் காசு கொடுத்தார்களோ இல்லையோ… என அங்கலாய்க்கின்றனர் கரூர் வாசிகள்.
இவற்றால் மனம் வெறுத்துப் போயுள்ள ‘நம் கட்சி, நம் இயக்கம் என்று தங்கள் வேலைகளில் குறியாக இருந்த’ மூத்த திமுக நிர்வாகிகள் எப்படி இருந்த திமுக.,வை, இப்படி கொண்டு வந்துட்டாரே இந்த செந்தில்பாலாஜி என்று முணுமுணுத்தனர்.
திட்டங்கள் எதுவும் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப் படவில்லை; அதிமுக., எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார் மு.க.ஸ்டாலின். ஆனால், அதிமுக.,வினால் மேற்கொள்ளப் பட்ட திட்டங்களின் விளம்பரங்கள் மேல் கருப்பு சிவப்பு சேலையை போட்டு மறைத்தது ஏன் ? என்று கேள்விக்கணைகளை தொடுத்துள்ளனர் கரூர் நகர மக்கள்!