
கொரோனா முடக்கத்தின் காரணமாக, தொழில்கள் சரியின்றி, வருவாய் இன்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக பொங்கல் பண்டிகைக்கு அரிசி கார்டு தாரர்களுக்கு ரூ. 2500 பொங்கல் பரிசுத் தொகையாக தமிழக அரசு வழங்குகிறது.
பொங்கல் பரிசுப் பொருள்களுடன் கடந்த வருடத்தில் ரூ. 1000 வழங்கப் பட்ட நிலையில், தற்போது ரூ.2,500 வழங்கப்படுவது, அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களைக் கவர்வதற்காக என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
அதே நேரம், தாங்கள் ரூ. 5000 கொடுங்கள் என்று சொன்னதாக திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் கூறினார். இருப்பினும், பொதுமக்களின் ஆதரவுக்காக, அனைத்துத் தரப்பினருமே பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500 வழங்குவதை வரவேற்றும் பாராட்டியும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பொங்கல் பரிசுப் பணம் பெறுபவர்கள், அதை டாஸ்மாக் கடைகள் மூலம் மீண்டும் அரசுக்கே கொடுத்து விடுவார்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம் போல் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது கருத்தை மெய்ப்பிக்கும் வகையிலும், அதை மேற்கோளிட்டும், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர், வாஞ்சி இயக்கத்தை நடத்தி வரும் பி.ராமநாதன், தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500 பணத்தை முதல்வர் பெயரில், டிடி., எடுத்து அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்.
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகே உள்ள திருமலையப்பபுரத்தைச் சேர்ந்த பி.ராமநாதன் (74) வாஞ்சிநாதன் பெயரில்`வாஞ்சி இயக்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர், ரேஷன் கடைக்குச் சென்றபோது, தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுப் பையுடன் பணமாக ரூ.2,500 கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்தப் பணத்தை அவர் பெற விரும்பவில்லை. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, தனது கோரிக்கையைக் கூறி, மாவட்ட ஆட்சியரிடமே திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் அவர், இதனைத் திரும்பப் பெற மறுத்ததுடன், இது குறித்து தாம் எதுவும் செய்ய இயலாது என்று மறுத்துவிட்டார்.

இதை அடுத்து, முதல்வர் பெயரில் ரூ.2500க்கு டிடி., எடுத்து, ஒரு வேண்டுகோளையும் முன்வைத்து, இந்தப் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளார்!
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்குகிறது. இந்தத் தொகை முழுமையாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு மட்டும் பயன்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஊதாரித்தனமான செலவுகளுக்கு அல்லது மதுக் கடைகள் வழியாக மீண்டும் தமிழக அரசுக்கே சென்றடையலாம். அதற்குப் பதிலாக ரேஷன் கடைகளில் முன்பு வழங்கப்பட்டு, தற்போது வழங்கப்படாமல் இருக்கும் உளுந்தம் பருப்பு போன்ற உணவுப் பொருட்களை மாதந்தோறும் விலையின்றி வழங்கலாம்.
இதனால் வீட்டில் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர். மேலும், இந்தியாவிலேயே ரேஷன் பொருள்களை விலையின்றி வழங்கும் மாநிலம் என்ற பெருமையும் தமிழக அரசுக்குக் கிடைக்கும். இப்போது அந்த நிலை இல்லாததால் தமிழக அரசு பொங்கல் பரிசாக வழங்கும் 2,500 ரூபாயை பெறுவது எனக்கு மிகவும் நெருடலாகவும் உறுத்தலாகவும் இருக்கிறது. அதனால் அந்தப் பணத்தை தமிழக அரசிடமே திருப்பிக் கொடுக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.