
இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகளுக்கு, சமையல் காஸ் சிலிண்டர் பதிவு செய்த உடனே, ‘டெலிவரி’ செய்யும் திட்டத்தை துவக்க உள்ளது.
தமிழகத்தில், பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ‘
‘ரிட்டர்ன்’அந்நிறுவனம், ஏஜன்சி ஊழியர்கள் வாயிலாக, தினமும் சராசரியாக, 2.50 லட்சம் காஸ் சிலிண்டர்களை, டெலிவரி செய்கிறது. வாடிக்கையாளர்கள், ஒரு சிலிண்டர், இரண்டு சிலிண்டர் பிரிவில், காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். ஒரு காஸ் சிலிண்டரின் எடை, 14.20 கிலோ. இரு சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளவர்கள், பயன்படுத்தி வரும் சிலிண்டர் தீர்ந்து விடும் முன், பதிவு செய்வர்.
சிலிண்டர் திடீரென தீர்ந்து விட்டாலும், ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும், இரண்டாவது சிலிண்டரை பயன்படுத்துவர். ஏஜன்சி ஊழியர்கள், காலி சிலிண்டரை, ‘ரிட்டர்ன்’ எடுத்து விட்டு, புதிய சிலிண்டர் டெலிவரி செய்வர்.
இதனால், ஒரு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், திடீரென காஸ் தீர்ந்து விட்டால், அவர்கள் பதிவு செய்தாலும், மறுநாள் தான் சிலிண்டர் கிடைக்கும்.
இதனால், அவர்கள் சமைக்க சிரமப்படுவார்கள். இதையடுத்து, இந்தியன் ஆயில், ‘தத்கல்’ எனப்படும், விரைவு டெலிவரி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் பதிவு செய்த உடனே, டெலிவரி செய்யப்படும். இதனால், அடுத்த நாள் வரை காத்திருக்க தேவையில்லை. இதற்கு, கட்டணம் வசூலிக்கப்படலாம் என, தெரிகிறது