
ரஜினி மக்கள் மன்றத்தினர் தாங்கள் ராஜினாமா செய்துவிட்டு எந்தக் கட்சியிலும் போய்ச் சேரலாம் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், தாம் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். இதை அடுத்து, அவரது ரசிகர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரில், உறுப்பினர்களை புதிய கட்சியில் சேர்வதற்காக சேர்க்கத் தொடங்கினர். ஒரு வார்டுக்கு 15 பேர் என்ற அளவில் உறுப்பினர்களைச் சேர்க்க முனைப்புடன் இருந்தனர்.
ஆனால், திடீரென புதிய அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து ரஜினி பின்வாங்கினார். இதனால், அரசியல் ஆசையில் இருந்த ரஜினியின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
ரஜினி மக்கள் மன்றத்திலும், ரஜினி தொடங்கும் புதிய அரசியல் கட்சியிலும் திமுக.,வின் ரகசிய சதியும், திட்டமிடலும் உண்டு என்று ஏற்கெனவே கூறப் பட்ட குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பது போல், ரஜினியின் முடிவால் ஏமாற்றம் அடைந்திருப்பதாகக் கூறி, ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த சிலர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக.,வில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் நேற்று திமுக.,வில் இணைந்தனர். இது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பலரும் தாங்கள் இன்னமும் ரஜினி ரசிகர்கள் தான் என்றும், முதுகில் குத்துபவர்கள் இல்லை என்றும் டிவிட்டர், பேஸ்புக் என கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில்… ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்காமல் போனதில், திமுக., மற்றும் மாறன் சகோதரர்கள் சதி உள்ளது என்றும், ரஜினிக்கு நெருக்கமாக இருக்க திமுக., தன் பி டீம் ஒன்றை அனுப்பியது என்றும், திமுக., மிரட்டியதால்தான் ரஜினி திடீரென கட்சி தொடங்காமல் பின்வாங்கினார் என்றும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப் பட்ட நிலையில், தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள சிலர் திமுக.,வில் நேரடியாகவே இணைந்து வருவது அந்த குற்றச்சாட்டுகளை உண்மை ஆக்குவதாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.