மீண்டும் சசிகலா அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று இரவில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டத்தன் காரணமாக அவசர வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
முன்னதாக, பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, சசிகலாவுக்கு RAPID பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில், ஆக்சிஜன் உதவியுடன் பெங்களூரு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையளிக்கப்படுகிறது என மருத்துவர் மனோஜ் கூறினார். சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், தொடர்ந்து மருத்துவ சிகிச்கைகள் தேவைப்படுவதாகவும் மனோஜ் தகவல் கூறினார்.
இதனிடையே, ஜனவரி 27-ல் சிறையில் இருந்து விடுதலையாகவிருந்த நிலையில் சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவரது தம்பி திவாகரன் கூறினார். சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில் சிறையில் சரியான சிகிச்சை தரவில்லை என திவாகரன் குற்றம் சாட்டினார். நேற்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
பரப்பன அக்ரஹா சிறை மருத்துவமனையில் சாதாரண எக்ஸ்ரே மட்டுமே எடுத்து பார்த்துள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிடி ஸ்கேன் எடுக்க கோர்ட் அனுமதி தேவை என்கிறார்களென அவர் குற்றம் சாட்டினார்.
சிறையிலிருந்து சசிகலா 27-ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் சரியாக சிகிச்சை தராமல் தாமதப்படுத்துகின்றனர். எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்து வருகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள், தற்போது பணம் எதுவரை பாய்ந்தது என தெரியவில்லை! மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்… என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இருப்பினும், நேற்று இரவே அவருக்கு சிகிச்சை முடிந்து அனுப்பப் பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் அவசர வார்டுக்கு மாற்றப்பட்டார்.