
ரிமோட் வாக்கு செலுத்தும் முறை குறித்து விரைவில் சோதனை நடக்கவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் இன்று தேசிய வாக்காளர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் நடந்த இதுதொடர்பான நிகழ்வில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ரிமோட் முறையில் வாக்களிப்பது பற்றி ஆய்வு நடந்து வருவதாக குறிப்பிட்டார். இந்த நடைமுறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, விரைவில் இதுதொடர்பான சோதனை நடக்கும்” என்று கூறினார்.
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் வாக்காளர் தேர்தலன்று தனது சொந்த ஊரிலுள்ள வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
தான் இருக்கும் அல்லது பணிபுரியும் இடத்தில் இருந்தே சொந்த தொகுதியில் வாக்கு செலுத்தும் வசதியை அது உருவாக்கும். இதற்காக சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இணைந்து தேர்தல் ஆணையம் பணியாற்றி வருகிறது.

இதுபற்றி விளக்கிய முன்னாள் தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷனர் சந்தீப் சக்சேனா, “உதாரணமாக மக்களவைத் தேர்தலில் சென்னை வாக்காளர் ஒருவர் தில்லியில் வசிக்கிறார் எனில், அவர் வாக்களிப்பதை தவிர்க்கவோ அல்லது வாக்களிப்பதற்காக சொந்த தொகுதிக்கு திரும்பவோ தேவையில்லை.
அதற்கு பதிலாக தேர்தல் ஆணையம் தில்லியில் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சொந்த தொகுதிக்கான வாக்கை செலுத்தலாம்” என்று தெரிவித்தார்