
அமெரிக்காவில் ரோஸா என்ற பெண் 20 ஆண்டுகளாக குடியிருப்பு ஒன்றில் துப்புரவு பணியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை இழந்த ரோஸா வருமானம் இல்லாமல் தனது சகோதரி வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
இதனை அறிந்து கொண்டு குடியிருப்புவாசிகள் ரோஸாவுக்கு உதவி செய்ய எண்ணினர். அவரை குடியிருப்புக்கு வரவழைத்தனர். தூய்மை பணிக்காக அழைக்கின்றனர் என்று நினைத்து ரோஸா சீருடை, சுத்தம் செய்யும் உபகரணங்களுடன் வந்தார்.
வந்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. குடியிருப்புவாசிகள் அனைவரும் சேர்ந்து ரோஸாவுக்கு 2400 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டை சுற்றிக்காட்டினர். அந்த வீட்டைதான் சுத்தம் செய்ய வேண்டும் என ரோஸா நினைத்தார்.
ஆனால் ரோஸாவுக்கு அந்த வீட்டை இரண்டு வருட குத்தகைக்கு குடியிருப்புவாசிகள் வாங்கிக் கொடுத்துள்ளனர். இதை எதிர்பார்க்காத ஆச்சர்யத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.