
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
மூடன் யார்?
ஸ்லோகம்:
1.ஸ்வமர்தம் ய: பரித்யஜ்ய பரார்தமனுதிஷ்டதி !
மித்யாசரதி மித்ரார்தே யஸ்ச மூட: ஸ உச்யதே !!
- சம்சாரயதி க்ருத்யானி சர்வத்ர விசிகித்ஸதே !
சிரம் கரோதி க்ஷிப்ரார்தே ஸ மூடோ பரதர்ஷப !! - அனாஹூத: ப்ரவிசதி அப்ருஷ்டோ பஹு பாஷதே !
அவிஸ்வஸ்தே விஸ்வசிதி மூடசேதா நராதம: !!
- மகாபாரதம்.
பொருள்:
மூடனின் குணங்களை விதுரர் இவ்வாறு விளக்குகிறார். தன் வேலையை விட்டுவிட்டு வீணாக பிறர் வேலையில் ஈடுபடுவான். நண்பனுக்கு உதவுகிறேன் என்று கூறிக் கொள்வான்.
செய்ய வேண்டிய வேலைகளை காரணமின்றி தள்ளிப் போடுவான். எப்போதும் சந்தேகப்படுபவனாக இருப்பான். விரைவில் முடிக்கக்கூடிய பணியை தாமதமாகச் செய்வான். கேட்காவிட்டாலும் அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவான். தன்னை நம்பாதவர்களைக் கூட நம்புவான்.
விளக்கம்:
மகாபாரதத்தில் ஒரு கட்டம். இரவு உறக்கம் வராமல் திருதராஷ்டிரன் விதுரரை வரவழைத்து நல்ல வார்த்தைகள் கூறச் சொல்லி கேட்கிறான்.
அந்த குருட்டு அரசனுக்கு பல சுபாஷிதங்களை விவரித்துக் கூறுகிறார் விதுரர். அவற்றுள் அறிஞர்களின் குணநலன்களை விவரித்தபின் முட்டாள் யார் என்பது பற்றி சுமார் 15 ஸ்லோகங்களில் விவரிக்கிறார். அவற்றில் சில இவை.
இந்த தீய குணங்கள் உள்ளவன் அறிவிலி, மூடன் என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்த குணங்கள் நம்மில் துளி இருந்தாலும் கவனமாக கண்காணித்து அவற்றை விலக்கிக் கொள்வதே புத்திசாலிகள் செய்ய வேண்டிய பணி.