
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர்…
கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி ஓட்டலுக்கும் புகுந்து உதவி காவல் ஆய்வாளர் லத்தியால் தாக்கியதால் ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், காவல் உதவி ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளின்படி ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி ஓட்டல்கள், தேனீர் கடைகள், சினிமா தியேட்டர்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு 11 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க உத்தரவிடப் பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் பகுதியில், மோகன்ராஜ் என்பவர் ஸ்ரீ ராஜா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல், தமிழக அரசின் உத்தரவுப்படி செயல்படுவதாகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதாகவும், இரவு 11 மணி வரை செயல்படுவதாகவும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு 10.20க்கு ஓசூரில் இருந்து வந்த பயணிகள் மிகவும் பசிக்கிறது என்று கூறியதை அடுத்து, அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டிருக்கிறது. ஓட்டல் ஷட்டர் பாதி அடைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த காட்டூர் காவல் நிலைய எஸ்ஐ முத்து, ஓட்டலின் உள்ளே நுழைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில், ஒரு பெண்ணுக்கு தலையிலும், ஒருவருக்கு கையிலும் என காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, காவல்துறை ஆணையாளரிடம் ஓட்டல் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் உதவி ஆணையர் சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் காட்டூர் எஸ்ஐ முத்து கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார். ஓட்டலுக்குள் புகுந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வைரலாகி வருகின்றன.