தற்போது வரை உலகில் 58 கோடியே 85 லட்சத்து 96 ஆயிரத்து 904 பேர், அதாவது உலகின் மொத்த மக்கள் தொகையில் 7.5 விழுக்காடு மக்கள் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் இதுவரை 12 கோடியே,38 லட்சத்து 11 ஆயிரத்து 908 பேர், அதாவது 10.6 விழுக்காடு பேர் முதல் தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கின்றனர். மற்றவர்களை விட மிக குறைந்த காலத்தில் இந்த இலக்கை நாம் எட்டியுள்ளோம்.
அதே போல், உலகில் இதுவரை 26 கோடியே 20 லட்சத்து 26 பேர் (3.3%) இரண்டாவது தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் 2 கோடியே 54 லட்சத்து 56 ஆயிரத்து 864 பேர் (2.2%) பேர் செலுத்தி கொண்டிருக்கின்றனர். விரைவில் உலக சராசரியை விட அதிகம் செலுத்துவோம். நமக்கு முன்னாலேயே சில நாடுகள் தடுப்பூசி செலுத்த தொடங்கியதே இதற்கு காரணம்.
உற்பத்தி, காலாவதி மற்றும் செலுத்தும் திறனை கணக்கில் கொண்டு, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை என்று வயதின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், விளைவுகள் குறித்து எதையும் சிந்திக்காமல் மக்களின் உணச்சிகளை தூண்டும் விதமாக அனைவருக்கும் உடனே செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன எதிர்க்கட்சிகள்.
மத்திய அரசின் திட்டமிடலை தவிடு பொடியாக்க வேண்டுமென்ற சிறுபிள்ளைத்தனமான உள்நோக்க அரசியலால் குழப்பமே உருவானது. ஆனாலும், பதட்டத்தை தணிக்கும் வகையில் 18 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கும் தடுப்பூசிக்கு அனுமதி தந்த மத்திய அரசு, அதன் நோக்கம் நிறைவேற, மாநில அரசுகளும், தனியார் தடுப்பூசி மையங்களும் தடுப்பூசியை பெற்று மக்களுக்கு செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,மீண்டும் மத்திய அரசே தடுப்பூசியை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைப்பது முறையல்ல.
மேலும், இதுவரையில் இருந்த தடுப்பூசி திட்டங்களுக்கும் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. மற்றவை நீண்ட காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டன. ஆனால், கொரோனா விவகாரத்தை பொறுத்த வரையில், குறுகிய காலகட்டத்தில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மாநில அரசுகளின் சுகாதார கட்டமைப்பு மற்றும் தனியாரின் பங்களிப்பில்லாமல் அதை குறித்த நேரத்தில் நிறைவேற்ற முடியாது.
ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தவறான விமர்சனங்களை செய்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உற்பத்தி, சேமிப்பு, செயல்படுத்தும் இயந்திரம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறே செலுத்த முடியும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் அல்லது புரிந்தும் வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளை தூண்டி விடும் மனப்பான்மையோடு அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவது முறையல்ல.
எதிர்க்கட்சிகள் மக்களின் பதட்டத்தை அதிகரிக்க செய்வது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, மக்கள் விரோத செயலும் கூட.
- நாராயணன் திருப்பதி.
செய்தி தொடர்பாளர், பாஜக.