
தமிழகத்திலேயே சீன வைரஸ் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். அவர் ஆய்வு நடத்தும் இன்னாளில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.
கடந்த சில நாட்களாக சென்னையைக் காட்டிலும், கோவையில் சீன வைரஸான கொரோனாவின் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கு மாநில அரசின் பாராமுகம் தான் காரணம் என்று கூறப்பட்டது. கோவை பகுதியை மாநில அரசு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கோவை திருப்பூர் ஈரோடு சேலம் ஆகிய பகுதிகளை அடக்கிய கொங்கு நாடு பகுதியில் திமுக வெற்றி பெறவில்லை என்பதால், திமுக அரசு அந்த பகுதிகளை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை ஆமோதிப்பது போல் கோவை பகுதியில் தடுப்பூசி இல்லை என்றால் பிரதமர் மோடியிடம் கேளுங்கள் என்று திமுகவை சேர்ந்த நபரொருவர் பகிரங்கமாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை பகுதியில் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது. இதனை தனது டிவிட்டர் பதிவில் நேற்று ஸ்டாலினும் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார் ஸ்டாலின். பின்னர் அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான பணி உத்தரவுகளை ஸ்டாலின் வழங்கினார். இரண்டு மாவட்டங்களில் ஆய்வு முடிந்து 12:30 மணி அளவில் கோவை வந்தார் மு.க.ஸ்டாலின்..
அங்கு, கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வர மண்டலத்துக்கு 10 வீதம் 50 கார்கள் இயக்கப்படும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக், மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார் ஆம்புலன்ஸை சேவையை தொடங்கி வைத்தார்.
கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கவச உடை அணிந்து கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார். வெளியே வந்தவரிடம் பொது மக்கள் புகார் மனு அளித்தனர். அதனை ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து தமது டிவிட்டர் பதிவிலும் தெரிவித்தார் ஸ்டாலின்…
ஈரோடு – திருப்பூரில் #COVID19 சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத் திறந்து வைத்து, தற்காலிக பணியாளர் நியமனத்திற்கான ஆணைகளையும் வழங்கினேன்.
கார் ஆம்புலன்ஸ் சேவை வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது.
தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் மாவட்டங்களில் அரசு தனிக்கவனம் செலுத்துகிறது.
இதனிடையே இன்று ஸ்டாலின் கோவை வருவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் கோபேக்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக்கப்பட்டது ஒட்டுமொத்தமாக கோவை மண்டலத்தை புறக்கணிக்கும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் இதனை டிரென்ட் செய்தனர் சமூக வலைதள வாசிகள்!
இந்த டிவிட்டர் ஹேஷ்டேக் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிவிட்டரில் இன்றைய ட்ரென்டிங் டாபிக்கில் பிரதான இடத்தை பிடித்த இந்த ஹேஷ்டேக், மதியம் ஒரு மணி வரை 2 லட்சம் கடந்து முதலிடத்தில் இருந்தது
